படக்குறிப்பு, ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது
யுக்ரேன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது.
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமரால் நடத்தப்படும் இந்த உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றாலும், இதற்கு முன்னதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு இதற்கான முக்கியத்துவத்தை கூட்டியிருக்கிறது.
யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், ஐரோப்பிய நாடுகளின் வாய்ப்புள்ள பங்களிப்பு என்ன? மற்றும் அமெரிக்காவுடன் இந்த நாடுகளின் உறவு என்னவாக இருக்கும் என்பவை விவாதிக்கப்பட வாய்ப்புள்ள அம்சங்களாக கருதப்படுகின்றன.
இந்த மாநாட்டை நடத்தும் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், ஐரோப்பிய தலைவர்களை வரவேற்றார்.
கூட்டத்தில் பேசிய அவர் , “ஐரோப்பாவின் பாதுகாப்புக்காக தலைமுறையில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு” என குறிப்பிட்டார்.
யுக்ரேனில் அமைதி நிலவச் செய்யும் முடிவுகள் ஐரோப்பிய கண்டம் முழுவதும் உள்ள நாடுகளின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் ஸ்டாமர் கூறினார்.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களில் சிலர்
“போரை நிறுத்துவதற்கான ஒரு திட்டத்தை யுக்ரேனுடன் இணைந்து உருவாக்கிய பின், தங்களில் சிலர் அமெரிக்காவுடன் அதை விவாதித்து, முன்னோக்கி எடுத்துச் செல்வதாக ஒப்புக் கொண்டுள்ளோம்.” எனவும் கியர் ஸ்டாமர் கூட்டத்தில் பேசினார்.
ரஷ்யா அமைதியைப் பற்றி பேசினாலும் கூட, அவர்கள் தங்களின் இடைவிடாத ஆக்கிரமிப்பை தொடர்கின்றனர் என குற்றம் சாட்டிய ஸ்டாமர், அனைவரின் நலன் என்ற நோக்கத்தால் கிடைக்கும் வலிமையின் மூலம் அமைதியை வழங்க வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் என கூறினார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ரஷ்யா அமைதியை பேசினாலும் கூட, அவர்கள் தங்களின் இடைவிடாத ஆக்கிரமிப்பை தொடர்கின்றனர் – கியர் ஸ்டாமர்
“பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டும்”
மாநாட்டுக்கு முன்னதாக தமது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நேட்டோ தலைவர் மார்க் ரூட், உச்சி மாநாட்டில் மூன்று விஷயங்களை எதிர் நோக்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
யுக்ரேனை ஆதரிப்பதற்காக “ஐரோப்பாவில் உள்ள அனைவரும் அதிகமாகக் கொடுக்க வேண்டும்”
“நாம் அனைவரும் ஒரு சமாதான ஒப்பந்தத்தை விரும்புகிறோம், அது நீடித்திருக்க வேண்டும்”
நேட்டோவை வலிமையாக வைத்திருக்க, ஐரோப்பா பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கும் எனவும் ரூட் உறுதியளித்துள்ளார்.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, உச்சி மாநாட்டில் பங்கேற்ற நேட்டோ தலைவர் மார்க் ரூட்
அமெரிக்காவில் நடந்தது என்ன?
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா ஸெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது , ஸெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இடையே நடந்த ஒரு வார்த்தைச் சண்டையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இணைந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது.
ரஷ்யாவுடன் ராஜ்ஜீய ரீதியான பேச்சுவார்தை குறித்து ஜே.டி.வான்ஸ் குறிப்பிட்ட நிலையில் இது தொடர்பாக கேள்விகளை முன்வைத்தார் ஸெலன்ஸ்கி.
“ஜே.டி., நீங்கள் எந்த வகையான ராஜ்ஜீய நடவடிக்கையைப் பற்றி பேசுகிறீர்கள்?” என வினவியதோடு, “நீங்கள் கூறுவதன் பொருள் என்ன?” என கேள்வி எழுப்பினார் ஸெலன்ஸ்கி
“உங்கள் நாட்டில் அழிவை முடிவுக்கு கொண்டு வரும் விதமான ராஜ்ஜீய நடவடிக்கையைப் பற்றி நான் பேசுகிறேன் ” என வான்ஸ் பதிலளித்தார்.
ஆனால் அமெரிக்க ஊடகங்கள் முன்பாக ஒரு தேவையற்ற விவாதத்தை ஸெலன்ஸ்கி தொடங்கி வைத்ததாகக் கருதிய வான்ஸ், இதனை தான் அவமரியாதையாகக் கருதுவதாகக் கூறினார்.
“மரியாதைக்குரிய அதிபர் அவர்களே, நீங்கள் ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்னதாக பிரச்னையை எழுப்ப முயலுவதை நான் அவமரியாதையாகக் கருதுகிறேன்” என வான்ஸ் பேசினார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ஸெலன்ஸ்கி மற்றும் ட்ரூடோ உரையாடல்
யுக்ரேன் ராணுவத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஸெலன்ஸ்கியிடம் வான்ஸ் கூறியபோது, ”போர்க் காலத்தில் அனைவருக்கும் பிரச்னை இருக்கும். உங்களுக்கும் கூட. ஆனால் உங்களிடம் பெருங்கடல் உள்ளதால் நீங்கள் அதை தற்போது உணரவில்லை. ஆனால் வருங்காலத்தில் நீங்களும் அதை உணர்வீர்கள்,” என்று தெரிவித்தார் ஸெலன்ஸ்கி.
அது நேரம் வரை ஸெலன்ஸ்கியும் ஜே.டி.வான்ஸுமே பேசிக் கொண்டிருந்த நிலையில் ஸெலன்ஸ்கியின் இந்த பேச்சு டிரம்பை அதிருப்தி அடையச்செய்தது. அந்த வார்த்தைப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார் டிரம்ப்.
ஓவல் அலுவலகத்தில் அமர்ந்து டிரம்பை பார்த்து ஸெலன்ஸ்கி, “ரஷ்யாவை நீங்கள் திருப்திப்படுத்துங்கள். பிறகு போர் ஒன்று உங்களை நோக்கிவரும்,” என்று கூறினார்.
இந்த கருத்து டிரம்பை மிகவும் கோபப்படுத்தியது. “நாங்கள் எப்படி உணர வேண்டும் என்று கூறும் இடத்தில் நீங்கள் இல்லை,” என்று கூறும் போது டிரம்ப் மிகவும் சத்தமாக பேசினார்.
“உங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. நீங்கள் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறீர்கள்,” என்று கூறினார் டிரம்ப்.
இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா, யுக்ரேனுக்கு அளித்த ஆதரவிற்காக ஸெலன்ஸ்கி நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், துணை அதிபர் ஜே.டி.வான்ஸும் அறிவித்த பிறகு ஸெலன்ஸ்கி உலக ஊடகங்கள் முன்பு குறைமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டதைப் போல் உணர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இருதரப்பாலும் முன்னெடுக்கப்பட்டிருந்த கனிமவளம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை.