• Sun. May 3rd, 2026

24×7 Live News

Apdin News

யுடியூப் பிரபலமாக இருந்த “முன்னாள் முஸ்லிம்” – 26 ஆண்டுகளுக்குப் பின் கைதானது எப்படி?

Byadmin

May 3, 2026


டிவியில் விவாதம், யூடியூபில் வீடியோக்கள், ஆனால் 'தேடப்பட்ட குற்றவாளி': 26 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், DELHI POLICE

படக்குறிப்பு, ஏப்ரல் 24 அன்று டெல்லி காவல்துறை சலீம் வஸ்திக்கை கைது செய்தபோது, ​​அவர் பலவீனமான நிலையில் இருந்தார்.

சலீம் கான், ‘சலீம் வஸ்திக்’ என்ற பெயரில் பல ஆண்டுகளாகப் பொதுவெளியில் தீவிரமாக இயங்கி வந்தபோதிலும், காவல்துறையால் “தேடப்படும் நபராகவே” கருதப்பட்டு வந்தார். அவர் தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்றார், பாட்காஸ்டுகளில் பேசினார், சமூக ஊடகங்களில் காணொளிகளைப் பதிவிட்டார். பொதுமக்கள் முன்பாகத் திறந்தவெளியிலேயே செயல்பட்ட போதிலும், காவல்துறையின் ஆவணங்களில் அவர் ஒரு “தேடப்படும் நபர்” என்றே தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வந்தார்.

ஏப்ரல் 24ஆம் தேதியன்று, காஸியாபாத்தின் லோனி பகுதியில் வைத்து, 54 வயதான சலீம் கானை டெல்லி காவல்துறை கைது செய்தது. தற்காப்புக் கலையில் ‘பிரவுன் பெல்ட்’ பெற்றிருந்த அவர், கைது செய்யப்பட்ட நேரத்தில் மிகவும் மெலிந்து, பலவீனமான நிலையில் காணப்பட்டார். அவரது இடுப்பைச் சுற்றி, சிறுநீர்ப் பை ஒன்று கட்டப்பட்டு இருந்தது.

சமீப ஆண்டுகளில், சலீம் கான் இஸ்லாமிய மதத்தில் இருந்து விலகி, தன்னை ஒரு ‘முன்னாள் முஸ்லிம்’ என்றே அடையாளப் படுத்திக்கொள்ளத் தொடங்கியிருந்தார். அவர் தனது பெயரையோ அல்லது தோற்றத்தையோ மாற்றிக்கொள்ளாத போதிலும், பொது மக்களின் பார்வைக்குத் தென்படும் வகையிலேயே இருந்துகொண்டு, 26 ஆண்டுகளாகக் கைது செய்யப்படாமல் தப்பி வந்தார். இந்தக் காலகட்டத்தில், இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளைத் தெரிவித்ததன் மூலம் அவர் பரவலாக அறியப்பட்டார். மேலும், இந்துத்துவ அமைப்புகளுடனும் அவர் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக்கொண்டார்.

பிப்ரவரி 2026இல் சலீம் கான் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய அவர், தான் கைது செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் காஸியாபாத்தின் லோனி பகுதியிலுள்ள அசோக் விஹாரில் ஒரு புதிய வீட்டிற்குக் குடியேறினார். டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவைச் சேர்ந்த ‘கொள்ளை மற்றும் வழிப்பறி தடுப்புப் பிரிவின்’ சிறப்புக் குழு ஒன்று, அந்த இடத்திற்குச் சென்று அவரைக் கைது செய்தது.

கடந்த 1995ஆம் ஆண்டில், 13 வயது பள்ளி மாணவர் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றத்திற்காக, சலீம் கானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நவம்பர் 2000இல் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார், அதிலிருந்து அவர் தலைமறைவாகவே இருந்து வந்தார்.

By admin