பட மூலாதாரம், Sammi Cannold
2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காபூலை தாலிபன்கள் ஆக்கிரமித்த போது, தப்பிக்க முயன்ற ஆப்கானியர்கள் விமான நிலையத்தில் குவிந்த காட்சிகளை உலகம் பார்த்தது.
பிறகு, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசியில், முன்னாள் கடற்படை மருத்துவரான சஃபி ரவூஃப், ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்ட நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு உதவ முடிவெடுத்தார்.
ஆனால், அம்மக்களை காப்பாற்றும் வேளையில், காதல்வயப்படுவார் என்றும், ஒரு இஸ்லாமிய ஆணான அவர் ஒரு யூதப் பெண்ணை காதலிப்பார் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.
“நான் தயக்கத்துடன் ஒருவருக்கு உதவ ஆரம்பித்தேன்,” அந்த முயற்சி வெற்றியடைந்தது. பிறகு இன்னொருவருக்கு உதவினேன், அதன் பிறகு இன்னொருவருக்கு உதவினேன். அப்படியே அது ஒரு பெரிய முயற்சியாக மாறியது. ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கானவர்களும், வாஷிங்டனில் பலரும் இதில் ஈடுபட்டனர்”என்கிறார் சஃபி.
பட மூலாதாரம், Sammi Cannold
ஒரு அகதி முகாமில் பிறந்து, தனது இளம் வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த சஃபி, இந்த பரபரப்பான மீட்பு பணியில் முக்கிய இடத்தில் இருந்தார்.
அந்தக் கடுமையான சூழ்நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த நாடக இயக்குனர் சம்மி கன்னோல்ட்டை சந்தித்தார் சஃபி. சம்மி, தனது நண்பரின் குடும்பத்தை காபூலில் இருந்து வெளியேற்ற தீவிரமாக முயன்று கொண்டிருந்தார்.
பட மூலாதாரம், Sammi Cannold
“எனக்கு யாரையும் தெரியாது,ஒருநாள் சஃபியின் குழுவைப் பற்றி டிவியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். உதவி கேட்டு அவரை அணுகினேன். அவர் என்னை வாஷிங்டனுக்கு வந்து, அவரது குழுவுடன் தன்னார்வ தொண்டில் ஈடுபடச் சொன்னார்”என்று சம்மி கூறுகிறார்.
அதற்குப் பிறகு, சம்மி ஒரு சூட்கேஸை எடுத்துக்கொண்டு ரயில் ஏறி வாஷிங்டன் டிசிக்கு சென்றார். அங்கு, முழுவதும் முன்னாள் ராணுவ வீரர்கள் நிறைந்திருந்த ஒரு மையத்திற்குள் நுழைந்தார்.
“நான் முற்றிலும் வேறொரு உலகத்தில் வாழ்ந்தவர். அது ஒரு பெரிய கலாச்சார அதிர்ச்சியாக இருந்தது”என்று கூறி சிரிக்கிறார்.
சம்மிக்கு ஆப்கானிஸ்தானைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவரிடம் சில பயனுள்ள திறமைகள் இருந்தன.
“எனக்கு தகவல்தொடர்பு தொடர்பான வேலைகள் தெரியும். அதனால், குழுவின் தகவல் தொடர்பாளராக மாறினேன்,” என்கிறார்.
பட மூலாதாரம், Safi Rauf
குழப்பங்களுக்கு மத்தியில் பூத்த மலர்
ஒருபுறம் அந்த மையத்தில் பதற்றமான சூழல் நிலவினாலும், மறுபுறம் வேறொன்றும் நடக்கத் தொடங்கியது.
“சஃபி மீது ஈர்ப்பு இருந்ததா? என்று கேட்டால், ஆம்” என்று சம்மி கூறுகிறார்.
சஃபி “டேட் செய்வதற்கு ஏற்ப இளமையானவரா” என்று தெரிந்துகொள்ள சம்மி கூகுளில் அவருடைய வயதை தேடியதை நினைவுகூர்கிறார்.
” நான் அவரது பேரையும் வயதையும் கூகுளில் தேடினேன். ஏனென்றால்,அப்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் இப்போது இருப்பதை விட அவர் மிகவும் வயதானவராகத் தெரிந்தார்” என்றும் சம்மி கூறுகிறார்.
ஒருநாள், அவர்கள் இருவரும் அதிகாலை 3 மணிக்கு ஒன்றாக நடந்து சென்றனர்.
வெளியேற்றப்பட வேண்டியவர்களை தாலிபன் சோதனையிலிருந்து பாதுகாக்கக் காத்திருந்த இரவில், அவர்கள் வாஷிங்டனின் நினைவுச்சின்னங்கள் வழியாக நடந்து, லிங்கன் நினைவிடத்தை அடைந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
“அது ஒரு திரைப்படத்தைப் போல இருந்தது, ‘நான் இவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறேனா ?’ என்று எனக்குள் கேள்வி எழுந்தது” என சம்மி கூறுகிறார்.
பின்னர், அவர்களின் முதல் முத்தம் அந்த மையத்தின் பால்கனியில் நடந்தது.
பதற்றமாக இருந்த சஃபி கார்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், கலாச்சார வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்களுக்குள் உள்ள பிணைப்பு விரைவாக வளர்ந்தது.
பட மூலாதாரம், Sammi Cannold
“‘நீங்கள் என்னை உங்களது குடும்பத்துக்கு அறிமுகப்படுத்தப் போகிறீர்களா?’ என்று சம்மி எப்போதும் என்னிடம் கேட்பார். பிறகு உடனே, ‘அது ஒருபோதும் நடக்காது’ என்பார்,” என்கிறார் சஃபி.
இஸ்லாமியர்களான சஃபியின் குடும்பத்தினர், அவர்களது ஏற்பாட்டில் சஃபி ஒரு ஆப்கான் பெண்ணை திருமணம் செய்வார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் சம்மி யூதப் பின்னணி கொண்டவர்.
ஆனால் இதைப் பொருட்படுத்தாமல், இருவரும் தங்கள் உறவைத் தொடர்ந்தனர். ஒருநாள் சம்மி, சஃபியை தனது உலகமான நாடக மேடைக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் லெஸ் மிசரபிள்ஸ் (Les Misérables) என்ற பிரபல நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றனர்.
பட மூலாதாரம், Andy Henderson
“சுருக்கமாகக் கூறினால், சஃபிக்கு பைத்தியம் பிடித்ததைப் போல் ஆகிவிட்டது. இசை நாடகங்களை, குறிப்பாக லெஸ் மிஸ்ஸை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது” என்று சிரித்தபடி சொல்கிறார் சம்மி.
சஃபிக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. “நான் சிறுவயதிலிருந்து உயிர்வாழ்வதற்காகப் போராடி வளர்ந்தேன். அந்த கதையின் நாயகன் மரியஸைப் பார்த்தபோது, எனக்கு எனது வாழ்க்கை நினைவுக்கு வந்தது. அவர் கிளர்ச்சியாளர், அதே நேரத்தில் ஒரு காதலனும் கூட”என்கிறார் சஃபி.
பட மூலாதாரம், Sammi Cannold
சிறைவாசம்
டிசம்பர் 2021-இல், சஃபி தனது சகோதரருடன் சேர்ந்து தனது பணிக்காக காபூலுக்குத் திரும்பினார். இப்போது பயணிக்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும், தங்களால் அவருக்கு பொது மன்னிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படும் என்று தாலிபன் உறுதி அளித்ததாக சஃபி கூறுகிறார்.
ஆனால், ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்ப வேண்டிய அந்த நாளில், சஃபியும், அவரது சகோதரரும், வெளிநாட்டைச் சேர்ந்த வேறு ஐந்து பேரும் தாலிபன் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர்.
முதல் சில நாட்களில், சஃபி ஒரு குளிர்ந்த அடித்தள அறையில் அடைக்கப்பட்டார். ” அந்த அறை ஆறு அடிக்கு ஆறு அடி அளவுதான். ஜன்னலும் இல்லை, படுக்கையும் இல்லை,” என்று அவர் நினைவுகூர்கிறார்.
பட மூலாதாரம், Sammi Cannold
அதே நேரத்தில், நியூயார்க் நகரில் இருந்த சம்மி பதற்றமடைந்தார். அவர் கூகுள் மேப்ஸில் சஃபி இருக்கும் இடத்தைப் பார்த்தார். அது தாலிபனின் உளவுத்துறை தலைமையகத்தைக் காட்டியது.
“காபூலில் உள்ள இடங்களைப் பற்றி எனக்கு பெரிதாகத் தெரியாது, ஆனால் அது மிகவும் மோசமான இடம் என்று தெரியும்” என்று சம்மி கூறுகிறார்.
பல வாரங்களாக எந்தத் தகவலும் இல்லை. பிறகு, சஃபி சிறையில் இருந்தபோது, ஒரு காவலாளியுடன் நட்பை ஏற்படுத்தினார். அந்த காவலாளி தனது திருமணத்திற்காக பணம் தேவைப்படுவதாக சொன்னபோது, சஃபி அதைப் பயன்படுத்திக் கொண்டு, தனது உறவினரிடம் இருந்து பணமும் மொபைல் போனும் அனுப்ப ஏற்பாடு செய்தார்.
பட மூலாதாரம், Safi Rauf
தனது அடித்தள அறையிலிருந்து, சிக்னலை அடைய தனது சகோதரனின் தோள்களில் ஏறி, “ஹாய், எப்படி இருக்கிறாய் ? ஐ லவ் யூ “என அவர் சம்மிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
சஃபியிடம் இருந்து, “முதல் தொலைபேசி அழைப்பு 17 நாட்களுக்குப் பிறகு வந்தது,” என்று சம்மி கூறுகிறார்.
“அவர் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டதே பெரிய விஷயமாக இருந்தது. அவரது குரலைக் கேட்க முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் அவர் எப்படி பட்ட சூழலில் இருக்கிறார் என்று நினைக்கும் போது பயமாகவும் இருந்தது”என்கிறார் சம்மி.
தான் சிறையில் இருந்த காலத்தில், சஃபி லெஸ் மிஸ் நாடகத்தின் நினைவுகளை இறுகப் பற்றிக்கொண்டார்.
“முதல் 70 நாட்களுக்கு நான் சூரிய ஒளியைப் பார்க்கவே இல்லை. எப்போதும் அடித்தளத்திலேயே இருந்தோம்,”
“வெளிநாட்டு கைதிகள் நாங்கள் எட்டு பேர் இருந்தோம். ஒருவருக்கு கடுமையான நோய் ஏற்பட்டது, மற்றொருவர் மிகவும் மனச்சோர்வடைந்தார்”என்று சஃபி கூறுகிறார்.
அப்போதுதான், ‘டூ யூ ஹியர் த பீப்பிள் சிங்'(Do you hear the people sing?) என்ற பாடலை சஃபி மெதுவாகப் பாடியுள்ளார். “அது எனது எதிர்ப்பின் பாடலாக மாறியது,” என்கிறார் சஃபி.
பட மூலாதாரம், James Gourley / Getty Images
“அந்த நிச்சயமற்ற சூழலில், அதைப் பற்றிக் கொள்வது நம்பிக்கையளித்து” என்று கூறுகிறார் சஃபி
பட மூலாதாரம், Safi Rauf
மறுபுறம், சம்மியுடனான ரகசிய அழைப்புகளும் தொடர்ந்தன.
“காவலர்களுக்கு கேட்காதபடி, போர்வைக்கு கீழ் இருந்துகொண்டு கிசுகிசுப்பான குரலில் நான் பேசுவேன்”
“அதேபோல், என் சகோதரனும் இரண்டு அடி தூரத்தில் தான் இருந்தார். அந்த சூழலில் சம்மியுடன் அன்பாகப் பேசுவது சற்று நகைச்சுவையாகத் தான் இருந்தது”என்று நினைவு கூர்கிறார் சஃபி.
பெற்றோருடனான சந்திப்பு
பட மூலாதாரம், Sammi Cannold
தாலிபன்களுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே சென்றன. ஆனால் 70வது நாளில், சஃபியை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஒரு கட்டத்தில், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று தாலிபன் மிரட்டியதாக சம்மி கூறுகிறார்.
“சஃபியின் பெற்றோரும் நானும் கத்தாருக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அங்கு பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்ததால், அதை விரைவுபடுத்தும் முயற்சியாக அதுவும் தேவைப்பட்டது” என்று சம்மி சொல்கிறார்.
பட மூலாதாரம், Safi Rauf
அதன்படி, சம்மி கத்தாருக்குச் சென்றார். அங்கு தான் அவர் முதல் முறையாக சஃபியின் பெற்றோரைச் சந்தித்தார்.
“நான் இருப்பதே அவர்களுக்கு தெரியாது, ஆனால் திடீரென்று நாங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு குடியிருப்பில் (காண்டோவில்) ஒன்றாக வாழ்ந்தோம்” என்று சம்மி சிரித்தபடி நினைவு கூர்கிறார்.
“சஃபியின் பெற்றோரால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், குடும்பத்தின் பிரதிநிதியாக நான் செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது”என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பழமைவாத ஆப்கானிய இஸ்லாமிய குடும்பத்துக்கு, தங்கள் மகன் ரகசியமாக யூதப் பெண் ஒருவரைக் காதலிக்கிறார் என்று தெரிய வந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த நெருக்கடி அவர்களை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளியது.
“சஃபியின் பெற்றோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்,அவர்கள் என்னை ஏற்றுக் கொண்ட விதம் உண்மையிலேயே ஆச்சரியமளித்தது” என்று சம்மி கூறுகிறார்.
105 நாட்கள் கழித்து, சஃபி விடுவிக்கப்பட்டார். பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி, இறுதியாக சம்மியுடன் மீண்டும் இணைந்தார்.
பட மூலாதாரம், Sammi Cannold
ஒன்றிணைந்த வாழ்க்கை
அமெரிக்காவில் மீண்டும் ஒன்றிணைந்த பிறகு, சஃபியும் சம்மியும் ஒன்றாகக் குடியேறினர். சில காலத்திலேயே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணம் ஆப்கான், யூத, மற்றும் நாடக கலாசாரங்களை இணைத்த ஒரு சிறப்பான விழாவாக இருந்தது.
விருந்தினர்கள் ஆப்கான் உடைகள் அணிந்திருந்தனர், யூத மரபு பாடல்கள் பாடப்பட்டன, மேலும் ஃபிட்லர் ஆன் தி ரூஃப் என்ற இசை நாடகத்தில் வரும் ‘பாட்டில் டான்ஸ்’ பாடலுக்கு சஃபி தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடினார்.
திருமணத்தின் போது, சம்மி மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றை செய்தார். சஃபி சிறையில் இருந்த காலத்தில் தான் எழுதிய தனது நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்களை வாசித்தார்.
பட மூலாதாரம், Sammi Cannold
‘எங்காவது ஒரு பால்கனியில் அமர்ந்து கொண்டு உன் பக்கத்தில் அமர்ந்தபடி இதைப் படிக்கும் நாளை நான் கனவு காண்கிறேன். தயவுசெய்து, தயவுசெய்து, தயவுசெய்து திரும்பி வாருங்கள்’ என்று 32வது நாளில் எழுதப்பட்ட ஒரு பதிவை சம்மி வாசித்தார்.
சஃபி, அந்த நாட்குறிப்பு எழுதப்பட்ட காலத்தில் அதைப் படிக்கவில்லை.
“அது மிகவும் வேதனையானது. ஆனால் எங்கள் திருமண நாளில், நாங்கள் அதை ஒன்றாகப் படித்தோம்,” என்று அவர் கூறுகிறார்.
அவர்களின் நிச்சயதார்த்த மோதிரத்துக்குக் கூட ஒரு கதையுண்டு. சஃபி சிறையில் இருந்தபோது பூட்டிலிருந்து எடுத்த ஒரு சிறிய இரும்புத் துண்டை அந்த மோதிரத்தில் பதித்திருந்தார்.
“அந்த அனுபவம் எங்கள் வாழ்க்கைக்கான அடித்தளத்தை அமைத்தது,” என்றும் அவர் சொல்கிறார்.
பட மூலாதாரம், Sammi Cannold
காதலில் கற்ற பாடங்கள்
பின்னோக்கிப் பார்க்கும்போது, அந்த துயர்மிகு நாட்கள் தான் அவர்களின் உறவை மாற்றியதாக சம்மி நம்புகிறார்.
“எனக்குத் தெரிந்த எந்த ஜோடியையும் விட நாங்கள் குறைவாகவே சண்டை போட்டுக்கொள்கிறோம் ” ஏனெனில், ஒருவரை இழக்கும் நிலையில் இருந்தால், சிறிய விஷயங்கள் முக்கியமல்ல என்று நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள் “என்கிறார்.
சஃபிக்கு, இது நன்றியுணர்வைப் பற்றியது.
“இப்போது வாழ்க்கை எங்களுக்கு எதை கொடுத்தாலும் , அது நாங்கள் ஏற்கனவே கடந்து வந்த துயரத்தைவிட கடினமானதாக இருக்கப்போவதில்லை. இங்கே நாங்கள் இன்னும் ஒன்றாக இருப்பது, பிரிந்து விடாமல் காதலில் திளைத்திருப்பது என்பது ஒரு அதிசயம்,” என்று அவர் சொல்கிறார்.
பட மூலாதாரம், Sammi Cannold
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு