பட மூலாதாரம், YSR/Facebook
ஹாலிவுட் முதல் உலகின் பல்வேறு திரைப்படத்துறைகளில் ஒரு இசையமைப்பாளரின் முதன்மைப் பணி என்பது திரைப்படத்தின் பின்னணி இசையை நேர்த்தியாக அமைப்பது. ஆனால் இந்திய சினிமாக்களில், குறிப்பாக கோலிவுட்டில் ஒரு இசையமைப்பாளரின் பணி என்பது ஒரு திரைப்படத்தின் 5 பாடல்களில் குறைந்தது 2 ‘ஹிட்’ பாடல்களை கொடுப்பது தான் என்ற பொதுவான பிம்பம் உள்ளது.
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்த இயக்குநர்கள் பலரும், தங்களது திரைப்படங்களுக்கான பாடல்களுக்கு அவர்கள் எவ்வாறு மெட்டமைத்தார்கள் என்பதை சிலாகித்து பேசுவதைக் கேட்டிருப்போம்.
அதேசமயம், ஒரு திரைப்படத்தின் பின்னணி இசை சில காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் என்றென்றும் மனதில் உறையச் செய்துவிடும்.
‘தளபதி’ திரைப்படத்தில், சூரிய அஸ்தமனத்தின் பின்னணியில், நாயகன் சூர்யா (ரஜினி) நாயகி சுப்புலெட்சுமியை (ஷோபனா) பிரியும் காட்சி, ‘வீடு’ திரைப்படத்தில் தன் பேத்தி கஷ்டப்பட்டு கட்டும் சொந்த வீட்டை தாத்தா முருகேசன் (சொக்கலிங்க பாகவதர்) பார்வையிடும் காட்சி, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் அமுதா தனது தாயை சந்திக்கும் இறுதிக் காட்சி, ‘ரட்சகன்’ திரைப்படத்தில் நாயகன் அஜய் (நாகார்ஜுனா) தொழிற்சாலைக்குள் நுழையும் இடைவேளைக் காட்சி என சில உதாரணங்களைக் கூறலாம்.
அந்த வரிசையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது பாடல்களுக்காக மட்டுமல்லாது, பின்னணி இசைக்காகவும் அறியப்படுகிறார். இவரது பின்னணி இசை துணுக்குகள் பலரின் ‘ரிங்டோன்களாக’ இருக்கின்றன.
குறிப்பாக இன்று தமிழ் சினிமாவில் பொதுவான ஒன்றாக மாறிவிட்ட ‘தீம் மியூசிக்’ என்னும் வகைமையை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியவர் யுவன் சங்கர் ராஜா தான் என திரைப்பட விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இன்று (ஆகஸ்ட் 31) பிறந்தநாள் காணும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பின்னணி இசை மற்றும் ‘தீம் மியூசிக்’ குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
1. பில்லா (2007)
பட மூலாதாரம், YouTube
ரஜினி நடிப்பில் 1980இல் வெளியான ‘பில்லா’ திரைப்படத்தின் ரீமேக் என்பதால், கதை முழுவதும் தெரிந்தே இந்தத் திரைப்படத்தைக் காண வந்தவர்களை ‘பில்லாவாக’ அஜித்தின் ஸ்டைலான தோற்றமும், அதற்கு ஏற்ற தீம் இசையும் கவர்ந்தது.
டேவிட் பில்லா மற்றும் சரவண வேலு கதாபாத்திரங்கள் ‘ஸ்லோ-மோஷனில்’ நடந்துவரும் காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் பில்லா தீம் இசையும் இன்றுவரை அஜித் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளது.
“பில்லா படத்திற்கு என ஒரு தீம் இசையை உருவாக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ‘நான் மீண்டும் நானாக வேண்டும்’ என்ற பாடலில் வரும் ஒரு இசை துணுக்கை கேட்டுவிட்டு, இயக்குநர் விஷ்ணுவர்தன் ‘இதை எனக்கு தீம் இசையாக’ மாற்றிக்கொடுங்கள் எனக் கூறினார். அது இவ்வளவு பெரிய ஹிட் ஆகுமென்று எதிர்பார்க்கவில்லை” என ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார் யுவன் சங்கர் ராஜா.
இந்த தீம் இசையையே, ‘பில்லா 2’ திரைப்படத்திற்காக மெருகேற்றி வெளியிட்டார் யுவன். அதுவும் பிரபலமான தீம் இசையாக மாறியது.
“எனது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் யுவனின் பின்னணி இசை மிகப்பெரிய பலம்” என்று ஒரு நேர்காணலில் கூறியிருப்பார், பில்லா, அறிந்தும் அறியாமலும், பட்டியல், திரைப்படங்களின் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
2. சண்டைக்கோழி (2005)
பட மூலாதாரம், YouTube
கல்லூரி படிப்பு முடித்துவிட்டு தனது நண்பனின் ஊருக்கு வரும் நாயகன் பாலு (விஷால்), அங்கு பல குற்றங்களை செய்யும் காசி (லால்) என்பவனைப் பற்றியும், அவனால் மக்கள் படும் கஷ்டங்களையும் கேள்விப்படுகிறான்.
‘காசியைப்’ பார்க்க வேண்டுமென ஆர்வமாக இருக்கும் நாயகனும் அந்த காசியும் முதன்முதலாக ஒரு பேருந்தில் சந்தித்துக்கொள்ளும்போது வரும் சண்டைக் காட்சிக்கு திரையரங்குகளில் பெரும் ஆரவாரம் இருந்தது.
அத்தனைக்கும் நடிகர் விஷாலின் இரண்டாவது திரைப்படம் தான் இது, அப்படியிருக்க அந்த சண்டைக் காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததற்கான முக்கிய காரணங்களில் யுவனின் பின்னணி இசையும் ஒன்று.
“இன்றும் கூட ஏதேனும் புது இயக்குநர் ஒரு ஆக்ஷன் கதையை என்னிடம் சொல்லவந்தால் யுவனை தான் இசையமைப்பாளராக பரிந்துரைப்பேன். ஒரு சண்டைக் காட்சியை யுவனின் பின்னணி இசைக்கு முன்/பின் என பார்ப்பதில் பெரும் வித்தியாசம் உள்ளது” என சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார் நடிகர் விஷால்.
3. 7ஜி ரெயின்போ காலனி (2004)
பட மூலாதாரம், YSR/Facebook
“7ஜி படத்தின் படப்பிடிப்பின் போது, ‘பெரும்பாலான காட்சிகள் அமைதியாகவே செல்கின்றனவே, வசனங்கள் குறைவாக உள்ளதே’ என ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா என்னிடம் கேட்பார். அவரிடம் நான் சொன்னது ‘எல்லாம் யுவன் பார்த்துக்கொள்வான்’ என்று” இவ்வாறு 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் இயக்குநர் செல்வராகவன் ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்.
அதற்கு ஏற்றார் போல திரைப்படத்தின் பல காட்சிகளில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக ரசிகர்களுக்கு தனது பின்னணி இசை மூலம் கடத்தியிருப்பார் யுவன் சங்கர் ராஜா.
நாயகன் கதிர் (ரவி கிருஷ்ணா)- நாயகி அனிதா (சோனியா அகர்வால்) இடையேயான காட்சிகள் மட்டுமல்லாது, கதிர் மற்றும் அவனது தந்தை இடையேயான காட்சிகளின் பின்னணி இசையும் கவனம் பெற்றது.
இந்தப் படத்தின் ‘வாக் த்ரூ தி ரெயின்போ’ என்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தீம் இசையைக் கேட்கும்போது இளையராஜா இசையமைத்த ‘ஜானி’ திரைப்படத்தின் தீம் இசை நினைவுக்கு வரலாம்.
இந்தப் படத்தின் இசைக்காக ‘லைவ்’ இசையைப் பயன்படுத்தியதாகவும், இதற்காக 40 பேர் கொண்ட இசைக்குழுவுடன் ஒரு மாதம் பணியாற்றியதாகவும் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் யுவன்.
7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் இசைக்காக தனது முதல் ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார் யுவன்.
4. மங்காத்தா (2011)
பட மூலாதாரம், YouTube
‘விநாயக் மஹாதேவ்’ என்ற பெயரைக் கேட்டதும், அஜித் ரசிகர்கள் பலருக்கும் மங்காத்தா படத்தின் தீம் இசை நினைவுக்கு வந்துவிடும்.
‘மங்காத்தா’ திரைப்படம் வெளியாவதற்கு முன் வந்த படத்தின் முன்னோட்டத்தில் (Trailer) இடம்பெற்ற இந்த தீம் இசை, திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
விநாயக் மஹாதேவ் கதாபாத்திரத்தின் அறிமுகம் தொடங்கி, குறிப்பாக ரசிகர்களால் விரும்பப்பட்ட இறுதிக்காட்சி உள்பட மங்காத்தா திரைப்படத்தில் வரும் நடிகர் அஜீத்துக்கான ‘மாஸ்’ காட்சிகள் அனைத்திலும், ‘மங்காத்தா’ தீம் இசையே ஒலித்தது.
நடிகர் ரஜினிக்கு பல வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ தீம் இசை போல, அஜித்திற்கு ‘மங்காத்தா’ தீம் இசை என்ற அளவிற்கு இது அஜித் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது.
“அந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர்கள் பலரும் ஹீரோக்களுக்காக ‘மங்காத்தா’ போன்ற ஒரு தீம் இசையைக் கொடுங்கள் எனக் கேட்டனர். ஆனால், உண்மையில் ‘மங்காத்தா’ தீம் இசை உருவானதற்கு காரணம், இயக்குநர் வெங்கட் பிரபுவின் காட்சி அமைப்புகளே. எங்கெங்கு ‘மாஸ்’ இசை வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அது எனக்கு முழுமையான ஒரு தீம் இசையை உருவாக்க உதவியது” என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் யுவன் சங்கர் ராஜா.
5. பருத்திவீரன் (2007)
பட மூலாதாரம், Teamwork Production House
யுவன் சங்கர் ராஜாவால் கிராமத்து களம் கொண்ட திரைப்படங்களுக்கு இசையமைக்க முடியுமா என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்ற அழுத்தமான பதிலைக் கொடுத்த திரைப்படம் பருத்திவீரன்.
இப்படத்தில் பாடல்கள் மட்டுமல்லாது, பருத்திவீரன் (கார்த்தி)- முத்தழகு (பிரியாமணி) கதாபாத்திரங்கள் இடையேயான காதல் காட்சிகளின் பின்னணியில் வரும் இசை, குறிப்பாக ரசிகர்களைக் உலுக்கிய இப்படத்தின் இறுதிக்காட்சியில் வரும் பின்னணி இசை அப்போது பல விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
“திரைப்படத்தின் இறுதிக்காட்சியை பார்த்துவிட்டு யுவன் அழுதுவிட்டார். ஒரு படத்தின் காட்சிகளை உள்வாங்கி இசையமைப்பது யுவனின் சிறப்பு. ஆனாலும், இறுதிக்காட்சிக்கு அவர் முதலில் அமைத்த பின்னணி இசையில் எனக்கு திருப்தியில்லை. பிறகு, ஒரு ஒப்பாரி பாடல் போல இசை வேண்டுமென கேட்டதும், மீண்டும் அமைத்துக் கொடுத்தார். அது இறுதிக்காட்சியை பலமடங்கு தாக்கமுள்ளதாக மாற்றியது” என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் பருத்திவீரன் திரைப்படத்தின் இயக்குநர் அமீர்.
6. காதல் கொண்டேன் (2003)
பட மூலாதாரம், YouTube
“காதல் கொண்டேன் இறுதிக்காட்சியில், தனுஷ் சண்டையிட்டுக் கொண்டே ஆடும் காட்சி, முதலில் வெறும் சண்டைக்காட்சியாகவே இருந்தது. பிறகு யுவனின் பின்னணி இசையை ஒரு டேப் ரிக்காடரில் போட்டு கேட்டவுடன், ஒரு புதிய காட்சியமைப்பு தோன்றியது.” என்று ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் இயக்குநர் செல்வராகவன்.
‘திவ்யா…திவ்யா’ எனக் கத்தியவாறே நடிகர் தனுஷ் ஆடும் அந்த இறுதிக்காட்சி, யுவனின் இசைக்காகவே மிகவும் பிரபலம். அது மட்டுமல்லாது, தனுஷ் கல்லூரி வகுப்பிற்குள் நுழையும் காட்சி, கரும்பலகையில் ஒரு கணித கணக்கை தீர்த்து, மொத்த வகுப்பறையையும் ஆச்சரியப்படுத்தும் காட்சி, கல்லூரி செமினார் ஒன்றில் தனுஷ் பேசும் காட்சி, என திரைப்படம் முழுவதும் யுவனின் பின்னணி இசை பெரும் பங்காற்றியிருக்கும்.
திவ்யா (சோனியா அகர்வால்) மற்றும் அவரது காதலன் சுதீப் (ஆதி கேசவன்) இடையேயான காதல் காட்சிகளில் வரும் இசை, பலரது ரிங்டோனாக இருந்தது.
காதல் கொண்டேன் திரைப்படத்தின் ஓஎஸ்டி (OST) எனும் ‘ஒரிஜினல் சவுண்ட்டிராக்’ தனியாக வெளியிடப்பட்டது. இது அப்போது ஹாலிவுட் திரைப்படங்களில் பொதுவான ஒன்றாக இருந்தாலும், தமிழில் ஒரு புதுமையான விஷயமாக பார்க்கப்பட்டது.
இவை மட்டுமல்லாது நடிகர் சிம்புவின் ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ போன்ற திரைப்படங்களில் யுவன் அமைத்த பின்னணி இசை சிம்பு ரசிகர்களிடையே பிரபலமானவையே.
“யுவன் போல பலதரப்பட்ட இசைகளை கொடுக்கக்கூடிய ஒருவரை நாம் இன்னும் அதிகமாக கொண்டாட வேண்டும்” என்று ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் நடிகர் சிம்பு.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு