• Tue. Sep 29th, 2026

24×7 Live News

Apdin News

யூடியூபர் வீட்டில் 118 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு – மேலும் 2 பேர் கைது

Byadmin

Sep 29, 2026


யூடியூபர் வீட்டில் 118 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டியை கைது செய்த போலீசார் அவனுக்கு உதவிய மேலும் 2 பேரை கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33), தொழிலதிபர். ஏலக்காய் வியாபாரம் செய்து வரும் இவர் தற்போது நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.

இவரது மனைவி மதுமிதா. யூடியூபரான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான ஆடைகள், நகைகள் அணிந்து கட்டுக்கட்டாக பணத்துடன் இருப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். கடந்த 24-ந் தேதி மதுமிதா தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர்.

பின்னர் அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 118 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ராஜாக்க மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுமிதா வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. அவற்றின் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கினர். வீட்டைவிட்டு வெளியேறிய அந்த நபர், நாகர்கோவில் செட்டிகுளம் வழியாக நெல்லை மாவட்டத்திற்கு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையனை அடையாளம் காணப்பட்டான்.

அவன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் இசக்கிபாண்டி (வயது 30) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவனிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. இருப்பினும் முழுமையான நகைகள் அவனிடம் இல்லை. நகைகளை நண்பர்களின் உதவியுடன் பலருக்கு பிரித்துக் கொடுத்துவிட்டதாக இசக்கிபாண்டி போலீசாரிடம் கூறினான்.

இதனை தொடர்ந்து அவனுக்கு உதவிய முருகன், முருகேசன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் இன்று காலை ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மீட்கப்பட்டது போக மீதமுள்ள நகைகளை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin