புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, திரையரங்க வாயிலில் இருந்தபடி பார்வையாளர்களின் கருத்துகளைப் பதிவுசெய்து வெளியிட கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென தயாரிப்பாளர்கள் கோருகின்றனர். ஆனால், இது எந்த அளவுக்கு சாத்தியம்?
தமிழ்நாட்டில் திரைப்படங்கள் வெளியாகும் தினத்தன்று, குறிப்பிட்ட சில திரையரங்குகளின் வாசல்களில் இருந்தபடி, முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வெளிவரும் ரசிகர்களின் கருத்துகளைப் பதிவு செய்து யூடியூப்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென தமிழ்த் திரையுலகிற்குள் குரல்கள் எழுந்திருக்கின்றன.
யுடியூப்களில் வெளியாகும் விமர்சனங்கள் குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகிற்குள் முணுமுணுப்பு இருந்த நிலையில், சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு வெளியான மோசமான விமர்சனங்கள்தான் தற்போதைய இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.
சூர்யா நடித்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14ஆம் தேதி வெளியான ‘கங்குவா’ திரைப்படம் முதல் நாளில் இருந்தே மிக மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்தப் படத்தின் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வெளிவரும் ரசிகர்கள் சிலர் தெரிவித்த கருத்துகள், பலத்த சலசலப்பை ஏற்படுத்தின. இந்த விமர்சனங்களில் தனிமனித தாக்குதலும் இருந்தது.
சுமார் 300 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததற்கு முதல் நாள் வெளியான மோசமான விமர்சனங்கள் முக்கியக் காரணமாக இருக்கலாம் என திரையுலகிற்குள் மெல்ல விவாதங்கள் எழத் தொடங்கின. நடிகை ஜோதிகாவும் இதுகுறித்து சமூக ஊடகங்களில் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
சூர்யாவின் மனைவியாக அல்லாமல், ஒரு சினிமா காதலராகத் தனது கருத்தை முன்வைப்பதாகக் கூறியிருந்த அவர், “ஊடகங்களிலும் துறையைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் வரும் எதிர்மறை விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியமளிக்கின்றன. பெண்களைத் துரத்துவது போன்ற காட்சிகளைக் கொண்ட பழைய கதைகள், இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்ட எவ்விதமான புத்திசாலித்தனமும் இல்லாத படங்களுக்கு இம்மாதிரி விமர்சனங்கள் வந்ததில்லை.
படத்தை விமர்சனம் செய்யும்போது, படத்தில் உள்ள நல்ல அம்சங்களை அவர்கள் மறந்துவிட்டனர். இவர்கள் சொல்வதையெல்லாம் நம்பவோ, படிக்கவோ செய்யலாமா என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது,” என்று அவர் கூறியிருந்தார்.
அதோடு, ‘கங்குவா’வின் முதல் நாளில் முதல் காட்சி முடியும் முன்பாகவே, இவ்வளவு பெரிய அளவில் எதிர்மறை விமர்சனத்தை அளித்திருப்பது வருத்தமளிப்பதாகவும், இந்தப் படத்தின் கருத்துக்கும் முப்பரிமாண பிரமாண்ட காட்சிகளை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பாராட்டுகளை அளித்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
யூடியூப் விமர்சனங்களுக்கு எதிரான குரல்கள்
ஜோதிகாவின் இந்தக் கருத்தும் சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது என்றாலும்கூட இதற்குப் பிறகு திரையுலகிற்கு உள்ளேயிருந்தே முதல் நாள் விமர்சனத்திற்கு எதிரான கருத்துகள் தீவிரமாக வெளியாக ஆரம்பித்தன.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், முதல் நாள் முதல் காட்சி முடிந்த பிறகு ரசிகர்களின் கருத்துகளைப் பதிவுசெய்ய, திரையரங்க வளாகத்திற்குள் யூடியூப் சேனல்களை அனுமதிக்கக் கூடாது என்றார்.
இந்த ஆண்டில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததற்கு, முதல் நாளில் வெளிவந்த மிக மோசமான, நியாயமற்ற விமர்சனங்களே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இதுபோன்ற விமர்சனங்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் முதற்கட்டமாக, திரையரங்க வளாகத்திற்குள் யாரையும் ரசிகர்கள் கருத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது.
“திரையரங்கு வளாகம் மட்டுமல்ல, அதற்கு அருகிலும்கூட, எந்த யூடியூப் சேனலும் ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்கள் பற்றிப் பேட்டி எடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் அனுமதிக்கக்கூடாது,” என அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதோடு, திரைப்படங்களைத் தார்மீக முறையில் விமர்சிக்காமல் தனிமனித தாக்குதல்கள் மேற்கொள்வது போன்ற செயல்களை ஊடகங்கள் மூலம் செய்யும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க சங்கம் முயற்சிகளையும் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்,யூடியூப் சேனல்களில் வருவதெல்லாம் விமர்சனமே இல்லை, தனிமனித தாக்குதல்தான் என்கிறார்.
“இவர்கள் நியாயமாக ஒரு படத்தை விமர்சனம் செய்யும் வரை பிரச்னையே இல்லை. எல்லாப் படங்களிலும் நல்ல அம்சங்களும் இருக்கும் மோசமான அம்சங்களும் இருக்கும். ஆனால், இவர்கள் எந்த நல்ல அம்சங்களையும் சொல்வதில்லை” என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்.
இத்தகைய யூடியூப் சேனல்களால் எந்த நேர்மறை பலன்களும் திரையரங்குகளுக்கு இல்லை என்கிறார் அவர்.
இந்தக் காரணங்களால், “திரையரங்க வளாகங்களுக்குள் விமர்சனம் எடுப்பதை தடுக்கத்தான் போகிறோம். எங்கள் படங்களுக்கு ஒரு வாரத்திற்கு யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை அணுக முயற்சி செய்யப் போகிறார்கள்” என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்.
நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளரும் தயாரிப்பாளருமான ஜி.தனஞ்செயனும் இதே கருத்தை எதிரொலிக்கிறார்.
“நாங்கள் விமர்சனத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. இதுபோன்ற விமர்சனங்கள் ஆரம்பத்தில், திரைப்படங்கள் ஓடுவதற்கு உதவியாக இருந்தன. குறிப்பாக, சிறிய படங்களுக்கு பத்திரிகைகளில் விமர்சனம் வருவதற்கு முன்பாக, இதுபோன்ற ரசிகர்களின் கருத்துகளைத் தொகுத்துக் காட்டுவது மிக மிக உதவியாக இருந்தது.
ஆனால், சுமார் ஒரு வருட காலமாக இதில் மாற்றம் தென்படுகிறது. நிறைய யூடியூப் சேனல்கள் வந்த பிறகு, ஒவ்வொருவரும் தங்கள் சேனலை எப்படி வளர்ப்பது என யோசித்து, எதிர்மறைக் கருத்துகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர். படம் பற்றிய ஒரு எதிர்மறைக் கருத்தையே விரைவில் உருவாக்கிவிடுகிறார்கள். அது வெறும் விமர்சனமாக இல்லாமல், தனிமனித தாக்குதல்வரை எல்லை மீறி போய்விட்டது,” என்றார்.
மேலும், “சிலர் ஆட்களை உள்ளே அனுப்பி, படம் முடிந்ததும் பேச வைப்பதாக சொல்கிறார்கள். அதை நிரூபிக்க எங்களிடம் ஆதாரமில்லை. ஆனால், சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது எங்களுக்குச் சந்தேகம் வருகிறது” என்கிறார் தனஞ்சயன்.
இதுபோன்ற விமர்சனங்கள் உண்மையிலேயே படத்தின் வசூலைக் கடுமையாகப் பாதிப்பதாகவும் கூறுகிறார் அவர்.
“இப்போதெல்லாம் எல்லாப் படங்களுக்கும் ரசிகர்கள் வருவதில்லை. மிகவும் தேர்வு செய்துதான் படங்களைப் பார்க்கிறார்கள். பெரும்பாலான படங்களை ஓடிடியில் பார்த்துவிடலாம் என நினைக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இதுபோன்ற விமர்சனங்கள் உண்மையிலேயே தொழிலுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன” என்கிறார் அவர்.
“யூடியூப் சேனல்கள் சிறிய திரைப்படங்களுக்கு உதவுகின்றன”
ஆனால், திரைப்பட பத்திரிகையாளர்களும் யூடியூப் சேனல்களை நடத்துபவர்களும் இதை முற்றிலும் மாறுபட்ட பார்வையில் பார்க்கின்றனர்.
இதுபோல முதல் நாள் தாங்களே அனுப்பிய ஆட்களிடம் கருத்துகளைக் கேட்டு ஒளிபரப்பும் போக்கை ஆரம்பித்தது யார் எனக் கேள்வி எழுப்புகிறார் மூத்த திரைப்பட பத்திரிகையாளர் அந்தணன்.
“இதையெல்லாம் ஆரம்பித்தது தயாரிப்பாளர்கள்தான். ஆரம்பத்தில் இவர்களே டிக்கெட் எடுத்துக் கொடுத்து சிலரை உள்ளே அனுப்பி, அவர்கள் கருத்துகளை இவர்களே பதிவு செய்து சேனல்களுக்கு அனுப்பி வந்தார்கள். பிறகு, பி.ஆர்.ஓ-க்கள் இதைச் செய்தார்கள். யூடியூப் வந்த பிறகு, இது இயல்பாகவே நடக்க ஆரம்பித்துவிட்டது,” என்கிறார் அந்தணன்.
மேலும், இந்தக் காலகட்டத்தில் யூடியூப் சேனல்கள்தான் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகவும், அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் தயாரிப்பாளர்கள் முடிவு செய்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
சில முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும்தான் இப்போது தானாக ரசிகர்கள் வருகிறார்கள், மற்ற படங்களுக்கு இதுபோன்ற ஒரு விஷயம் தேவைப்படுகிறது என்கிறார் அவர்.
“ஒரு 20 – 25 யுடியூப் சேனல்கள் இதற்கென எல்லா திரையரங்குகளிலும் போய் நிற்கிறார்கள். அவர்கள் வெறும் பொதுமக்களின் கருத்தை மட்டும் எடுப்பதில்லை. அங்கு நடக்கும் ரசிகர்களின் கொண்டாட்டம், பால் அபிஷேகம் போன்ற எல்லாவற்றையும் எடுக்கிறார்கள். இந்தக் கொண்டாட்டத்தில் பங்கு பெற பலரும் அங்கு வருகிறார்கள். ஆகவே, திரையரங்குகளுக்கு ஆட்களைத் தருவிப்பதில் இது மிகப்பெரிய பங்கு வகுக்கிறது” என்கிறார் அந்தணன்.
இதே கருத்தையே எதிரொலிக்கிறார் இதுபோன்ற யூடியூப் சேனல் ஒன்றைச் சேர்ந்த முரளிதரன்.
“முதல் நாள் முதல் காட்சியை ஒட்டி வரும் ரசிகர்கள் விமர்சனத்தை யாரும் நிறுத்தவே முடியாது. சாதாரண மக்களே, இடைவேளை முடிந்த பிறகு படம் பற்றிக் கருத்துகளை ட்விட்டரில் வெளியிட்டு விடுகிறார்கள். அப்படியிருக்கும்போது, படம் முடிந்த பிறகு ரசிகர்களிடம் கருத்துகளைப் பெற்று வெளியிடுவதில் என்ன தவறு?” என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.
மேலும், “தயாரிப்பாளர்கள், ஒரு வாரம் கழித்து விமர்சனம் செய்யலாம் என்கிறார்கள். ஆனால். பலரும் ட்விட்டரிலேயே விமர்சித்து விடும் நிலையில், ஒரு வாரம் கழித்து யார் யுடியூப் விமர்சனத்தைப் பார்ப்பார்கள்?” எனக் கேள்வி எழுப்புகிறார் முரளி.
ஆனால், தரம்தாழ்ந்து விமர்சனம் செய்வது ஏற்கத்தக்கதல்ல, ரசிகர்களின் கருத்தைப் பதிவுசெய்த பிறகு அதனை எடிட் செய்ய வேண்டும் என்றாலும், பலர் அதைச் செய்வதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார் அவர்.
யூடியூப் சேனல்களே ஆட்களை அனுப்புகின்றனவா?
ஒரு விமர்சனம் யூடியூபில் வைரலாக வேண்டும் என்பதற்காக யூடியூப் சேனல்களே சிலருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்புவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை?
“யூடியூப் சேனல்களை பொறுத்தவரை, ரசிகர்களில் சிறப்பாகப் பேசுபவர்களைக் குறித்துக் கொள்கிறார்கள். அவர்களின் எண்களைப் பெற்று அடுத்த படங்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறார்கள். ஆனால், மோசமாகப் பேசுவதற்காக அனுப்புவதாகச் சொல்வது சரியல்ல” என்கிறார் அந்தணன்.
ஆனால், அப்படி ஆட்களை அனுப்பும் அளவுக்கு யூடியூப் சேனல்களின் உரிமையாளர்கள் வசதியானவர்களில்லை என்கிறார் முரளி.
“சிறிய யூடியூப் சேனல்களுக்கு வரும் வருமானத்தில், எத்தனை பேரை அப்படி தியேட்டருக்கு அனுப்ப முடியும்? ஆனால், படம் பார்க்க வருபவர்களில் புகழுக்காக ஆசைப்படும் சிலர், யூடியூப் சேனல்களிடம் எண்களை வாங்கிக்கொண்டு, புதிய படங்கள் வெளியாகும்போது, தான் எந்த தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்கிறோம் என்பதைத் தெரிவித்து அங்கே வரச் சொல்கிறார்கள். தங்களைத் திரைப்படம் தொடர்பாக பேட்டி எடுக்கச் சொல்கிறார்கள்.,” என்பதைக் குறிப்பிட்டார் முரளி.
மேலும் சில முறைகேடுகளும் நடப்பதாகக் கூறுகிறார் முரளி.
“பெரிய படங்களின் ட்ரெய்லர் வெளியாகும்போது அவற்றைப் பற்றி விமர்சனங்களை முதலில் பதிவு செய்கிறார்கள். அதில் யாராவது ட்ரெய்லர் எனச் சொல்லியிருந்தால் அவற்றை நீக்கிவிடுவார்கள். பிறகு, இந்த விமர்சனத் தொகுப்பை படம் வெளியாகும் தினத்தன்று, படம் வெளியாகும் நேரத்திற்கு முன்பே வெளியிடுகிறார்கள். இதையெல்லாம் நிச்சயம் தடுக்க வேண்டும்” என்கிறார் அவர்.
யூடியூப் விமர்சனங்களை முற்றிலும் தடுப்பது சாத்தியமே இல்லை என்கிறார் அந்தணன்.
“தயாரிப்பாளர்களின் முடிவை எல்லா திரையரங்க உரிமையாளர்களும் ஏற்க மாட்டார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் சிலருக்கு போன் செய்து, யூடியூப் சேனல்களை அனுமதிக்க வேண்டாம் எனச் சொன்னபோது, திரையரங்க உரிமையாளர்கள் மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் எந்த அளவுக்குச் செயல்படுத்த முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு