-
- எழுதியவர், நாதன் பெவன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
மனிதர்களை விட அதிகமான ஆடுகளைக் கொண்ட சிறிய தீவு, அங்கு வாழவும் வேலை செய்யவும் இயற்கையை நேசிக்கும் மக்களை தேடுகிறது. பிரிட்டனின் குவினெத்தில் உள்ள லின் தீபகற்பத்தின் அருகில் ஒரு சிறிய தீவு அமைந்துள்ளது.
பார்ட்ஸி தீவு என்றும் அழைக்கப்படும் யெனிஸ் என்லி, பலத்த காற்று வீசும் மற்றும் கடல் அலைகள் அடிக்கும் ஓர் இயற்கை பிரதேசம்.
இங்கு மின் இணைப்பு இல்லை என்பதும், தற்போது இங்கு வசிக்கும் மக்கள்தொகை மூன்று பேர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
2023-ஆம் ஆண்டில், இது ஐரோப்பாவின் முதல் சர்வதேச இருண்ட வான சரணாலயமாகவும் மாறியது. இது இயற்கையாகவே இருட்டாக இருக்கும், விண்மீன்களைத் தெளிவாகக் காணக்கூடிய ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியைக் குறிக்கும். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக இது பாதுகாக்கப்படுகிறது.
தற்போது இந்தத் தீவின் உரிமையாளரான ஓர் அறக்கட்டளை, “வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு” என கூறி ஒரு சாகசக் குடும்பம் அல்லது தம்பதியரை அதன் கரடுமுரடான கடற்கரைக்கு வரவேற்கிறது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் முதல்முறையாக அனைவருக்குமாக இந்த தீவு திறக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Amanda Ruggeri
ஆடு மாடுகளை பராமரிக்க வேண்டும்
இந்தத் தீவில் குடியேற ஆர்வமுள்ள எவரும் விண்ணப்பிக்கலாம் என்று பார்ட்ஸி தீவு அறக்கட்டளை கேட்டுக்கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் 2026 செப்டம்பரில் அந்தத் தீவில் குடியேறுவார்கள்.
இங்கு வந்து தங்கிய பிறகு, புதிய குடியிருப்பாளர்கள் அபர்டாரனில் இருந்து வரும் தற்போதைய குத்தகை விவசாயியான கரத் ராபர்ட்ஸ் உடன் இணைந்து, அந்தத் தீவில் உள்ள 200 ஆடுகள் மற்றும் 25 வேல்ஷ் பிளாக் மாடுகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
“2007 முதல் தீவில் வசிக்கும் கரத் மற்றும் அவரது குடும்பத்தினர், தீவையும், அங்கு வசிப்பதன் சவால்கள் மற்றும் நன்மைகள் நன்கு அறிவார்கள்” என்று அறக்கட்டளையின் தலைமை அதிகாரி சியான் ஸ்டேசி கூறினார், புதிய நபர்களுக்கு ராபர்ட்ஸ் வழிகாட்டுவார் என்றும் அவர் கூறினார்.
வெறும் 440 ஏக்கர் (0.69 சதுர மைல்) பரப்பளவைக் கொண்ட இந்த தீவு, தேசிய இயற்கை காப்பகமாகவும், சிறப்பு அறிவியல் ஆர்வமுள்ள ஒரு தளமாகவும் (SSSI) உள்ளது.
சர்வதேச டார்க் ஸ்கை சரணாலய சான்றிதழ், பூமியின் மிகவும் தொலைதூர மற்றும் இருண்ட இடங்களாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 16 தளங்களுடன் இந்தத் தீவையும் இணைத்தது.
சிலர் குறிப்பிட்ட சில பருவகாலத்தில் மட்டும் தற்காலிகமாக அங்கு சென்று வசிக்கின்றனர். பார்ட்ஸி தீவு “மிகவும் உயிர்ப்புடன் இருக்கும் இடம்” என்று சியான் விவரித்தார்.
“நானும் அங்கே மூன்று வருடங்கள் வாழ்ந்தேன் – அது ஒரு அற்புதமான இடம்,” என்று அவர் கூறுகிறார்.
பார்ட்ஸி தீவில் இருப்பவை
- வீடுகளில் வைஃபை அல்லது மின்சாரம் இல்லை, தண்ணீர் கிணற்றிலிருந்து நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
- இந்த தீவு ஒன்றரை மைல் நீளம் மற்றும் ஒன்றரை மைல் அகலம்.
- இடைக்காலத்தின் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த “20,000 புனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்”. அப்போது ரோமுக்கு செல்வதுப் போலவே, என்லி தீவுக்கு புனித யாத்திரை செல்வதும் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
- கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து யாத்ரீகர்கள், கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் என பல தரப்பினரும் தீவுக்கு வருகை தந்து வருகின்றனர்.
- 200 ஆடுகள் உள்ளன
- 1821-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் இன்னும் தீவின் தெற்கு முனையில் உள்ளது.
- ஐரோப்பாவின் முதல் இருண்ட வான சரணாலயம்
- 30,000 இனப்பெருக்க ஜோடி மேங்க்ஸ் ஷீர்வாட்டர் மீன்களுக்கு தாயகம்.
இடைக்காலத்தில் பிரிட்டனின் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றாகப் போற்றப்பட்ட யெனிஸ் என்லி, 20,000 புனிதர்களின் தீவு என்று அழைக்கப்படுகிறது.
உலகம் முழுவதிலுமிருந்து இரட்சிப்பைத் தேடி வரும் யாத்ரீகர்களின் இறுதி ஓய்வு இடமாகவும் புராணக்கதைகளில் யெனிஸ் என்லி சித்தரிக்கப்பட்டுள்ளது. 1990களில் நடந்த அகழ்வாராய்ச்சியில் டஜன் கணக்கான இடைக்கால கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு