படக்குறிப்பு, செங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக டிரம்ப் கூறுகிறார்கட்டுரை தகவல்
யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சிக்குழு மீது அமெரிக்கா ”தீர்க்கமான மற்றும் சக்திவாய்ந்த” வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலே இதற்கு காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“இரானின் நிதி உதவியோடு, இந்த ஹூதிக்கள் அமெரிக்க விமானத்தின் மீது ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியுள்ளனர், எங்களின் ராணுவத்தையும் கூட்டாளிகளையும் தாக்கியுள்ளனர்” என்று டிரம்ப் தமது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் எழுதியுள்ளார்.
ஹூதி குழுவின் “கடற்கொள்ளை, வன்முறை மற்றும் பயங்கரவாத” நடவடிக்கைகள் ”பில்லியன் டாலர் இழப்பை” ஏற்படுத்தியுள்ளதாகவும், மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், டிரம்ப் கூறியுள்ளார்.
ஹூதியால் இயக்கப்படும் சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ள தகவலின்படி தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும் 101 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
காஸாவில் நடைபெறும் இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்வினையாக கப்பல் போக்குவரத்தை ஹூதி குழு குறிவைத்து தாக்கி வருகிறது. தற்போது அமெரிக்காவின் தாக்குதலுக்கும் பதிலடி கொடுப்போம் என அக்குழு கூறியுள்ளது.
சனா மற்றும் சாடாவின் வடக்குப் பகுதியில் தொடர்ச்சியான குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஹூதி அமைப்பானது தெரிவித்துள்ளது. யேமனின் செளதி அரேபிய எல்லைப்பகுதியான இங்கு, ஹூதி கிளர்ச்சிக்குழு வலுவாக உள்ளது.
இரான் ஆதரவுடன் இயங்கி வரும் கிளர்ச்சிக்குழுவான ஹூதி இஸ்ரேலை அதன் எதிரி நாடாக கருதி வருகிறது. யேமனின் வடமேற்குப் பகுதி மற்றும் சனா பகுதிகளை கட்டுப்படுத்தி வருகிறது. ஆனால், இது சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாக இல்லை.
யேமன் தலைநகர் சனாவில் குடியிருப்புப் பகுதிகளைக் குறி வைத்து ”தீய நோக்குடன்” தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மீது ஹூதி தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் சனிக்கிழமை ஹூதி இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிரிட்டன் பங்கேற்கவில்லை. மாறாக அமெரிக்கப் படைகளுக்கு எரிபொருள் நிரப்பும் வழக்கமான உதவிகளை மட்டும் வழங்கியது,
“எங்களின் நோக்கத்தை எட்டும் வரையிலும், அதிதீவிரமான தாக்குதல் தொடரும்” என கூறியுள்ளார் டிரம்ப்.
“இரானின் வெளியுறவுக் கொள்கை குறித்து கட்டளையிட அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும், வேலையும் இல்லை” என இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
“இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் பயங்கரவாதத்துக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்” என்று அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.”யேமன் மக்கள் கொலையை நிறுத்துங்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காஸாவில் நடைபெறும் போரில், பாலத்தீன தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக ஹூதிக்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தாங்கள் குறிவைப்பதாக ஹூதிக்கள் கூறினாலும், இது தவறான கூற்றாகவே உள்ளது.
ஹூதிக்கள் யார்? இவர்கள் ஏன் கப்பல்களைத் தாக்குகின்றனர்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹூதிக்கள் தாக்குதல்களால் சூயஸ் கால்வாய் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
நவம்பர் 2023 முதல் செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடா பகுதிகளில் ஒரு டஜனுக்கும் அதிகமான வர்த்தக கப்பல்களை ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் சிறிய படகுகளைக் கொண்டு ஹூதிக்கள் தாக்கியுள்ளனர். இரண்டு கப்பல்களை மூழ்கடித்துள்ள இந்த ஆயுதக்குழு, மூன்றாவது கப்பலை கைப்பற்றியதோடு அதன் பணியாளர்கள் 4 பேரைக் கொன்றது.
வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க மேற்கு நாடுகளின் போர்க்கப்பல்களை நிறுத்திய போதும், ஹூதி இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வான்வழித் தாக்குதல்களை நடத்திய போதும், இந்த குழுக்களை பின்வாங்கச் செய்யும் முயற்சி பலனளிக்கவில்லை.
இஸ்ரேல் மீது யேமனிலிருந்து 400 ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறும் இஸ்ரேல் ராணுவம், இதற்கு பதிலடியாக ஜூலை முதல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும், யேமனின் பெரும்பாலான தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன என இஸ்ரேல் கூறுகிறது,
உலக கடல் வர்த்தகத்தில் 15 சதவிகித கப்பல் போக்குவரத்து நடக்கும் பகுதியாக இருந்த போதிலும், பெரிய கப்பல் நிறுவனங்கள் செங்கடல் பகுதியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. இதற்கு பதிலாக நீண்ட தூரம் சுற்றிச் செல்லக்கூடிய தென்னாப்பிரிக்க வழியைத் தேர்ந்தெடுத்துள்ளன.
சூயஸ் கால்வாய் வழியாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் பாதுகாப்பாக கடந்து சென்று ஒரு வருடத்துக்கும் மேலாகிறது என டிரம்ப் கூறியுள்ளார்.
ஆசியா மற்றும் ஐரோப்பா இடையிலான அதிவேக கடல்பாதையான சூயஸ் கால்வாய், எண்ணெய் , இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் போக்குவரத்துக்கு முக்கியமானதாகும்.
சூயஸ் கால்வாயில் சிக்கலை சந்திக்கும் அமெரிக்கா
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஓராண்டில் செங்கடல் பகுதியில் ஹூதிக்கள் 190 தாக்குதல்களை நடத்தியுள்ளனர்
ஹூதிக்களை நேரடியாக குறிப்பிட்டு பேசிய டிரம்ப், அவர்கள் உடனடியாக நிறுத்தாவிட்டால், முன்னெப்போதும் அவர்கள் பார்த்திராத வகையில் குண்டு மழை பொழிவேன் என்று எச்சரித்துள்ளார்.
இந்த ஆக்ரோஷத்தால் பாலத்தீனத்துக்கான தங்களின் ஆதரவு குறையப் போவதில்லை என்று ஹூதி அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவும் ஹூதிக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் உடன் விவாதித்துள்ளார்.
“செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்கள் மீதான ஹூதிக்களின் தாக்குதல் சகித்துக் கொள்ளப்படாது” என ரூபியோ கூறிதாக, வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பைடன் நிர்வாகத்தை குற்றம் சாட்டும் டிரம்ப்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவலின்படி , நவம்பர் 2023 முதல் அக்டோபர் 2024க்கு இடைப்பட்ட காலத்தில் செங்கடல் பகுதியில் ஹூதிக்கள் 190 தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து கடற்படை மற்றும் வான்வழித் தாக்குதல்களை ஹூதிக்கள் மீது நடத்தியது. இஸ்ரேலும் தனியாக ஹூதிக்களுக்கு தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது.
ஹூதிக்களுக்கான ஆதரவை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள டிரம்ப், தாக்குதல்களுக்கு இரானை பொறுப்பேற்க வைப்போம், இதில் மென்மையாக நடந்து கொள்ள மாட்டோம் என்றார்.
முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலிருந்த முந்தைய அமெரிக்க நிர்வாகம், “பரிதாபத்துக்குரிய வகையில் பலவீனமாக” இருந்ததாகவும், “கட்டுப்பாடற்ற வகையில்” ஹூதிக்கள் செயல்பட அனுமதித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.