7
அவ்னி மூவிஸ்- பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில மூன்று வேடங்களில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் – வணிக ரீதியாவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனால் உற்சாகமடைந்த படக் குழு படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதற்கான பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் இசையமைப்பாளர் தேவா சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர். அத்துடன் ‘கானா கேங்ஸ்’ எனும் கானா பாடல்களை மட்டும் பாடும் ஐந்து கலைஞர்கள் கொண்ட இசைக் குழுவை ஹிப் ஹாப் ஆதி தமிழாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இசையமைப்பாளர் தேவா அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்வில் நாயகன் ஹிப் ஹாப் ஆதி தமிழா பேசுகையில், ” இசை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் இப்படி ஒரு உணர்வை ரசிகர்களுக்கு படைப்பாக வழங்கலாம் என தோன்றியது. இதனை எம்முடைய திரையுலக குருவான சுந்தர் சியிடம் சொன்னபோது.. அவர் ‘நன்றாக இருக்கிறது. படமாக உருவாக்கலாம்’ என்றார்.
அதனை தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த கிஷோர் எனும் ரசிகர் ‘மீசைய முறுக்கு 2’ எப்போது வரும்? என்று ஆவலுடன் கேட்டார். அவருக்கு மதிப்பளிக்கும் வகையில் இப்படத்திற்கு ‘மீசைய முறுக்கு 2’ என பெயரிட்டு, படத்தின் பணிகளை தொடங்கினோம். ஒரு இசை நிகழ்ச்சியின் போது அங்கு திரளாக கூடியிருக்கும் ரசிகர்களுக்கு எம் மாதிரியான ஆனந்த உணர்வலைகள் எழுமோ..! அதனை பட மாளிகையில் இப்படத்தை காணும் ரசிகர்களுக்கும் கடத்திட வேண்டும் என்பதுதான் எம்முடைய திட்டமாகவும் , எண்ணமாகவும் இருந்தது. தற்போது ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தை ரசிகர்கள் படமாளிகையில் பார்த்து உற்சாகத்துடன் கொண்டாடும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் சொன்னது போல் கானா கலைஞர்களை கொண்ட ‘கானா கேங்ஸ்’ எனும் இசைக் குழுவை ஒருங்கிணைத்திருக்கிறேன். இதனை கானா பாடலை மக்களிடத்தில் பிரபலப்படுத்திய இசையமைப்பாளர் தேவா அறிமுகப்படுத்தியதை பெருமிதமாக கருதுகிறேன். அவருக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் உலகம் முழுவதும் இப்படத்தை வெளியிட்டு தயாரிப்பாளருக்கு லாபத்தை ஈட்டி கொடுத்த விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்திலுக்கும் நன்றி” என்றார்.
இதனிடையே ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக திரையுலக வணிகர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.