• Mon. Feb 3rd, 2025

24×7 Live News

Apdin News

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ‘குடும்பஸ்தன்’ படக் குழு

Byadmin

Feb 2, 2025


‘குட்நைட் ‘, ‘ லவ்வர்’, ‘ குடும்பஸ்தன்’ என வரிசையாக மூன்று பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் மணிகண்டன் மற்றும் அவர் நடிப்பில் வெளியான ‘குடும்பஸ்தன்’ படக் குழுவினர் ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து கடந்த மாதம் 24 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியான ‘குடும்பஸ்தன்’ எனும் திரைப்படம் தமிழகம் முழுவதும் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பினையும், ஆதரவையும் பெற்றது. இந்தத் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் இந்திய மதிப்பில் 11 கோடி ரூபாயை வசூலித்ததாக திரையுலக வணிகர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் பட குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர். இந்நிகழ்வில் பங்கு பற்றி பேசிய இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், ” நக்கலைட்ஸ் எனும் யூட்யூப் அணியினர் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த ‘குடும்பஸ்தன்’ படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இத்தகைய வெற்றி இந்த அணியினருக்கு அவசியமான ஒரு விடயம். தற்போது தமிழ் சினிமாவில் ‘லப்பர்பந்து’, ‘குடும்பஸ்தன்’ போன்ற எளிய மக்களின் வாழ்வியல் சார்ந்த படைப்புகள் வெற்றி பெற்றிருக்கிறது. நடுத்தர மக்களின் வாழ்வியலுக்கான விடயங்களை பிரச்சாரமாக போதிக்காமல், அவர்களின் நாளாந்த வாழ்வியலுடன் இணைந்து சொன்னால் வெற்றி உறுதி என்பதை இப்படத்தின் வெற்றிக்கு சான்றாகும். நடிகர் மணிகண்டன் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் எம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ” என குறிப்பிட்டார்.

‘குடும்பஸ்தன்’ திரைப்படம் கடந்த காலத்தில் தமிழ்த்திரை உலகில் வெளியாகி வெற்றி பெற்ற மறைந்த இயக்குநர் விசு அவர்களின் படைப்பு போலவும், இயக்குநர் வி. சேகரின் படைப்பினை போலவும் இருப்பதால் இதற்கு தற்போது உலகம் முழுவதும் பாரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

By admin