14
’முன்மாதிரியான வரலாற்று பேராசிரியரும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான டபிள்யூ. ஐ. சிறிவீர அஃவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது ’’ என்று யாழ் பலலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த அஞ்சலிக் குறிப்பு வருமாறு:
“பேராதனைப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியராக புலமைச் சிறப்புமிக்க பல ஆய்வுகளை எமதாக்கியவர் பேராசிரியர் சிறிவீர. அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் தொலைநோக்கு மிக்க பேராசானாக எமக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கிய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
அவரோடு பழகக்கிடைத்த பொழுதுகள் பேறுமதியானவை .இனவாத அலைகளுக்குள் ஆய்வுகளும் தடுமாறும் சூழமைவில் அறிவார்ந்த , நியாயமனதின் படைப்புகளான அவரது எழுத்துக்கள் பெறுமதியானவை. எடுத்துக்காட்டாக எல்லாளன்- துட்டகாமினி முரண்பாட்டினை இனப்போராக்கி கதை எழுதி இன்றுவரை பாட நூல்களிலும் கடத்துகின்ற அறிவீனமான சூழலில் ,அதனை அரசர்களுக்கிடையிலான மூரணாக தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் அவர் முன்வைத்த ஆய்வுக்கட்டுரை இன்றுவரை மறுக்கப்பட முடியாத ஆய்வுப்படைப்பாக நிலைபெற்றுள்ளமையை குறிப்பிடலாம்.
ஆய்வுப் பண்பாட்டுக்கான பங்களிப்புடன் அனுராதபுரத்தில் அமையப்பெற்ற ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக அப்பல்கலைக் கழகத்தை வடிவமைபதில் அவராற்றிய பணிகளும் , மானியங்கள் ஆணைக்குழு போன்ற உயர் கல்வி அமைப்புகளுக்கு அவர் தந்த தலைமைத்துவமும் தனித்துவமானவை…” என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.