4
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளமை ஓர் அரசியல் பழிவாங்கல் என, கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள் கூட்டாக தெரிவித்தன.
அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு இதன்போது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்” என்ற தலைப்பில் நடந்த குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க் கட்சிகள், அரசியல் எதிரிகளை குறிவைக்க அரசாங்கம் சட்டத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டின.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கும், கருத்து வேறுபாடுகளை மௌனமாக்குவதற்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று எதிர்க்கட்சி குழுக்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.
மைத்ரிபால சிறிசேன
இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என்றார்.
அத்துடன், “நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலேயே தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுக் கூடியுள்ளோம். எமது அரசியல் கொள்கையில் நாம் கவலையடைந்திருக்கிறோம். சிறைவாசம் அனுபவித்திருக்கிறோம். பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தும் வருகின்றோம்.
“அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கவில்லையாயின் அவர்களின் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மனோ கணேசன்
அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிர்க்கட்சியாக வன்மையாக கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதன்போது தெரிவித்தார்.
“பட்டலந்த வதை முகாம் மற்றும் இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே, அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது.
“எனவே, அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்திருந்தால், எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒன்றிணைந்து இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருக்க தேவையில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.