ரணிலுக்கு பிணை
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமளியலில் வைக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை, கொழும்பு – கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர பிறப்பித்தார்.
தலா 50 இலட்சம் ரூபாய் பொறுமதியான மூன்று சரீரப் பிணையில் அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
Zoom வீடியோவில் ரணில்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றைய வழக்கு நடவடிக்கையில் ‘சூம்’ வீடியோவின் ஊடாக இணைந்துகொண்டார்.
சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளால் ‘சூம்’ வீடியோவின் ஊடாக அவர் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக, அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பிணை வழங்க எதிர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக மேலதிக சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் ஆஜரானார்.
ரணில் விக்கிரமசிங்கவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன மற்றும் அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு ஆஜரானது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்த்தது.
அழைப்புப் பத்திரத்தின் சட்டப்பூர்வ தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்தார்.
மேலும், ரணில் விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிக்கும் விதிவிலக்கான சூழ்நிலைகளை பிரதிவாதி தரப்பு முன்வைக்காவிட்டால், விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
நீதிமன்றத்திற்கு அருகில் பரபரப்பு
இன்று காலை முதல் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் எதிர்க்கட்சியினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“அடக்குமுறைக்கு எதிராக” என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அநுர கோ கம” என்று கூச்சலிட்டனர்.
இப்போராட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கல் வீச்சுத் தாக்குதலில் மூக்கில் கடும் காயங்களுக்கு உள்ளான குறித்த பொலிஸ் அதிகாரி, இரத்தம் சொட்ட அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதட்டமான நிலைமை ஏற்பட்டது.
நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி, பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பொலிஸ் நீர்த்தாரை வாகனங்கள், கலகம் அடக்கும் பொலிஸார், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
The post ரணிலுக்கு பிணை; நீதிமன்றத்தில் நடந்தது என்ன? appeared first on Vanakkam London.