5
தமிழ் திரையுலகில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆண்பாவம் பொல்லாதது’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அத்தான்..’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அத்தான்..’ எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் மு. வி எழுத, பின்னணி பாடகர்கள் வைசாக் மற்றும் லட்சுமி காந்த் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கான காணொளியில் மறைந்த ‘நடிகவேள்’ எம் ஆர் ராதா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் இன்றும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ‘ரத்தக்கண்ணீர்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை படக் குழுவினர் மீளுருவாக்கம் செய்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.