பட மூலாதாரம், Getty Images
காசநோய் இறப்புகளைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை பின்பற்றும் ஒரு நோய் தீவிரம் கண்டறியும் முறை மிகுந்த பலனளித்து வருகிறது.
ஆய்வகப் பரிசோதனைகள் எதுவும் இல்லாமல், மிக எளிதான ஐந்து விஷயங்களைச் செய்வதன் மூலம் தீவிர காசநோயாளிகளை விரைவில் கண்டறிந்து, உடனடி சிகிச்சை வழங்கி இறப்புகளைத் தடுத்து வருகிறது.
காசநோய் இறப்புகள் பொதுவாக நோய் கண்டறிந்து ஒரு வாரம் முதல் இரண்டு மாதங்களிலேயே அதிகம் நடைபெறுகின்றன. காசநோய் இருக்கிறது என்று கண்டறிந்த பிறகு, அந்த நோயாளிகளுக்கு நோய் தீவிரமாக இருக்கிறதா, இல்லையா என்று வகைப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு காசநோய் இறப்பில்லா திட்டத்தின் (Tamil Nadu Kaasanoi Erapilla Thittam – TNKET) கீழ் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
என்னென்ன காரணிகள் அளவிடப்படுகின்றன?
பிஎம்ஐ (BMI), காலில் வீக்கம், சுவாச விகிதம், ஆக்சிஜன் அளவு, யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக நிற்கும் திறன் என ஐந்து விஷயங்களை காசநோயாளிகளிடம் பரிசோதிப்பது மூலம் அவர்களுக்கு நோய் தீவிரமாக இருப்பது கண்டறியப்படுகிறது.
உடல் எடை மற்றும் உயரம் (BMI) : உடல் எடை மற்றும் உயரத்தைக் கொண்டு கணக்கிடப்படும் BMI (Body Mass Index) -14க்கு குறைவாக இருப்பது : காசநோயாளிகளுக்கு இந்த எண் 14க்கும் குறைவாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிக்கும். அது தீவிர காசநோய்க்கான அறிகுறியாகும்.
கால் வீக்கம் : BMI -14 மற்றும் 16க்கு இடையில் இருந்து காலில் வீக்கம் (pedal oedema) கண்டறியப்பட்டால், அது புரதச் சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறியாகும்.
சுவாச விகிதம் (Respiratory rate): பொதுவாக 14 முதல் 16 ஆக இருக்கும், ஆனால் 24க்கும் மேல் இருந்தால் அவர்களுக்கு தீவிர காசநோய் இருப்பதாக கருதப்படும்.
ஆக்சிஜன் அளவு (SpO2) : ஆக்சிஜன் அளவு 94க்கு குறைவாக இருந்தால் அவர்கள் தீவிர காசநோயாளிகளாக கண்டறியப்படுவர். இதை பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற எளிய கருவி மூலம் நொடிகளில் கண்டறியக் கூடும்.
தனியாக நிற்பது : யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக நிற்க முடிகிறதா என்று பரிசோதிக்கப்படும். அவர்கள் நிற்க முடியவில்லை என்றால், உடல் மிகவும் சோர்வாக இருக்கிறது என்றும் அது தீவிர நோய்க்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது.
உடனடி சிகிச்சையும் தொடர் கண்காணிப்பும்
திருவள்ளூரைச் சேர்ந்தவர் 52 வயதாகும் சாரதி இத்திட்டத்தின் மூலம் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர். அவருக்கு 2023-ம் ஆண்டு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு ஏற்கெனவே பக்கவாதம் ஏற்பட்டு, இருதயத்திலும், மூளையிலும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருந்தன.
தையல் கடையில் வேலை செய்து வந்த சாரதி, பக்கவாதம் ஏற்பட்டதால் அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டார். பிபிசி தமிழிடம் நேரில் பேசிய அவர், “இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனக்கு இருமல் அதிகமாக இருந்தது. சளியுடன் சேர்ந்து ரத்தம் வந்தது. மிகவும் சோர்வாகவும் இருந்தது” என்று நினைவு கூர்கிறார்.
களத்துக்குச் சென்று நோயாளிகளின் தீவிரத்தை சோதிக்கும் ஷஃபீர், “சாரதியின் எடை 40 கிலோ மட்டுமே இருந்தது. அவரது BMI 14க்கு குறைவாக இருந்தது. எனவே TNKET பாசிடிவ் என்று வகைப்படுத்தப்பட்டார், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சையும், உணவும் வழங்கப்பட்டது. உடல் சீரான பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.” என்றார்.
அவரது மனைவி சரளா, “முதலில் ஆறு மாதங்கள் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். பிறகு உடல்நிலையைப் பரிசோதித்து மேலும் இரண்டு மாதங்கள் சாப்பிடுமாறு கூறினார்கள். தற்போது இருமல், சளி தொந்தரவு எதுவும் இல்லை” என்கிறார்.
“எட்டு மாதங்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இணை நோய்கள் இருந்தும், உடனடி சிகிச்சை காரணமாக அவர் காசநோயால் உயிரிழப்பு என்ற ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டார்” என்கிறார் ஷஃபீர்.
முக்கியமான முதல் இரண்டு மாதங்கள்
இத்திட்டம் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில காசநோய் அலுவலர் மருத்துவர் ஆஷா ஃப்ரெட்ரிக் பிபிசி தமிழிடம் பேசும் போது, “காசநோய் இறப்புகளைக் குறைப்பதற்காக, மாநில அளவிலான வகைப்படுத்தப்படும் காசநோய் சிகிச்சை (Differentiated TB Care) எனும் காசநோய் இறப்பில்லா திட்டம் தொடங்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய தொற்றுநோய் நிறுவனத்துடன் (ICMR-NIE) இணைந்து தொடங்கப்பட்டது.”
“மிகவும் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்கள், மூச்சுத் திணறல் அதிகம் இருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படுகின்றனர். நோயாளிகளின் தரவுகளை களத்தில் உள்ள பணியாளர்கள் TB SeWA எனும் டிஜிட்டல் தளத்தில் பதிவிடும்போது, நோயாளிக்கு தீவிர நோய் உள்ளதா, இல்லையா என்று தானாக அதில் தெரிந்துவிடும். இதன் மூலம், ஆபத்துக் கட்டத்தில் இருக்கும் தீவிர நோய் கொண்டிருப்பவர்களை சுகாதார ஊழியர்கள் உடனடியாகக் கண்டறிந்துகொள்ள முடியும். இந்த முயற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் காசநோய் இறப்புகள் குறைந்துள்ளன” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், Dr Asha Frederick
பிபிசி தமிழிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த மருத்துவர் ஹேமந்த் ஷெவடே இத்திட்டம் இறப்புகளை வெகுவாக குறைக்க உதவியுள்ளது என்கிறார். “இத்திட்டம் தொடங்கப்பட்ட ஆறு மாதங்களில், தமிழ்நாட்டில் காசநோய் ஆரம்ப கால இறப்புகள் (காசநோய் கண்டறியப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் இறப்புகள்) 20% குறைந்துள்ளன, ஒட்டுமொத்த காசநோய் இறப்புகள் 10% குறைந்துள்ளன. 2024-ம் ஆண்டு தரவுகள் படி, மாநிலத்தில் சுமார் 23 மாவட்டங்களில் இறப்புகள் 20% முதல் 30% குறைந்துள்ளன” என்கிறார்.
காசநோய் உயிரிழப்புகளை ஆராய்ந்து பார்க்கும்போது நோய் கண்டறியப்பட்ட முதல் சில நாட்கள் முதல் இரண்டு மாதங்களிலேயே அதிகம் நடைபெறுகின்றன என்கிறார் அவர். “இது குறித்த வெளியிடப்பட்டுள்ள ஆய்வு தரவுகளின் படி, காசநோய் இறப்புகளில் 70% முதல் இரண்டு மாதங்களில் நடைபெறுகின்றன. அவற்றில் 50% இறப்புகள் முதல் இரண்டு வாரங்களில் நடைபெறுகின்றன” என்று சுட்டிக்காட்டுகிறார்.
ஏழு நாட்கள் உள்நோயாளி சிகிச்சை
இறப்புகளைத் தவிர்க்க, உடனடி சிகிச்சை மிக அவசியம் என்கிறார் திருவள்ளூர் மாவட்ட காசநோய் அலுவலர் மருத்துவர் சங்கீதா.
“பலருக்கு நோய் அறிகுறிகள் இருந்தும் உடனடியாக மருத்துவ உதவி பெறுவதில்லை. சாதாரண இருமல், சளி என்று நினைத்துக் கொள்கின்றனர். எனவே காசநோயை கண்டறிவதிலேயே தாமதம் ஏற்படுகிறது.” என்றார்.
உள்நோயாளியாக சிகிச்சை பெறுவதன் அவசியம் என்கிறார் சங்கீதா. “நோய் தீவிரமாக இருப்பவர்களுக்கு, வாய்வழியாக உணவு உட்கொள்வது சிரமமாக இருக்கும், மருந்துகளும் உடனடியாக ரத்தத்தில் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கும். அவர்கள் ஆபத்துக் கட்டத்தில் இருப்பார்கள். இது போன்ற தீவிர நோயாளிகளை உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்து குறைந்தபட்சம் ஏழு நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுவதால் அவர்களைக் காப்பாற்ற முடிகிறது” என்கிறார் அவர்.
மருத்துவமனை பணியாளராக இருந்து வரும் 50 வயதாகும் செல்வம் கடந்த ஆண்டு மூச்சுத் திணறலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரை அணுகியபோது மார்பக எக்ஸ்-ரே எடுத்து, அவருக்கு நீண்ட நாட்களாக காசநோய் இருந்திருக்கிறது என்று கூறப்பட்டது. அவரது ஆக்சிஜன் அளவு (SpO2) குறைவாக இருந்தது. அது TNKET வகைப்படுத்துதல் படி, தீவிர நோய்க்கான அறிகுறியாகும்.
“உடனடியாக என்னை மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சைப் பெற மருத்துவர்கள் வலியுறுத்தினர். கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் படுக்கையில் இருந்தேன். ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்றேன். பிறகு தான் உடல் நலம் தேறி சாப்பிட முடிந்தது. இப்போது நான் என் வேலைக்கு மீண்டும் திரும்பிவிட்டேன்” என்கிறார்.
அதேபோன்று, தனியாக யார் உதவியுடனும் நிற்க முடியாததால் தீவிர நோயாளியாக வகைப்படுத்தப்பட்டு, தற்போது திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் 50 வயது கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
“எனது அம்மாவுக்கு ஆறு மாதங்களாக உடம்பு சரியில்லை. அதிகமான இருமல், மார்பு வலி இருந்தது. அவர் தினமும் கூலி வேலைக்கு செல்கிறார். உடனே எந்த மருத்துவரையும் பார்க்கவில்லை. அருகில் இருப்பவர்கள் மருத்துவமனையில் சேர்த்த பிறகே அவருக்கு காசநோய் இருப்பது தெரிய வந்தது. பத்து நாட்களாக சிகிச்சையில் இருக்கிறார். இப்போது அவரால் எழுந்து நடக்க முடிகிறது” என்கிறார் அவரது மகள் கவிதா.
நோய் தீவிரத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் இந்த ஐந்து விஷயங்களை எந்தப் பெரிய கருவிகளோ, ஆய்வகப் பரிசோதனைகளோ இல்லாமல் சுகாதார களப்பணியாளர்கள் எளிதாக செய்யக்கூடியதாக உள்ளது என்கிறார் காசநோயாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்து வரும் நெஞ்சக மருத்துவர் மணிமாலா.
“இந்த ஐந்து விஷயங்களில் ஏதேனும் ஒன்று பாசிடிவ் என்றாலும் அவர்கள் TNKET பாசிடிவ் என்று வகைப்படுத்தப்படுவர். அதாவது தீவிர நோய் கொண்டவர்களாகக் கருதப்படுவர். அவர்களுக்கு தீவிர நோய் கண்டறிந்த பிறகு, குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு அவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. அந்த ஏழு நாட்களில் அவர்கள் உயிரிழப்பு எனும் ஆபத்துக் கட்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டு, உடல்நிலை சீராகிறது” என்கிறார் அவர்.
நோயாளிகளுக்கு புரதச்சத்து நிறைந்த, எளிதில் சாப்பிடக் கூடிய வகையிலான உணவுகள் வழங்கப்படுகின்றன. “சுண்டல், அவித்த முட்டை, சமைத்த கீரை, வாழைப்பழம் அல்லது ஆரஞ்சு பழம், வறுத்த பொட்டுக்கடலை, ஊட்டச்சத்து கலவை கஞ்சி உள்ளிட்டவை அளவிட்டு வழங்கப்படுகின்றன. தீவிர காசநோயாளிகளுக்கு உணவை செரிமானம் செய்வது கடினமாக இருக்கும் என்பதால் முதலில் மாவுச்சத்து கொண்ட உணவும், பிறகு உயர் புரதச்சத்து கொண்ட உணவும் வழங்கப்படுகிறது” என்றும் மணிமாலா கூறுகிறார்.
இத்திட்டம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் கர்நாடகாவில் 2020-ம் ஆண்டும் குஜராத்தில் 2021-ம் ஆண்டும் சோதனை செய்யப்பட்டது. “இந்தியாவில், மாநில அளவில் தொடர்ந்து இத்திட்டத்தை அமல்படுத்தி வருவது எனக்கு தெரிந்து தமிழ்நாடு மட்டுமே. 2024-ம் ஆண்டு டெல்லியில் ஒன்பது மாதங்கள் அமல்படுத்தப்பட்டது. தற்போது இதன் முடிவுகளைப் பார்த்து, அருகில் உள்ள கேரளாவும் இதை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது” என்று மருத்துவர் ஹேமந்த் ஷெவடே.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு