பட மூலாதாரம், HIRABHAI RABARI
-
- எழுதியவர், லட்சுமி படேல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
“எங்கள் ரபாரி சமூகத்தில், மணப்பெண்களுக்கு திருமணத்தின் போது கொலுசு மற்றும் சேலை மட்டுமே வழங்குவதே வழக்கமாக இருந்தது. பின்னர் திருமணத்தின்போது, மணமகன் குடும்பத்தினர் மணப்பெண்களுக்கு தங்கத்தை கொடுக்கும் வழக்கத்தைத் தொடங்கினார்கள். இப்போது, குறைந்தது 20 தோலா (ஒரு தோலா = 11.7 கிராம்) தங்கம் கொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, வசதி இல்லாதவர்கள் திருமணத்திற்காக நிலத்தையும் வீடுகளையும் விற்று அல்லது அடமானம் வைத்து தங்கம் வாங்குகிறார்கள். தங்கம் வாங்குவதற்காக கடன் வாங்கி கஷ்டப்படுகிறார்கள். நகை வாங்கிக் கொடுக்க முடியாத சில இளைஞர்களுக்கு திருமணம் நடப்பதில்லை”
மணமகளுக்கு திருமணத்தின் போது தங்க நகைகளை கொடுக்கும் நடைமுறையால் ரபாரி சமூகம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசும் அம்பாபென் ரபாரி இவ்வாறு கூறுகிறார்.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருவதால், திருமணத்தின்போது தங்க நகைகள் வழங்கும் பாரம்பரியத்தால் ஏற்படும் சமூக சிக்கல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வருவதாக ரபாரி சமூகத்தினர் கூறுகின்றனர்.
இதனால் சிலர் கடனில் மூழ்குகிறார்கள். தற்போது, வடக்கு குஜராத்தின் ரபாரி சமூகத்தினர் திருமணங்களில் ‘நகையை பரிசாக வழங்கும் நடைமுறையை’ நிறுத்தும் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் பிரசாரத்தில் தற்போது, கட்ச், செளராஷ்டிரா, தெற்கு குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரபாரி சமூகத்தினரும் இணைந்துள்ளனர்.
வடக்கு குஜராத்தைச் சேர்ந்த அம்பாபென் உட்பட ரபாரி சமூகத்தைச் சேர்ந்த பல பெண்கள், ‘இந்த பழக்கத்தை நிறுத்துவதற்கான’ பிரசாரத்தில் சேர பிற பெண்களை ஈர்க்கும் வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
பட மூலாதாரம், HAMIR RABARI
‘நகை கொடுக்கும் நடைமுறையை’ நிறுத்துவதற்கான பிரசாரம் குறித்து ரபாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு காலத்தில் கஷ்டமான காலங்களில் பயன்படுத்தப்பட்ட தங்கத்தை வாங்குவதற்காக இப்போது கடன் வாங்கி கஷ்டப்படுகிறார்கள் என்று வருத்தப்படுகின்றனர்.
ரபாரி – பர்வாட் உட்பட மால்தாரி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கனமான ஆபரணங்களை அணிவது வழக்கம் என்று சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்
முந்தைய காலங்களில், மால்தாரி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் வாழ்வாதரமான கால்நடைகள் மூலம் சம்பாதித்த பணத்தில் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குவார்கள். அவசியம் ஏற்படும்போது விற்றுவிடுவார்கள். ஆனால், இப்போது தங்கம் வாங்க சொத்துக்களை விற்கும் நிலைமை வந்துவிட்டது.
“தங்கம் வாங்குவதற்காக கடனாளிகளாகும் ஆண்கள்”
இந்தியச் சமூகத்தில் திருமணத்தின் போது பெண்களுக்கு அவர்களது பெற்றோர் தங்க ஆபரணங்களை கொடுப்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது.
ஆனால், ரபாரி சமூகத்தில் மணமகன் குடும்பத்தினர் மணப்பெண்களுக்கு தங்க நகை கொடுக்கும் வழக்கம் உள்ளது. இந்த சமூகத்தில், மணமகள்களின் பெற்றோரின் நிதி நிலைக்கு ஏற்ப தங்கம் வழங்கப்படுகிறது.
ரபாரி சமூகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அம்பாபென் ரபாரி குறிப்பிடுகிறார்.
“எங்கள் சமூகத்தில் ஒரு இளைஞனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பத்து வருடங்களாகிவிட்டது. திருமணத்திற்கு 30 தோலா தங்கம் வேண்டும் என அவரது வருங்கால மாமியார் சொல்லிவிட்டார். தங்கத்தை வாங்க முடியாததால், திருமணம் நடக்கவில்லை. அந்த இளைஞன் தற்கொலை செய்துக் கொள்ளவிருந்தபோது காப்பாற்றப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. எனவே, சமூகம் ஆண்களை காப்பாற்ற இந்த நடைமுறையை தடை செய்ய வேண்டும்.” என்று கூறுகிறார்.
இந்த நடைமுறை வழக்கமாகிவிட்டது எனக் கூறும் அம்பபென், “பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மருமகள்களுக்கு இவ்வளவு தங்கத்தைக் கொடுப்பதில்லை” என்று கூறுகிறார்.
திருமணத்தின் போது மணமகளுக்கு சராசரியாக 50 முதல் 100 தோலா தங்கம் கொடுப்பது ரபாரி சமூகத்தில் வழக்கம் என்று கூறும் அம்பாபென், தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த விஷயம் பேசுபொருளாகிவிட்டது என்கிறார்.
“நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்திற்கு இவ்வளவு பணம் எங்கிருந்து கிடைக்கும்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
”திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆணிடம் நிலம் இருந்தால், திருமணத்திற்கு தங்கம் வாங்க அதை அடமானம் வைக்கிறார் அல்லது வட்டிக்கு பணம் வாங்கி பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். கடன் தொல்லையால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.” என்றார்.
‘தங்கத்திற்கு பதிலாக கல்வி’
பதான் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷாபென் தேசாய் ரபாரி ஆமதாபாத்தில் வசிக்கிறார்.
பிபிசியிடம் பேசிய ஆஷாபென் தேசாய் ஒரு முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டுகிறார்.
“பெண்களின் குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், திருமணத்திற்காக மணமகனின் குடும்பத்தினர் கடன்பட்டால், திருமணத்திற்குப் பிறகு உங்கள் மகளும் சேர்ந்துதானே அந்தக் கடனை அடைக்க வேண்டியிருக்கும்” என்றார்.
தங்கத்திற்குப் பதிலாக கல்விக்கு செலவிட வேண்டியதன் அவசியத்தை ஆஷா தேசாய் வலியுறுத்துகிறார்.
“நமது சமூகத்தில் நடுத்தர வர்க்க மக்களில் சிலர், தங்கள் குழந்தைகளின் கல்விக்காக பணம் செலவிடுவதற்குப் பதிலாக, சமூக கௌரவத்திற்காக மருமகள்களுக்கு தங்கம் கொடுப்பதற்கே அதிக பணம் செலவிட விரும்புகிறார்கள். ஆனால், யாருமே எப்போதும் தங்கத்தை அணிந்து கொண்டிருப்பதில்லை.”
பதான் மாவட்டத்தின் மக்மம்பூரா கிராமத்தைச் சேர்ந்த ஷில்பா தேசாய் இந்தப் பிரச்னை பற்றி பேசுகையில், “திருமணத்திற்கு தங்கம் கொடுக்கும் எங்கள் சமூகத்தில் உள்ளவர்கள் கடனில் மூழ்குவதை நாங்கள் நேரடியாகவே பார்த்திருக்கிறோம். பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் மணப்பெண்களுக்கு தங்கம் கொடுக்க முடியாத நிலையில், திருமணமாகாமல் இருப்பதையும் பார்க்கிறோம்” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
‘தங்க நகை கொடுப்பதை நிறுத்தும்’ பிரசாரத்தை தொடங்கியது ஏன்?
முந்தைய காலங்களில் வங்கியில் பணத்தை வைப்பதற்குப் பதிலாக தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கிய ரபாரி சமூகத்தினரிடையே தங்கம் வாங்குவது படிப்படியாக வழக்கமாகிவிட்டது.
இருப்பினும், தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், தங்கம் வாங்குவது கடினமாகிவிட்டது.
எனவே, ரபாரி சமூகத்தினரிடையே திருமணங்களில் தங்க நகை கொடுக்கும் நடைமுறையை நிறுத்துவதற்கான பிரசாரத்தை பதான் மாவட்டத்தில் உள்ள சோனாதரா கிராமத்தைச் சேர்ந்த ஹிராபாய் தேசாய் ரபாரி மற்றும் மால்தாரி சமாஜ் இளைஞர் அமைப்பு தொடங்கியுள்ளது.
சமூகத்தைச் சேர்ந்த பலரும் இந்தப் பிரசாரத்தில் இணைந்துள்ளனர். இவர்கள், வடக்கு குஜராத்தில் கிராமம் கிராமமாகச் சென்று சமூகத்தின் பிற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்களை நடத்தி வருகின்றனர். விரைவில் இந்தப் பிரச்னை குறித்து பெரிய மாநாடு ஒன்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிபிசியிடம் பேசிய ஹிராபாய் ரபாரி, “திருமணங்களில் நகைகளை வழங்கும் இந்த நடைமுறையால் கடனில் மூழ்குபவர்களை நாம் பார்க்கிறோம். இந்தப் பிரச்னையை எதிர்கொள்வது சிலர் அல்ல, பலர். எனவே, இதுபோன்ற பிரசாரத்தின் யோசனை இளைஞர்களிடம் முன்வைக்கப்பட்டது. அவர்களும் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்” என்றார்.
“ரபாரி சமூகத்தினர் பல ஆண்டுகளாக தங்கம் மற்றும் வெள்ளியுடன் தொடர்புடையவர்கள். கடந்த காலத்தில், சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பால் விற்று கிடைத்த பணத்தில் உபரியாக இருப்பதில் நகைகளை வாங்குவார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம், அந்த நகைகளை விற்பார்கள். நவீன காலத்தில், நகைகளை வாங்க நிலத்தையும் சொத்தையும் விற்க வேண்டியுள்ளது. இதனால் பலர் கடனில் சிக்கித் தவிக்கின்றனர். இந்தப் பழக்கம் இப்போது வழக்கமாகவும் மாறிவிட்டது.”
“இப்போதெல்லாம், திருமணம் நடக்கும்போது சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானது தங்கம் தொடர்பானது. எனவே திருமணத்தின் போது மணமகளுக்கு தாலி மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை உருவாக்க விரும்புகிறோம்.” என்றார் ஹிராபாய் ரபாரி.
“தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், திருமணத்தின் போது தங்கம் கொடுக்க பல லட்சம் செலவாகிறது. அத்துடன் திருமண செலவுகளுக்கு 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதற்காக, சிலர் நிலத்தை விற்று அல்லது வட்டிக்கு பணம் ஏற்பாடு செய்கிறார்கள்,” என்று மால்தாரி சமாஜ் இளைஞர் அமைப்பின் நிறுவனர் ஹமீர் தேசாய் பிபிசியிடம் தெரிவித்தார்.

பின்னால் உள்ள காரணங்கள் என்ன?
ரபாரி சமூகத்தினரின் திருமணங்களில் தங்க ஆபரணங்களை வழங்கும் இந்த நடைமுறையின் சமூக அம்சம் குறித்து சமூகவியலாளர் & பேராசிரியர் வித்யுத் ஜோஷி பிபிசியிடம் பேசுகையில், “முன்னர், ரபாரி மற்றும் பர்வாட் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவற்றுடன் பயணம் செய்தனர். அந்த நேரத்தில், அவர்கள் தங்கள் சம்பாத்தியத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கினார்கள், அதைப் பாதுகாப்பதில் பிரச்னை இருக்கக்கூடாது என்பதற்காக பெண்கள் அவற்றை அணிந்தனர். அவசியம் ஏற்படும்போதெல்லாம் அதை விற்க முடிந்தது. அவர்கள் வங்கியில் பணத்தைப் போடவில்லை. மேலும், அவர்கள் கால்நடைகளுடன் ஆங்காங்கே பயணம் செய்யும் பழக்கம் உடையவர்கள் என்பதால் வீடுகளும் கட்டிக் கொள்ளவில்லை என்பதால் பணத்தைச் சேமிக்க முடியவில்லை.” என்றார்
காலப்போக்கில் தங்கத்தின் மாறிவரும் பங்கு மற்றும் பிரச்னையின் மூலக் காரணம் பற்றிப் பேசும் வித்யுத் ஜோஷி, “கடந்த காலத்தில் தங்கம் சொத்தாகக் கருதப்பட்டது. இன்று அது முதலீடாக மாறிவிட்டது. தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஆனால், ரபாரி சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இன்னும் பால் மற்றும் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தங்கத்தின் விலை அதிகரித்து வருவதைப் போல, பால் மற்றும் விவசாயப் பொருட்களின் விலை வேகமாக அதிகரிப்பதில்லை.” என்று கூறுகிறார்.
இந்த நடைமுறையின் தோற்றம் குறித்த தனது எண்ணங்களை முன்வைக்கும் வித்யுத் ஜோஷி, “முந்தைய காலங்களில், கால்நடைகளின் மதிப்பு அதிகமாக இருந்ததால், அவர்கள் நில உரிமையாளர்களை விட முக்கியமானவர்களாக இருந்தனர். அவர்களிடம் பணப்புழக்கமும் அதிகம் இருந்தது. அந்த நேரத்தில், திருமணத்தின் போது தங்கத்தை வழங்கும் பாரம்பரியம் தொடங்கியது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பாரம்பரிய கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இனி தங்கத்தை வாங்க முடியாது.” என்று கூறுகிறார்.
சாமானிய மக்களிடையே தங்கத்தின் மீதான ஈர்ப்பைப் பற்றிப் பேசும் வித்யுத் ஜோஷி, “இன்றும் கூட, சமூகத்தில், யாரிடம் அதிக தங்கம் இருக்கிறதோ அவர்களே அதிகம் மதிக்கப்படுகிறார்கள்.” என்று கூறுகிறார்.
பிபிசியிடம் பேசிய கிராமப்புற மேம்பாடு மற்றும் பொருளாதார நிபுணர் மந்தாபென் பாரிக், “திருமணத்தில் தங்கம் கொடுக்கும் நடைமுறைக்குப் பின்னால் உள்ள காரணம் பெண்களுக்கான பொருளாதார பாதுகாப்பு என்று நம்பப்படுகிறது. முந்தைய காலகட்டத்தில் பெண்கள் பெரிய வெள்ளி வளையல்கள் அல்லது கனமான தங்க நகைகளை அணிவார்கள். அவர்கள் இந்த நகைகளை ஃபேஷனுக்காக அல்ல, தங்களின் நிதிநிலைமையை காட்டுவதற்காகவும், பாதுகாப்பாக இருப்பதை வெளிப்படுத்துவதற்காகவும் அணிந்தனர்,” என்று கூறினார்.
தங்க விலை உயர்வின் விளைவுகள் குறித்துப் பேசும் மந்தாபென், “தங்க விலைகள் அதிகரித்து வருவதால், ரபாரி சமூகத்தினர் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரும் இனி தங்க நகைகளை வாங்குவது கடினம். ” என்று கூறுகிறார்.
நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு