2
தூரிகை ஏந்தி வாழ்வைத்
துலங்கிடச் செய்து; வண்ணப்
பேரிகை கொட்டி மண்ணின்
பெருமையைப் பெய்து காட்டி;
மாரி கை கொடுத்தாற் போல
மணிமணிப் படங்கள் தந்து
காரிகை கற்ற எந்தன்
கவியிலும் பொருளாய் ஆனாய்!
கரங்களில் கலைமகள்; காணும்
கண்களில் கலைமகள்; என்றும்
தரங்கொளு நெஞ்சில் கலைமகள்;
தழுவும் அன்பிலே கலைமகள்;
உரங்கொளு ஊற்றில் யாவும்
உறைகிற அவளைக் கொண்டு;
வரங்கொளத் தமிழ்மண் பெற்ற
வரதனாய் உயர்ந்து நின்றாய்!
விரல்களால் வீணை மீட்பார்;
விரகதேன் பருகு நாவின்,
உரசலால் உயிரைக் காண,
ஊதி அம் மூங்கில் பற்றி,
பரவலாம் கானம் செய்வார்;
பார்த்துமே வியக்க நீயோ…
விரல்களால் வித்தை காட்டி,
விண்ணென உயர்ந்து நின்றாய்!
மில்லரின் வீர மேனி
மிடுக்கென ஆக்கி வைத்தும்;
பல்லரும் போரில் தீயாய்ப்
பரவியே போனார் தம்மைக்
கல்லரும் மேனி செய்து;
கசிந்துமே உருகப் பண்ணி;
வில்லரும் விரலால் வண்ணம்
விரைந்துமே தீட்டி நின்றாய்!
தீருவில் வெளியில் தீயாய்
தீய்ந்தவர் உடல்கள் செய்து;
பேருரு வாக நல்ல
பெருமையே தேடி; நன்கு
சேருவில் நாண்போல் நல்ல
செருக்களம் தன்னைக் கீறி;
ஆரிது செய்தார் என்றே…
அழகொடும் வியக்க வைத்தாய்!
தேசமே கையால் தீட்டி…
தெளிவுற வரைந்து வைத்து;
பாசமாம் மண்ணை என்றும்…
பசுமையால் பூசிக் காட்டி;
நாசமாய்ப் போன தெல்லாம்
நயமுடன் வண்ணம் போட்டு;
வேசமே அற்ற, நல்ல
வேங்கையாம் கலைஞன் நீயே!
தரணியே உன்னைப் போற்றும்!
தாய்மணும் உன்னைத் தாங்கும்!
பரணியே பூச்சால் தீட்டும்
பண்பினை வானும் வாழ்த்தும்!
திரணியே இன்றி மாய்ந்து
தீம்விரல் வண்ணம் தேம்ப
ரமணியே எங்கு சென்றாய்
ராகமாய் நிறங்கள் பாடும்!
-செ.சுதர்சன்