சென்னை: பொதுமக்கள் தங்களது சொத்துவரி, தொழில்வரியை ரம்ஜான் விடுமுறை தினத்திலும் செலுத்தலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுமவரி ஆகியவற்றை மாநகராட்சியின் வருவாய்த்துறையில் செலுத்தி வருகின்றனர்.
தொழில் உரிமங்களையும் புதுப்பித்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பு நிதியாண்டு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுமவரி ஆகியவற்றை பொதுமக்கள் செலுத்துவதற்காகவும், தொழில் உரிமங்களை புதுப்பித்து கொள்ளவும் வழிவகை செய்யும் வகையிலும் மாநகராட்சியின் வருவாய்த்துறை வரும் மார்ச் 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31-ம் தேதி (ரம்ஜான்) ஆகிய விடுமுறை நாட்களிலும் இயங்கும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.