பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக ரயில்வே காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட பெண் பயணிகள் பாதுகாப்பு குழுவில் தமிழகம் முழுவதும் ஒரு மாதத்தில் சுமார் 3,000 பெண் பயணிகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோவை ஆகிய நிலையங்களில் இருந்து தலா 100 பெண் பயணிகள் இக்குழுவில் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர்.
கோவை – திருப்பதிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் மகளிர் பெட்டியில் பயணித்த கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்ட சம்பவம், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டல் மற்றும் தங்க செயின் பறித்த சம்பவம் ஆகியவை தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவங்களை அடுத்து, பெண் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்வே போலீஸார், ஆர்.பி.எஃப் போலீஸாருடன் இணைந்து தீவிரமாக கணிகாணிப்பில் ஈடுபடுவது, பாதுகாப்பை அதிகரிப்பது உள்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, ரயில்களில் வழக்கமாக பயணிக்கும் பெண் பயணிகள் கொண்ட ஒரு பாதுகாப்பு குழுவை அமைக்கவும், இதில் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே அதிகாரிகள், மாதாந்திர டிக்கெட் எடுத்து பயணிக்கும் பெண்கள், வழக்கமாக ரயிலில் பயணிக்கும் இதர பெண் பயணிகள் என பலரை உறுப்பினராக சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, பெண் பயணிகளின் பாதுகாப்பு குழு சென்னையில் மார்ச் 27-ம் தேதி தொடங்கப்பட்டது.
தற்போது, இக்குழு தொடங்கி ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பெண் பயணிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். சிறிய ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் 50 பெண் பயணிகள், பெரிய ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் 100 பெண் பயணிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகிறார்கள்.
இதுகுறித்து, தமிழக ரயில்வே காவல் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை ரயில்வே காவல் மாவட்டத்தில் 23 காவல் நிலையங்களும், திருச்சி ரயில்வே காவல் மாவட்டத்தில் 24 காவல் நிலையங்களும் என மொத்தம் 47 நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்கள் வாயிலாக, குழுவில் பெண் பயணிகள் இணைக்கப்படுகின்றனர். சுமார் 3 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். சென்னை மாவட்ட ரயில்வே காவல் பிரிவில் 10 பெரிய ரயில் நிலையங்களில் தலா 100 பெண் பயணிகளும், 13 சிறிய நிலையங்களில் தலா 50 பெண் பயணிகளும் சேர்ந்துள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட நிலையங்களில் தலா 100 பெண் பயணிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயில் பயணத்தின்போது, ஏதாவது குற்றச்சம்பவம் தொடர்பாக இக்குழுவில் உள்ள உறுப்பினர் தகவல் கொடுத்தால், மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு குழுவில் அட்மினாக காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இருப்பார்கள்.
ரயில் பயணத்தின்போது, சிறிய குற்றங்கள் தொடர்பாக தகவல் வருகின்றன. அந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.