சென்னை: விரைவில் வெளியாக உள்ள ரயில்வேயின் புதிய கால அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் அந்த்யோதயா ரயிலின் நேரத்தை அரைமணி நேரம் முன்னதாக மாற்றி அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில்வே துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புதிய கால அட்டவணை வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான புதிய கால அட்டவணை தள்ளிவைக்கப்பட்டு, வரும் ஜன.1-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் விரைவாக செய்து வருகின்றனர்.
குறிப்பாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள இரட்டை இருப்பு பாதை பணிகள் முடிவு பெற்று, ரயில்கள் வேகமாக இயங்கி வருகின்றன. இந்த காரணத்தால் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ள கால அட்டவணையின் பல்வேறு ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வரும் ஜனவரியில் வெளியாக உள்ள ரயில்வேயின் புதிய கால அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் அந்த்யோதயா ரயிலின் நேரத்தை அரைமணி நேரம் முன்னதாக மாற்றி அமைக்க தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கூட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில் சாதாரண மக்கள் பயனடையும் வகையில், தாம்பரம் – நாகர்கோவில் இடையே அந்த்யோதயா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு நாகர்கோவிலை அடைகிறது.
அந்த்யோதயா ரயிலில், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்து வருகின்றனர். இந்த ரயிலை இயக்குவதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், நேரத்தை சிறிது மாற்றி அமைக்க வேண்டும்.
அதாவது, தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா ரயிலின் காலஅட்டவணையை தாம்பரத்திலிருந்து புறப்படும் நேரத்தை மாற்றம் செய்து இரவு 10:30 மணிக்கு புறப்பட வேண்டும். மேலும், இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் அடையும்படி இயக்க வேண்டும்.
இதுதவிர, நாகர்கோவிலிருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுகிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் காலஅட்டவணையை மாற்றம் செய்து இரவு 7:30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும்படி இயக்க வேண்டும். மறுமார்க்கமாக, இந்த ரயிலை தாம்பரத்தில் இருந்து நண்பகல் 12:30-க்கு புறப்படுமாறு இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.