பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
‘அக்டோபர் 1 முதல் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட்டுகளை (General Reserved Tickets) முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்’ என, இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘முதல் 15 நிமிடங்களுக்கு மட்டும் இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தவறான பயன்பாடுகள் தவிர்க்கப்படும்’ என ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ‘இப்படியொரு நடைமுறை அவசியற்றது’ எனவும் ‘கவுன்டர்களில் நடக்கும் தவறுகளைக் களைய வேண்டும்’ என, ஐ.ஆர்.சி.டி.சி முகவர்கள் கூறுகின்றனர். ரயில்வே அமைச்சகத்தின் புதிய நடைமுறையால் யாருக்குப் பயன்?
இந்திய ரயில்வே அமைச்சகம், கடந்த செப்டம்பர் 15 அன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், செயலி வழியாக பொது முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் கட்டாயம்’ என அறிவித்துள்ளது.
‘இதன்மூலம் ரயில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் (common end user) பயனடைவார்கள் என்றும் டிக்கெட் முன்பதிவை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கலாம்’ என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘அதேநேரம், கணினிமயமாக்கப்பட்ட கவுன்டர்களில் பொது முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை’ என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும், ‘ஐ.ஆர்.சி.டி.சியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கு முன்பதிவு நேர கட்டுப்பாடான முதல் 10 நிமிடங்களில் எந்தவித மாற்றமும் இல்லை’ என, ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
டிக்கெட் முன்பதிவின் நன்மைகள் பொதுவான பயனர்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்தவும் நேர்மையற்ற நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசத்தை 120 நாள்களில் இருந்து 60 நாள்களாக ரயில்வே அமைச்சகம் குறைத்தது. ஆனாலும், டிக்கெட் முன்பதிவு மற்றும் தட்கல் முன்பதிவில் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன.
ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. தட்கல் முன்பதிவிலும் இதே நிலைமை நீடிப்பதாக பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
‘தானியங்கி கருவி மூலம் முறைகேடு’
பட மூலாதாரம், IRCTC
இதுதொடர்பாக, கடந்த மே மாதம் 24 -ஆம் தேதி முதல் ஜூன் 2 -ஆம் தேதி வரையிலான தட்கல் முன்பதிவு நிலவரத்தை ஐ.ஆர்.சி.டி.சி ஆராய்ந்தது.
அதன்படி, தட்கல் முன்பதிவு திறக்கப்பட்ட பிறகு முதல் நிமிடத்தில் 4724 டிக்கெட்டுகளும் இரண்டாவது நிமிடத்தில் 20,786 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தட்கல் திறக்கப்பட்ட ஒரு மணிநேரத்துக்குள் 84.02 சதவிகித டிக்கெட்டுகள் விற்பனையானதாகக் கூறியுள்ள ஐ.ஆர்.சி.டி.சி, ‘முதல் ஒரு நிமிடத்தில் டிக்கெட்டுகளை பெறுவதற்கு தானியங்கி கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்’ எனவும் கூறியது.
பட மூலாதாரம், Getty Images
பாட் (bot) என்படும் மென்பொருளைப் பயன்படுத்தி ஒரேநேரத்தில் லட்சக்கணக்கில் முன்பதிவு கோரிக்கைகளை நிரப்பும்போது ஐ.ஆர்.சி.டி.சி சர்வர் முடங்கிவிடுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
போலி பயனர்கள் மூலம் மோசடி நடப்பதை உறுதி செய்த ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம், கடந்த ஆறு மாதங்களில் 2.4 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை நீக்கியுள்ளதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
இதனை சரிசெய்யும் வகையில் இ-ஆதார் திட்டத்தைப் பயன்படுத்த உள்ளதாக, இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
தட்கல் முன்பதிவுக்கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 1 முதல் பொது முன்பதிவு டிக்கெட்டுக்கும் ஆதாரை கட்டாயமாக்கி ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
முதல் நாள் முதல் 15 நிமிடக் கட்டுப்பாடு ஏன்?
“அறுபது நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. ஆனால், முன்பதிவு திறக்கப்பட்ட முதல் நாளில் முதல் 15 நிமிடங்களுக்குள் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன” எனக் கூறுகிறார், இந்திய ரயில்வே பயணியர் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் என்.கே.ரவிச்சந்திரன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” பொங்கல், தீபாவளி போன்ற விழா காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு டிக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, முதல் 2 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிடுகின்றன” என்கிறார்.
பட மூலாதாரம், Ravichandran/Facebook
பிஹார் போன்ற வடமாநிலங்களுக்குச் செல்லும் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு, ஒரு நிமிடத்தில் முடிந்துவிடுவதாகக் கூறும் என்.கே.ரவிச்சந்திரன், “புதிய நடைமுறை மூலம் ஐ.ஆர்.சி.டி.சி முகவர்களும் அங்கீகரிக்கப்படாத நபர்களும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தடுக்க முடியும்” எனக் கூறுகிறார்.
“பொதுவான முன்பதிவு டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்யும் சில முகவர்கள், கடைசி நாளில் ஒரு டிக்கெட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை அதிக விலை வைத்து விற்கின்றனர். இதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை ரயில்வே நிர்வாகம் கொண்டு வருகிறது” எனவும் என்.கே.ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “தேவைப்படும் பயணிகளுக்கு மட்டும் ரயில் டிக்கெட்டுகள் சென்றடையும் வகையில் புதிய நடைமுறை பயன் தரும். இதன்மூலம், அங்கீகரிக்கப்படாத நபர்களையும் முகவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்கிறார்.
‘வணிகரீதியாக பயன்படுத்த முடியாது’
“ஆதார் சரிபார்ப்பு இருப்பதால் முகவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. முதல் 15 நிமிடங்களில் அதிகப்படியான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது குறையும்” எனக் கூறுகிறார், தெற்கு ரயில்வே முதுநிலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ்ச்செல்வன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” சிலர் இமெயில் மூலம் நான்குக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்துக் கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர். ஆதார் சரிபார்ப்பு அவசியம் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும்போது இவை களையப்படும்” என்கிறார்.
“பல்வேறு இமெயில் முகவரிகள் மூலம் தனி நபர்களின் கைகளில் ஐ.ஆர்.சி.டி.சி லாக்-இன் இருந்தாலும் ஆதார் என்பது ஒருவருக்கு மட்டுமே இருக்கும். ஆகவே, அதற்கான ஓடிபி மட்டுமே வரும்” எனவும் செந்தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், senthamilselvan / Facebook
“புதிய நடைமுறையின் மூலம் முதல் 15 நிமிடங்களில் அதிகப்படியான கோரிக்கைகள் சர்வருக்கு வருவது குறையும்” எனக் கூறும் செந்தமிழ்ச்செல்வன், “இதன்மூலம் ஆதார் சரிபார்ப்பு இல்லாதவர்களால் டிக்கெட் எடுக்க முடியாது” என்கிறார்.
“ரயில்வே அமைச்கத்தின் உத்தரவால் தேவைப்படும் பயனர்களே டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க முடியும். ஆதார் சரிபார்ப்பு உள்ளவர்களால், உறவினர்களுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். வணிகரீதியாக பயன்படுத்த முடியாது” எனக் கூறும் செந்தமிழ்ச்செல்வன், “சர்வர் நெருக்கடி அதிகரிப்பதால் அதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அமைந்துள்ளது” எனவும் குறிப்பிட்டார்.
“ஆனால், புதிய நடைமுறையால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை” எனக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த ஐ.ஆர்.சி.டி.சி முகவர் ஒருவர்.
‘கவுன்டர்களில் அதிக முறைகேடு’
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” தட்கல் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு அமல்படுத்தப்பட்டதில் இருந்து பெருமளவு தவறுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்னதாக அடையாளம் தெரியாத பெயர்களில் ஆயிரக்கணக்கில் டிக்கெட் முன்பதிவு நடந்தது” என்கிறார்.
அதேநேரம், கவுன்டர்களில் அதிகளவு தவறுகள் நடப்பதாகக் கூறும் அவர், ” கவுன்டர்களில் ஒரு நபருக்கு ஆறு டிக்கெட்டுகள் வரை எடுக்க முடியும். ஒரு நபர், தன்னுடன் நான்கு பேரைக் கூட்டிச் சென்றால் 24 பேருக்கான டிக்கெட்டுகளை எடுக்கலாம்” எனக் கூறுகிறார்.
“இவர்கள் எடுக்கும் டிக்கெட்டுகளில் பயணம் செய்யும் நபர்களின் ஆதார் எண்கள் சரிபார்க்கப்படுவதில்லை. பயணம் மேற்கொள்ளும்போது ஆறு பேருக்கு தேவைப்பட்டால் ஒரு ஆதார் எண் காட்டினால் போதுமானது. இதைப் பற்றி ரயில்வே நிர்வாகம் ஆய்வு செய்வதில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“ரயில்களில் பயணம் செய்யும் நபர்களின் உண்மைத்தன்மையை ரயில்வே பாதுகாப்புப் படை சோதனை செய்ய வேண்டும்” எனக் கூறும் ஐ.ஆர்.சி.டி.சி முகவர், “விழா காலங்களில் பத்து நிமிடங்களுக்குப் பிறகே முகவர்களால் முன்பதிவு செய்ய முடியும். இதனால் டிக்கெட் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இதர நாட்களில் டிக்கெட் பெறுவதில் பெரிதாக சிக்கல் இருப்பதில்லை” என்கிறார்.
முகவர்களால் பிரச்னை ஏற்படுகிறதா?
கவுண்டர்களில் தவறுகள் நடப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தெற்கு ரயில்வே முதுநிலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, “அதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்கிறார்.
கவுன்டர்களில் ஆதார் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வருமாறு கூறும்போது பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகக் கூறும் செந்தமிழ்ச்செல்வன், “இதுபோன்ற பிரச்னைகள், முகவர்களால் வருவதாக ரயில்வே விஜிலென்ஸ் கூறுகிறது. வாரியத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறுகிறார்.
அடுத்தகட்டமாக கவுண்டர்களில் தவறுகள் நடப்பதைத் தடுக்கும் வேலைகள் தொடங்கப்பட உள்ளதாகக் கூறும் செந்தமிழ்ச்செல்வன், “அவசர பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்காக தட்கல் முன்பதிவில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தேவைப்படும் நபர்கள் மட்டுமே டிக்கெட் பெறும் வகையில் பொது முன்பதிவு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது” எனவும் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு