சென்னை: ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன் கூறியதாவது: பிஹாரைச் சேர்ந்த 28 வயதான தொழிலாளி ஒருவர், கடந்த செப்.26-ம் தேதி சென்னையில் ரயில் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார்.
இதில் அவரது இடது கை தோள்பட்டை வரை துண்டானது. வலது கையும் மணிக்கட்டுக்கு மேல் சிதைந்துவிட்டது. இரு கைகளும் செயல்பட முடியாத நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பேராசிரியர் மருத்துவர் பி.ராஜேஸ்வரி, உதவிப் பேராசியர்கள் உ.ரஷிதா பேகம், வி.எஸ். வளர்மதி, வி.சுவேதா, முதுநிலை மருத்துவர்கள், ஷோனு, அன்னபூரணி, விக்ரம், சந்தோஷினி, மயக்கவியல் நிபுணர் ஜி.சண்முகப்பிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர், அந்த நபருக்கு கைகளை மாற்றி பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ள முன்வந்தனர்.
துண்டான இடது கையின் பகுதியை, வலது முழங்கையில் இணைத்தனர். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையின்போது, எலும்பு கட்டமைப்பு, தசை, நரம்பு மற்றும் ரத்தக் குழாய்கள் மறுசீரமைக்கப்பட்டன. மிக நுட்பமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையின் மூலமாக வலது கையில் ரத்த ஓட்டம் செல்ல தொடங்கியது.
பின்னர், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். கையை முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதுபோன்று கைகளை மாற்றி பொருத்தும் சிகிச்சை இந்தியாவிலேயே இதற்கு முன்பு ஒரேயொரு முறைதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக அளவில் 3 சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
‘கிராஸ் ஹேண்ட் ரீ ப்ளான்டேஷன்’ எனப்படும் இந்த வகை சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை. மிகவும் சவால் நிறைந்த அந்த சிகிச்சையை அரசு மருத்துவர்கள் சாத்தியமாக்கியுள்ளனர். இரு கைகளையும் இழந்திருந்த அவருக்கு இந்த சிகிச்சையின் மூலம் குறைந்தபட்சம் ஒரு கை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.