- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
“சரியான நேரத்தில் சரியான பந்தை வீசினால் வரலாற்றையே மாற்ற முடியும். பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது என்பது எனது ரகசிய ஆயுதம். ஆதலால் சுழற்பந்து என்பது ஒரு கலை, அதை வீசும் அனைவராலும் மாஸ்டராகிவிட முடியாது”
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக, சுழற்பந்துவீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஸ்வினின் வார்த்தைகள் இவை.
உண்மையில் சுழற்பந்துவீச்சில் அஸ்வின் ஒரு மாஸ்டர்தான் (நிபுணர்தான்). ஏனென்றால் அஸ்வின் ஒரு ஓவர் வீசுகிறார் என்றால் அதில் 6 பந்துகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
அஸ்வின் இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து விளையாடுவார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தபின், ஊடகத்தினரைச் சந்தித்த ரவிச்சந்திர அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார்.
ஆஸ்திரேலியத் தொடருக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த அடிலெய்ட் போட்டியில் மட்டுமே ஆடினார். வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் பெரிதாக ஒத்துழைக்கும் மைதானங்களில் சுழற்பந்துவீச்சாளர்களால் சோபிக்க முடியவில்லை. அஸ்வினுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்டில் அஸ்வினுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தநிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் இருந்தும் உடனடியாக அஸ்வின் இந்தியாவுக்கு புறப்படுகிறார் என்று கிரிக்இன்போ இணையதளம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி நாள்
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரராக கடைசிநாள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் ” சர்வதேச அளவில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய வீரராக நான் பங்கேற்பது இதுதான் கடைசி நாள். கிரிக்கெட் வீரராக எனக்குள் இன்னும் மிச்சம் இருப்பதாக உணர்கிறேன். ஆதலால் லீக் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன், என்னை வெளிப்படுத்துவேன்” என்று தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு நன்றி கூறுவதாக குறிப்பிட்ட அஸ்வின் ” இந்திய அணியில் எனக்கு ஏராளமான இனிமையான அனுபவங்கள், நினைவுகள் இருந்தன. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் சக வீரர்களுடன் நான் மிகுந்த விளையாட்டுத்தனமாக இருந்தேன். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக என் சக வீரர்கள் ஓய்வு பெற்று சென்றனர். இந்திய கிரிக்கெட்டில் கடைசி சில ஒரிஜினல் கேங்ஸ்டர்கள் நாங்கள்தான், நாங்களும் ஓய்வறையைவிட்டு சென்றுவிட்டோம். வயதான வீரர்களில் நானும் ஒருவன். என்னுடைய ஓய்வு நாள் இன்றுதான் என்பதை இந்த நேரத்தில் அறிவிக்கிறேன்.” என்றார்.
ரோஹித், கோலி, ரஹானே, புஜாராவுக்கு அஸ்வின் நன்றி
உண்மையில் இந்த நேரத்தில் ஏராளமானோருக்கு நான் நன்றி கூற வேண்டும். ஆனால், பிசிசிஐ மற்றும் சக வீரர்களுக்கு நான் நன்றி கூறாவிட்டால் நான் என் கடமையிலிருந்து நழுவியவனாகிவிடுவேன். அதில் சிலரின் பெயர், பயிற்சியாளர்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக ரோஹித், விராட் கோலி, ரஹானே, சத்தேஸ்வர் புஜாரா ஆகியோர் எதிரணி பேட்டர்களின் பேட்டிலிருந்து தெறித்துப் பாய்ந்த கேட்சுகளை பிடித்து எனக்கு விக்கெட்டுகளை வாரிக் கொடுத்தவர்கள்” எனத் தெரிவித்தார்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட அஸ்வின் மேலும் கூறுகையில் ” அதேபோல ஆஸ்திரேலிய அணிக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். ஏனென்றால் அவர்களுடன் நான் தீவிர கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக விளையாடும் போது ரசித்து ஆடியிருக்கிறேன். இந்த ஓய்வு முடிவை எடுக்க நான் நீண்டகாலம் எடுக்கவில்லை. சிறிது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் இருப்பதால் நான் அதிகமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் விரும்பவில்லை. என்னைப் பற்றி நல்லவிதமாகவும், விமர்சித்தும் எழுதிய, பேசிய ஊடகங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி ” என்று தெரிவித்தார்.
நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர்
இந்தியக் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்குப் பின் சுழற்பந்துவீச்சில் சர்வதேச அரங்கில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒருவர்.
இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வரிசைப்படுத்தினால், அதில் அஸ்வின் பெயர் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெறும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சுழற்பந்துவீச்சில் புதுமை
தொடக்கத்தில் மித வேகப்பந்துவீச்சாளராக இருந்த அஸ்வின், தனது பயிற்சியாளர் சி.கே.விஜயகுமார் அறிவுரையின்படி சுழற்பந்துவீச்சுக்கு மாறினார். அதன்பின் சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் வீரர் டபிள்யு வி ராமன் ஆகியோரிடம் அஸ்வின் பயிற்சி பெற்றார்.
அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன. சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்ற அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஆடுகளமாக இருந்தாலும் பேட்டர்களுக்கு சவாலான பந்துவீச்சாளராகவே இருந்து வந்துள்ளார்.
அஸ்வினின் புத்திக்கூர்மை, பேட்டர்களின் மனநிலை அறிந்து பந்துவீசுவது, அவரின் நுணுக்கமான ‘கேரம் பந்துவீச்சு’, ‘ஆர்ம் பந்துவீச்சு’, ஆஃப் ஸ்பின்னை கட்டுக்கோப்புடன் ‘லைன் மற்றும் லென்த்தில்’ வீசுவது ஆகியவை அவரது மிகப்பெரிய பலங்கள்.
அஸ்வின் ஒரு ஓவரை வீசினால், 6 பந்துகளும் வெவ்வேறு வகையில்தான் வீசுவாரே தவிர, ஒரே மாதிரியாக பெரும்பாலும் வீசியது இல்லை என்பதை கிரிக்கெட் நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி, பேட்டர்களை திணறடிப்பதில் அஸ்வின் தேர்ந்தவர். அதிலும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் அஸ்வின் பேட்டர்களுக்கு எதிராகத் தனி ராஜ்ஜியமே நடத்துவார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்
இந்திய அணிக்குள் அஸ்வின் வருவதற்கு முன்பாக ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் அவரின் பந்துவீச்சு பலராலும் பேசப்பட்டது, கவனிக்கப்பட்டது. அஸ்வின் அசாத்திய பந்துவீச்சுத் திறன், சுழற்பந்துவீச்சு ஆகியவை இந்தியத் தேர்வாளர்களைத் ஈர்த்தது.
இதையடுத்து, 2010-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அஸ்வின் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே அஸ்வின் 32 பந்துகளில் 38 ரன்களும், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அடுத்த ஒரு வாரத்தில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் அஸ்வின் அறிமுகமாகி விளையாடினார்.
அன்றே கூறிய கம்பீர்
2010-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைத் தொடரிலும் இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார். 2010-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 5-0 என தொடரை கைப்பற்றியது. இதில் இந்திய அணி சார்பில் அஸ்வின் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அப்போது கேப்டனாக இருந்த கெளதம் கம்பீர் அஸ்வின் குறித்து கூறுகையில் ” பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீச சரியான வீரர் அணிக்கு கிடைத்துவிட்டார்” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
ஆனாலும், அஸ்வினுக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 2 போட்டிகளில் மட்டுமே ஆடினார்.
2011-ஆம் ஆண்டு நவம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போதுதான் இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் அறிமுகமானார்.
இக்கட்டான நேரத்தில் கைகொடுத்தவர்
இந்திய அணிக்குள் அஸ்வின் வந்தபோது, அணி சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. ஏனென்றால் அது கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக நல்ல சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜனை தவிர வேறு யாரும் அடையாளம் காணப்படாத காலம்.
பகுதிநேரப் பந்துவீச்சாளராக யுவராஜ் சிங் மட்டுமே இருந்தார். அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் இடம் பெற்ற அஸ்வின், கும்ப்ளே இல்லாத குறையை நிவர்த்தி செய்தார்.
அஸ்வின் 2011ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.
அஸ்வின் படைத்த சாதனைகள்
அஸ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் உலகளவில் 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையோடு விடை பெற்றார். அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
37 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகளவில் 2வது இடத்தில் அஸ்வின் உள்ளார். 8 முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அஸ்வின் சாதனை செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் உலகளவில் அதிவேகமாக 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. 66 போட்டிகளில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். 45 போட்டிகளில் 250 விக்கெட்டுகளையும், 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி முதலிடம் பிடித்திருந்தார்.
98 போட்டிகளில் 500-வது விக்கெட்டை வீழத்தி, அந்த மைல்கல்லை விரைவாக எட்டிய 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
116 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அஸ்வின் 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
‘ஆல்ரவுண்டர்’ அஸ்வின்
அஸ்வின் பேட்டிங்கிலும் பிரகாசித்துள்ளார். 6 சதங்கள், 14 அரைசதங்கள் உள்பட 3503 ரன்களை குவித்துள்ள அவரது ரன் சராசரி 25 ஆகும். ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதம் உள்பட 707 ரன்களும், டி20 போட்டியில் 184 ரன்களும் அஸ்வின் சேர்த்துள்ளார். பந்துவீச்சாளராக அடையாளம் காணப்பட்ட தன்னை கடைசியில் ஆல்ரவுண்டர் எனும் நிலைக்கு படிப்படியாக அஸ்வின் உயர்த்திக்கொண்டார்.
அது மட்டுமல்லாமல் 11 முறை தொடர்நாயகன் விருதை வென்று முத்தையா முரளிதரன் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். இலங்கை ஜாம்பவான் முரளிதரன் 64 தொடர்களில் ஆடி 11 தொடர்நாயகன் விருதுகளை வென்ற நிலையில் அஸ்வின் 44 தொடர்களில் விளையாடி 11 தொடர்நாயகன் விருதுகளை கைப்பற்றியுள்ளார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்
அஸ்வின் தனது ஓய்வு அறிவிப்பின் போது குறிப்பிட்டதைப் போல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக மிகவும் ரசித்து ஆடக்கூடியவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 23 டெஸ்ட்களில் 115 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 24 போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்குமுன் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 95 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 45 ஆண்டுகளுக்குப் பின் அஸ்வின் முறியடித்தார்.
அது மட்டுமல்லாமல் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே உள்நாட்டில் மட்டும் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், இதையும் அஸ்வின் முறியடித்து, 383 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
தோனியும், கோலியும்
இந்திய கேப்டன்களில் எம்எஸ் தோனி, விராட் கோலி இருவரும் அஸ்வினின் திறமையை நன்கு பயன்படுத்தினர். தோனி கேப்டன்ஷியில் 3 ஆண்டுகளில் மட்டும் 22 போட்டிகளில் ஆடிய அஸ்வின் 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் விராட் கோலி கேப்டன்ஷியில் 7 ஆண்டுகளில் 55 போட்டிகளில் ஆடி 293 விக்கெட்டுகளையும், ரோஹித் சர்மா கேப்டன்ஷியில் 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.
முரளிதரன், வார்னேவை விஞ்சிய அஸ்வின்
இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி என்று அஸ்வினை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. அஸ்வின் எடுத்த டெஸ்ட் விக்கெட்டுகளில் பாதிக்கு மேற்பட்டவை இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.
எந்த பந்துவீச்சாளரும் சாதிக்காத வகையில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் 255க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது அஸ்வின் இதுவரை வீழ்த்திய 537 டெஸ்ட் விக்கெட்டுகளில் 255க்கும் விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் வீழ்த்தும் சதவீதம் 51% ஆக இருக்கிறது.
சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, மறைந்த ஷேன் வார்ன் ஆகியோர்கூட இடதுகை பேட்டர்களுக்கு எதிராக 150 விக்கெட்டுகளை தாண்டவில்லை.
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 முறை அஸ்வின் பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். டேவிட் வார்னர்(11முறை), அலிஸ்டர் குக் (9 முறை), நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (8 முறை) என அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்த இடதுகை பேட்டர்களின் பெயர் பட்டியல் நீள்கிறது.
அஸ்வின் வாழ்க்கையில் முக்கிய கட்டம்
அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2015-16 சீசன் முக்கியமானது. 8 டெஸ்ட் போட்டிகளில் 336 ரன்கள் குவித்து 48 விக்கெட்டுகளையும் எடுத்தார். அந்த காலகட்டத்தில் 19 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்தார். அந்த ஆண்டில் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும், 2016-இல் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் அஸ்வின் பெற்றார். ஐசிசி அறிவித்த டெஸ்ட் அணியில் 5 முறை அஸ்வின் இடம் பெற்றுள்ளார். 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றார். 2015-ஆம் ஆண்டு அஸ்வினுக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது.
பயணங்கள் முடிவதில்லை…
இந்திய வீரராக அஸ்வின் பந்துவீச்சை இனி ரசிகர்கள் காண முடியாவிட்டாலும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரராக, டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரராக அவரின் பந்துவீச்சைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.