• Sat. Oct 19th, 2024

24×7 Live News

Apdin News

ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி | Legal action against lawyers conspiring with goons: DGP

Byadmin

Oct 19, 2024


சென்னை: ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டால் வழக்கறிஞர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார்.

தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியான சங்கர் ஜிவால், அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், ஐ.ஜிக்கள், டி.ஐ.ஜிக்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அண்மையில் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 20 வரை தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள், 1987 முறை சந்தித்துள்ளனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 ரவுடிகளை மட்டும் 546 முறை சந்தித்துள்ளனர்.

வழக்கு தொடர்பாக கைதிகளை வழக்கறிஞர்கள் சந்தித்தாலும், சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளன. குறிப்பாக சில வழக்கறிஞர்கள், கைதிகளைச் சந்தித்தபோது, சிறையில் உள்ள அலாரம், சந்தேக ஒலியை எழுப்பி உள்ளது. தொடர்ந்து கண்காணித்தபோது, சில வழக்கறிஞர்கள் கைதிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டுவது தெரிய வந்துள்ளது.

மேலும், சிறைக்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை, கைதிகளுக்கு எடுத்துச் செல்வதும் தெரிய வந்துள்ளது. சில வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை தவறாகப் பயன்படுத்துகின்றனர். குற்றவாளிகளுடன் நெருங்கிய உறவு ஏற்படுத்திக் கொள்ளுதல், சிவில் விவகாரங்கள், சொத்து அபகரிப்பு, போலி ஆவணங்கள் தயாரிப்பு, கட்டப் பஞ்சாயத்து செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கைதிகளை சந்திக்க விரும்பும் வழக்கறிஞர்கள், அவர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களுடன், எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். அவருக்கும் கைதிக்கும் இடையிலான, வழக்கு தொடர்பான விபரங்கள், சம்பந்தப்பட்ட கைதிக்கு, அவர் சட்ட ஆலோசகர்தான் என்பதற்கான ஆவணங்களை, சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணங்களை அவர் சரிபார்த்து, கைதிகளைச் சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிப்பார். கைதிகளுடன் சேர்ந்து, சதி திட்டம் தீட்டுவது உள்ளிட்ட செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது தெரியவந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



By admin