பட மூலாதாரம், Getty Images
யுக்ரேனுடன் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அழுத்தம் செலுத்தும் முயற்சியாக, ரஷ்யாவின் மிகப்பெரிய இரண்டு எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.
ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது தான் அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.
முக்கியமாக, இந்தியா இந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அதனால், இந்த தடைகள் இந்தியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
“நான் விளாடிமிருடன் பேசும் ஒவ்வொரு முறையும் உரையாடல் நன்றாக நடக்கிறது, ஆனால் அதற்குப் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை,” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டைச் சந்தித்து, அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து பேசிய பிறகு டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்தார்.
இந்த தடைகள் வளர்ந்து வரும் நாடுகளின் எரிசக்தி அதாவது எண்ணெய் மற்றும் எரிவாயு பாதுகாப்பை பாதிக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஒரு நாள் முன்பு, புடாபெஸ்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திக்கும் திட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
புதன்கிழமை காலை, ரஷ்யா யுக்ரேனில் பெரிய குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியது. இதில் சில குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
“புதின் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர மறுத்ததால்” புதிய தடைகள் அவசியமாகிவிட்டன என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறினார்.
அமெரிக்கா தடை விதித்துள்ள எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யா நடத்தி வரும் போருக்கு பணம் வழங்குகின்றன என்றார் பெசன்ட் .
மேலும், “மோதலை நிறுத்திவிட்டு, உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய நேரம் இது,” என்றும் பெசன்ட் வலியுறுத்தினார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், டிரம்ப் புதினை விமர்சித்தார்.
அவர் “அமைதி ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக இல்லை” என்று டிரம்ப் கூறினார். புதிய தடைகள் ஒரு தீர்வுக்கு வழி வகுக்கும் என அவர் நம்புவதாகவும் தெரிவித்தார்.
“நேரம் வந்துவிட்டது என்று நினைத்தேன். நாங்கள் மிக நீண்ட காலம் காத்திருந்தோம்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
போர் நிறுத்திற்கான முக்கியப் படியாக புதிய தடைகளை விவரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யா போரை நிறுத்த ஒப்புக்கொண்டால், அவற்றை விரைவாக நீக்க முடியும் என்றும் கூறினார்.
இந்த நடவடிக்கையைப் பாராட்டிய மார்க் ருட், இது புதின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு நடவடிக்கை என்றும் கூறினார்.
அமெரிக்காவும் ரஷ்யாவும் முன்வைத்துள்ள அமைதிக்கான முன்மொழிவுகளில் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போதைய போர்முனையில் ரஷ்யா சண்டையிடுவதை நிறுத்த மறுப்பதே முக்கிய தடையாக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
கடந்த வாரம், பிரிட்டன் ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது இதேபோன்ற தடைகளை விதித்தது. பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், “உலக சந்தையில் ரஷ்ய எண்ணெய்க்கு இடமில்லை” என்று கூறியிருந்தார்.
இந்தியா மீதான தாக்கம்
பட மூலாதாரம், Getty Images
மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததால், யுக்ரேன் போர் வெடித்ததிலிருந்து இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை அதிகம் வாங்கும் நாடுகளாக மாறிவிட்டன.
1.4 பில்லியன் மக்கள்தொகைக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்க வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு. இதனால், உள்நாட்டு மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை இல்லாமல் அவர்களின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று இந்தியா பலமுறை விளக்கியுள்ளது.
இந்த நிலையில், தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் வகையில் இருந்தது, ஏனெனில் அது தனது மொத்த எண்ணெய் தேவையின் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின் படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை, இந்தியா தினசரி சராசரியாக 1.73 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கைக் குறிக்கிறது. அதாவது, முன்பு ரஷ்யாவிலிருந்து வந்தது இதைவிட மிகக் குறைவாகவே இருந்தது.
இந்தக் காலகட்டத்தில், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி ஆகியவை ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்குகின்றன. ரிலையன்ஸ் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரிலையன்ஸ் ரோஸ்நெப்டுடன் ஒப்பந்தம் செய்தது. ரோஸ்நெப்டுக்கும் நயாராவில் பங்கு உள்ளது.
கடந்த வாரம் தான், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் நயாரா எனர்ஜி உட்பட பல முக்கிய ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதித்தது.
2024-ஆம் ஆண்டில் ரோஸ் நேஃப்ட் உட்பட பல ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து நயாரா பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள எண்ணெயை வாங்கியது என பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுகிறது.
முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியமும் நயாரா எனர்ஜி மீது தடை விதித்திருந்தது.
பின்னர் நயாரா ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “நயாரா முழுமையாக இந்திய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் வரம்பிற்குள் செயல்படுகிறது. இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பங்களிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என கூறப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடைகள் முற்றிலும் ‘ஆதாரமற்றவை’ என்றும், சர்வதேச சட்டம் மற்றும் இந்தியாவின் இறையாண்மையை புறக்கணிப்பதன் மூலம் விதிக்கப்பட்டுள்ளன என்றும் என்றும் நயாரா தெரிவித்தது.
ரஷ்யாவின் எச்சரிக்கை
பட மூலாதாரம், Getty Images
புதிய தடைகளுக்குப் பதிலளித்த லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம், எங்கள் எரிசக்தி நிறுவனங்களை குறிவைப்பது உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை பாதிக்கும், இதனால் விலை உயர்வு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
“இந்தத் தடைகள் வளர்ந்து வரும் நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அதிகரிக்கும் அழுத்தம் அமைதிப் பேச்சுவார்த்தைகளை இன்னும் கடினமாக்கும்” என்று தூதரகம் கூறியது.
ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகிய இரண்டு ரஷ்ய நிறுவனங்களும் தினசரி சுமார் 3.1 மில்லியன் பீப்பாய் எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன. இதில் ரோஸ்நெஃப்ட் மட்டும் ரஷ்யாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியின் கிட்டத்தட்ட பாதியை வழங்குகிறது. இது உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் சுமார் 6 சதவீதம் ஆகும்.
எண்ணெயும் எரிவாயுவும் ரஷ்யா அதிகளவில் ஏற்றுமதி செய்யும் பொருட்கள். சீனா, இந்தியா, மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அதனை வாங்கும் முக்கிய நாடுகளாக உள்ளன.
ரஷ்யாவின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு டிரம்ப் இந்த நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து இனி எண்ணெய் வாங்க மாட்டேன் என்று இந்தியப் பிரதமர் மோதி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூறினார்.
“அவரும் (பிரதமர் மோதி) என்னைப் போலவே ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போர் முடிவடைவதைக் காண விரும்புகிறார். அவர்கள் இப்போது அதிக எண்ணெய் வாங்குவதில்லை. ஏற்கனவே கணிசமாகக் குறைத்துள்ளனர், மேலும் அதை தொடர்ந்து குறைத்து வருகின்றனர்” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் யெவெட் கூப்பர் அமெரிக்காவின் புதிய நடவடிக்கையைப் பாராட்டி, இந்தத் தடைகளை வரவேற்றார்.
புதிய தடைகளை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம்
பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், யுக்ரேன் போர் குறித்து பெசண்டிடம் தொலைபேசியில் பேசியதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியமும் புதன்கிழமை புதிய தடைகளுக்குஒப்புதல் அளித்தது, அதில் ரஷ்ய எல்என்ஜி இறக்குமதி மீதான தடையும் அடங்கும்.
“ஐரோப்பிய ஒன்றியத்தின் 19வது பொருளாதாரத் தடைகள் தொகுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, அட்லாண்டிக் கடல் கடந்த ஒற்றுமையின் ஒரு அடையாளமாகும்.
ஆக்கிரமிப்பாளரான ரஷ்யாவுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து அழுத்தத்தைத் தொடருவோம்”என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரிட்டனும் அமெரிக்காவும் காஸ்ப்ரோம் நெஃப்ட் மற்றும் சுர்குட்னெஃப்டெகாஸ் மீது தடைகளை விதித்தன.
ஒத்திவைக்கப்பட்ட சந்திப்பு
பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, புடாபெஸ்டில் புதினுடன் “பயனற்ற சந்திப்பை” நடத்த விரும்பவில்லை என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
தற்போதைய போர்முனையில் ரஷ்யா சண்டையிடுவதை நிறுத்த மறுப்பதே முக்கிய பிரச்னை என்று அவர் கூறினார்.
அலாஸ்காவில் நடந்த டிரம்ப் மற்றும் புதினின் கடைசி சந்திப்பு, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியாகக் கருதப்பட்டது, ஆனால் அந்த பேச்சுவார்த்தை எந்த முடிவுக்கும் வரவில்லை.
இந்த வாரம், டிரம்ப்–புதின் சந்திப்புக்குத் தயாராக இருந்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையிலான சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது.
இரு தலைவர்களுக்கும் இடையிலான உரையாடல் “நல்ல விதமாக” நடந்ததாகவும், எனவே “நேரடி சந்திப்பு இனி தேவையில்லை”என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள எல்லைகளில் மோதலைத் தடுக்கவும், அமைதியான தீர்வை உருவாக்கவும் டிரம்ப் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
திங்களன்று பேசிய டிரம்ப், “போர் நிறுத்தப்பட வேண்டும். அனைவரும் வீட்டிற்குச் செல்ல வேண்டும். சண்டையிடுவதை நிறுத்துங்கள், மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள்” என்று கூறினார்.
ஆனால் ரஷ்யா இதனை பலமுறை நிராகரித்துள்ளது.
ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “ரஷ்யாவின் நிலைப்பாடு மாறவில்லை” என்று கூறினார்.
ரஷ்யா, யுக்ரேன் ராணுவம் கிழக்குப் பகுதிகளில் இருந்து முழுமையாக விலக வேண்டும் என்ற கோரிக்கையில் பிடிவாதமாக உள்ளது.
“மோதலின் அடிப்படை காரணங்களைத் தீர்ப்பதே முக்கியம். அதாவது, டான்பாஸ் பகுதியின் மீதான ரஷ்யாவின் முழு இறையாண்மையை அங்கீகரிப்பதும், யுக்ரேன் தனது ஆயுதங்களை ஒப்படைப்பதும் அவசியம்.”
ஆனால், இதை யுக்ரேனும் ஐரோப்பிய நாடுகளும் எந்த வகையிலும் ஏற்க முடியாது.
புதன்கிழமை, ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல் நடத்த அமெரிக்கா யுக்ரேனுக்கு அனுமதி அளித்தது என கூறிய வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியையும் டிரம்ப் முற்றிலும் நிராகரித்தார்.
அதை அவர் “போலி செய்தி” என்று கூறினார்.
யுக்ரேன் அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்கி, அமெரிக்காவிடமிருந்து நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளைப் பெற விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான அச்சுறுத்தல் ரஷ்யாவையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு