படக்குறிப்பு, இந்தியாவிலேயே அதிக ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்கட்டுரை தகவல்
கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய குழுமம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குஜராத் ஜாம்நகரில் உள்ள அதன் ஏற்றுமதிக்காக மட்டுமே சுத்திகரிக்கும் நிலையத்திற்கு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டது.
அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும், மூன்றாம் நாடுகள் வழியாக ரஷ்ய எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருள் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய ரஷ்ய எண்ணெய் உற்பத்தியாளர்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீதான அமெரிக்கத் தடைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“2026 ஜனவரி 21 முதல் நடைமுறைக்கு வரும் தயாரிப்பு -இறக்குமதி கட்டுப்பாடுகளுடன் முழுமையாக இணங்குவதை உறுதிசெய்ய, இந்த மாற்றம் திட்டமிட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளது,” என்று ரிலையன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸின் இந்த நடவடிக்கையை வெள்ளை மாளிகை வரவேற்றுள்ளது.
“இந்த மாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம், மேலும் அமெரிக்கா-இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” என்று வெள்ளை மாளிகை பத்திரிகை அலுவலகம் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு அளித்த தகவலில் கூறியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
பெரிய சிக்கல்
இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு பெரிய சிக்கலாக இருந்து வந்தது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்குவது ரஷ்யாவின் யுக்ரேன் மீதான போருக்கு நிதியளிப்பதாக டிரம்ப் கூறுகிறார். ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது 50% வரிகளை விதித்தார் டிரம்ப் . இதில் ரஷ்ய எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்கியதற்காக 25% அபராதமும் அடங்கும். டிரம்பின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.
போர் தொடங்கிய 2022-க்கு முன் இந்தியாவின் இறக்குமதியில் வெறும் 2.5% இருந்த ரஷ்ய எண்ணெயின் கொள்முதல், 2024-25 நிதியாண்டில் சுமார் 35.8% ஆக உயர்ந்தது.
ரிலையன்ஸ் இந்தியாவில் ரஷ்ய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நிறுவனமாகும், மேலும் நாட்டிற்குள் வரும் ரஷ்ய எண்ணெயில் இது சுமார் 50% ஆகும்.
பட மூலாதாரம், ANDREW CABALLERO-REYNOLDS/AFP via Getty
படக்குறிப்பு, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய ரிலையன்ஸ் – அடுத்த கட்டம் பற்றி நிபுணர் கூறுவது என்ன?
ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை உலகின் மிகப்பெரிய ஒற்றை தள சுத்திகரிப்பு வளாகமாகும். இது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுச் சந்தைக்காக இரண்டு தனித்தனி பிரிவுகளைக் கொண்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல்களைக் குறைக்க இந்தியா பல மாதங்களாக எதிர்ப்புத் தெரிவித்த பிறகு, அதிகரித்து வரும் உலகளாவிய அழுத்தம் காரணமாக இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக தெரிகிறது
கடந்த இரண்டு மாதங்களாக, இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தங்கள் இறக்குமதியைக் குறைத்து வருகின்றன என்று பல செய்திகள் தெரிவிக்கின்றன.
கார்னகி என்டோவ்மென்ட் (Carnegie Endowment) அறிக்கையின்படி, ரிலையன்ஸ் தடை விதிக்கப்பட்ட ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை 13% குறைத்துள்ளது, அதே நேரத்தில் செளதி அரேபியாவிலிருந்து மாதாந்திர இறக்குமதியை 87% ஆகவும், இராக்கில் இருந்து 31% ஆகவும் அக்டோபரில் அதிகரித்துள்ளது.
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளும் டிசம்பர் ஒப்பந்தங்களுக்கு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தவிர்த்து வருவதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இந்தியா தனது இறக்குமதியை கடுமையாகக் குறைத்துள்ள நிலையில், வாஷிங்டன் “இந்தியப் பொருட்களின் மீதான கூடுதல் 25% வரியை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று குளோபல் டிரேட் அண்ட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) சிந்தனைக் குழுவின் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
“இந்தியா அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தபோதிலும் வரியைத் தொடர்வது நல்லெண்ணத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மெதுவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது,” என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஒரு பரந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் காரணமாக கடுமையாகத் தடைபட்டிருந்தன, ஆனால் பல மாத நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகு பதற்றங்கள் படிப்படியாகக் குறைந்து வருவதாகத் தெரிகிறது.