பட மூலாதாரம், Andrew Harnik/Getty Images
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர், இந்தியா அமெரிக்காவின் முக்கியப் பங்குதாரர் என்று தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நடந்துவரும் வர்த்தகப் பேச்சுவார்த்தையின் முடிவு விரைவில் வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவில் தனது நியமனத்தை உறுதிப்படுத்தும் அமர்வின்போது கோர் இந்த கருத்தை வெளியிட்டார்.
தனது நியமனம் உறுதி செய்யப்பட்டால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தப் பாடுபடுவேன் என்று கோர் கூறினார்.
செனட் சபையில் கோரை அறிமுகப்படுத்திய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, கோர் அதிபர் டிரம்ப்புக்கு நெருக்கமானவர் என்றும், இது இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் பிரதிநிதித்துவத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்.
செர்ஜியோ கோர் மேலும் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கூறினார்.
“ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதைத் தடுப்பது அமெரிக்காவின் முன்னுரிமை” என்று அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் எரிசக்தித் துறையில் இந்தியாவுக்கு அமெரிக்கா மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரராக மாற முடியும் என்றும் கோர் கூறினார்.
38 வயதான செர்ஜியோ கோரின் நியமனம் உறுதி செய்யப்பட்டால், அவர் இந்தியாவுக்கான மிக இளைய வயது அமெரிக்கத் தூதர் ஆவார்.
இந்தியா-அமெரிக்கா உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நேரத்தில், டொனால்ட் டிரம்ப் செர்ஜியோ கோரை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகவும், தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான சிறப்புத் தூதராகவும் நியமித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்குவதன் மூலம் யுக்ரேனுக்கு எதிரான போரில் இந்தியா ரஷ்யாவிற்கு உதவுகிறது என்று டிரம்ப் கூறி வருகிறார். இந்தியப் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரியை அவர் விதித்துள்ளார்.
அதே சமயம், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சில காலமாகத் தேக்கமடைந்துள்ளன.
இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் வியாழக்கிழமை கூறினார்.
இருப்பினும், இந்தியா தனது சந்தைகளைத் திறக்க வேண்டும் என்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேறி வருவதாக இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் கூறியிருந்தார்.
மறுபுறம், கடந்த சில நாட்களாக, பிரதமர் மோதியை நல்ல நண்பர் என்று டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். அதே சமயம், ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார்.
பட மூலாதாரம், Bonnie Cash/UPI/Bloomberg via Getty Images
இருதரப்பு உறவுகள் குறித்து செர்ஜியோ கோர் கூறியது என்ன?
இந்தியாவையும் அமெரிக்காவையும் உத்தி ரீதியான பங்குதாரர்கள் என்று செனட் சபையில், செர்ஜியோ கோர் வர்ணித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும் என்றும் கூறினார்.
இந்தியாவை அவர் ஒரு ‘உத்தி ரீதியான பங்குதாரர்’ என்றார்.
இந்த “முக்கியமான” கூட்டணியில் அமெரிக்காவின் நலன்களை மேம்படுத்துவதில்தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
வர்த்தக ஒப்பந்தம் குறித்து கோர் கூறுகையில், “ஓர் ஒப்பந்தம் எட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒப்பந்தத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. உண்மையில், அவர்கள் ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து விவாதித்து வருகின்றனர். சில நேரங்களில் மற்றவர்களை விட இந்தியாவிடம் இருந்து நாம் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அடுத்த சில வாரங்களில் ஒரு தீர்வு காணப்படும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
முன்னதாக, செனட் சபையில் செர்ஜியோ கோரை அறிமுகப்படுத்திய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, “உலகில் அமெரிக்காவின் மிக முக்கியமான உறவுகளில் ஒன்றைக் கொண்ட ஒரு நாட்டிற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும் என்பதில் இந்தியா பெரிய பங்கு வகிக்கும்” என்றார்.
கோர் தனது கருத்தில் இதை மீண்டும் வலியுறுத்தினார். “நான் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டால், அதிபரின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பாடுபடுவேன். இந்தக் கூட்டணியில் அமெரிக்க நலன்களை மேம்படுத்துவதே எனது பணியாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
மோதிக்கும் டிரம்புக்கும் இடையிலான உறவு பற்றிய பேச்சு
இந்தக் கூட்டத்தில், அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோதிக்கு இடையிலான ஆழ்ந்த நட்புறவு குறித்தும் செர்ஜியோ கோர் பேசினார்.
“டிரம்ப் இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோதியைப் பாராட்டவும் செய்கிறார். இருவருக்கும் இடையே ஒரு சிறந்த உறவு உள்ளது” என்று அவர் கூறினார்.
ஆனால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்துப் பேசிய அவர், “வரி விதிப்பு தொடர்பாக எந்த ஒப்பந்தத்திலிருந்தும் நாம் வெகு தொலைவில் இல்லை. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதைத் தடுப்பது இந்த அரசின் முன்னுரிமை” என்றார்.
இந்தியா – அமெரிக்கா கூட்டணி
”இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது, போட்டித்தன்மையில் அமெரிக்காவின் நிலையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தையும் குறைக்கும்” என்று செர்ஜியோ கோர் கூறினார்.
செனட் குழுவின் முன்பு இந்தியாவின் முக்கியத்துவம் குறித்தும் செர்ஜியோ பேசினார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு முதல் மருந்துகள் மற்றும் அரிய பூமி தாதுக்கள் வரையிலானவற்றில் இந்தியாவுடன் அதிக ஒத்துழைப்பு குறித்து செர்ஜியோ கோர் பேசினார்.
அதிபராகப் பதவியேற்ற பிறகு, 2030-க்குள் இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்குவதே தனது நோக்கம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
செர்ஜியோ கோர் இந்த இலக்கையே சுட்டிக்காட்டினார்.
சீனா பற்றிய குறிப்பு
பட மூலாதாரம், Getty Images
பல விஷயங்களில் சீனாவை விட இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதிக ஒற்றுமைகள் இருப்பதாக கோர் கூறினார்.
இந்தியா-அமெரிக்கா உறவுகளில் சமீபத்தில் ஏற்பட்ட கசப்பை அவர் ஒப்புக்கொண்டார். “இப்போது எங்களுக்குள் சில சிக்கல்கள் இருந்தாலும், அவற்றை சரிசெய்ய நாங்கள் பாடுபடுகிறோம். இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களுடனான எங்கள் உறவு பல தசாப்தங்கள் பழமையானது. மேலும், அது சீனாவுடனான அவர்களின் உறவை விட மிகவும் நட்பு நிறைந்தது, ” என்று அவர் கூறினார்.
‘சீனாவின் விரிவாக்கவாதம்’ குறித்து இந்தியா கவலைப்படுவதாக அவர் கூறினார்.
இந்தியா சீனாவுடன் கைகோர்க்காமல், அமெரிக்காவின் அணிக்கு வருவதை உறுதி செய்ய முயற்சி செய்வேன் என செர்ஜியோ கோர் தெரிவித்தார்.
அமர்வின் போது, செர்ஜியோ கோரிடம் பிரிக்ஸ் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக உள்ளது.
இதில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியாவின் இருப்பு அமெரிக்காவிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தவிர, டிரம்ப் 50 சதவீத வரியை விதித்த மற்றொரு நாடு பிரேசில்.
“பிரிக்ஸ் அமைப்பில் இருந்தபோதிலும், பல விஷயங்களில் இந்தியா அமெரிக்காவுடன் இருந்துள்ளது. பிரேசில், சீனா போன்ற பல நாடுகள் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்யாமல் இருக்க முயற்சி செய்துள்ளன, ஆனால் இந்தியா அவ்வாறு செய்யவில்லை,” என கோர் கூறினார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்த கேள்விக்கு அவரது கருத்து இன்னும் தெளிவாக உள்ளது.
“இந்த விஷயத்தில் அதிபர் டிரம்ப் மிகவும் தெளிவாக உள்ளார், ரஷ்ய எண்ணெயை வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும்” என்று செர்ஜியோ கோர் செனட் சபையிடம் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு