3
ரஷ்யாவுடன் தொடர்புடைய இணைய குற்றவாளிகளால் கடுமையான சைபர் தாக்குதல் அச்சுறுத்தல் நிலவி வருவதாக, உயர் பாதுகாப்பு அதிகாரிகள் இங்கிலாந்து நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்து முக்கிய நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான GCHQ இன் கீழ் செயல்படும் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (National Cyber Security Centre -NCSC), ரஷ்ய சார்பு “ஹேக்டிவிஸ்ட்” குழுக்கள் வலைத்தளங்களை செயலிழக்கச் செய்து, பொதுமக்கள் ஒன்லைன் சேவைகளைப் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.
அரசியல் அல்லது சமூக கருத்துகளை வெளிப்படுத்தும் நோக்கில், சட்டவிரோதமாக கணினி அமைப்புகளை அணுகுதல் அல்லது இணைய சேவைகளை முடக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் “ஹேக்டிவிஸ்ட்” குழுக்கள் என அழைக்கப்படுகின்றனர்.
இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் சேவை மறுப்பு (DoS) வகையைச் சேர்ந்தவை என NCSC குறிப்பிட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக எளிமையானவை என்றாலும், இத்தகைய தாக்குதல்கள் ஏற்படுத்தும் பாதிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் எனவும், நிறுவனங்கள் தங்களின் சைபர் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வலுப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த NCSC-யின் தேசிய மீள்தன்மை பணிப்பாளர் Jonathan Ellison, ரஷ்ய-இணைந்த ஹேக்டிவிஸ்ட் குழுக்கள் தொடர்ந்து இங்கிலாந்து நிறுவனங்களை குறிவைத்து வருவதாக எச்சரித்தார். முக்கிய வலைத்தளங்கள் மற்றும் ஒன்லைன் அமைப்புகள் முடக்கப்படும் பட்சத்தில், மக்கள் அன்றாடம் சார்ந்திருக்கும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த இணைய தாக்குதல்களின் பின்னணி நிதி லாபம் அல்ல; கருத்தியல் மற்றும் அரசியல் உந்துதல்களே காரணமாக உள்ளன என NCSC தனது எச்சரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.