ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடந்த சில நாட்களாக வார்த்தைப் போர் நடந்து வருகிறது.
ஆனால் கேள்வி என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ உண்மையில் யார் பொறுப்பு?
இந்தப் பொறுப்பு வாக்காளர்களுடையதா அல்லது தேர்தல் ஆணையத்தினுடையதா? அல்லது இந்த டிஜிட்டல் யுகத்தில் கூட தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வாக்காளர் பட்டியலின் அச்சு நகலைப் பெறும் அரசியல் கட்சிகளின் பொறுப்பா?
கள ஆய்வின்போது நாங்கள் இதே போன்ற கேள்விகளை எதிர்கொண்டோம்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியைப் பற்றி பேசி, சில கேள்விகளை எழுப்பியிருந்தார். குறிப்பாக, இந்த மக்களவைத் தொகுதியில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியை உதாரணமாகக் குறிப்பிட்டிருந்தார்.
‘வாக்குத் திருட்டு’ என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் இரண்டு உதாரணங்களை வழங்கியுள்ளது. முதல் உதாரணம், வாக்காளர் பட்டியலின்படி 80 வாக்காளர்கள் இருக்கும் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் உள்ள வீட்டு முகவரி எண் 35.
முனி ரெட்டி கார்டனில் உள்ள முகவரி எண் 35-க்கு பிபிசி இந்தி சென்றபோது, அங்கு ஒரு அறை கொண்ட பல சிறிய வீடுகள் இருப்பது தெரியவந்தது. இவற்றில் ஒரு நபர் மட்டுமே நின்று வேலைசெய்யும் அளவிலான சமையலறையும் உள்ளது, அருகில் ஒரு குளியலறையும் உள்ளது.
சுற்றிலும் உள்ள எல்லா வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே உள்ளன.
பட மூலாதாரம், IMRAN QURESHI
இந்த வீடுகளில் வசிப்பவர்கள் யார்?
இந்த சொத்தின் உரிமையாளரின் சகோதரரான கோபால் ரெட்டி, இந்த வீடுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வசிப்பதாகக் கூறுகிறார்.
“நாங்கள் இவற்றை தொழிலாளர் குடிசைகள் என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்த மக்கள் இங்கிருந்து இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் இங்கு வரும்போது, வேலை தரும் நிறுவனங்கள் வாடகை ஒப்பந்தத்தைக் கேட்கின்றன. இவர்கள் ஒப்பந்தம் கொடுக்காவிட்டால், அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. பின்னர் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கிறது. அவர்களின் ஊதியம் அதிகரிக்கும்போது, அவர்கள் இங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றுவிடுகிறார்கள். ராகுல் காந்தி ஒரு தேசிய தலைவர். இவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதன் மூலம் அவரை அவமானப்படுத்துகிறார்கள்” என்கிறார் கோபால் ரெட்டி.
இந்த வீடுகளில் ஒன்றில் வசிக்கும் தீபங்கர் சர்க்காரை சந்தித்தோம், அவர் மேற்கு வங்கத்திலிருந்து இங்கு வந்தவர்.
அவர் தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகனுடன் இந்த வீட்டில் வசிக்கிறார். அவர் கடந்த ஒரு வருடமாக பெங்களூரில் வசித்து வந்தாலும், அவர் பணிபுரியும் நிறுவனத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதால் ஒரு மாதத்திற்கு முன்புதான் மகாதேவபுராவிற்கு வந்தார்.
“நான் உணவு விநியோக முகவராக வேலை செய்கிறேன், நான் பெலந்தூர் மண்டலத்தில் வேலை செய்வதால் இந்த அறையை வாடகைக்கு எடுத்தேன். இங்கு எவ்வளவு காலம் இருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை” என தீபங்கர் சர்க்கார் கூறினார்,
தீபங்கரின் அருகில் வசிக்கும் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக பெங்களூரில் வேலை செய்து வருகிறார்.
பெயர் வெளியிட விரும்பாத அவர், “நான் இங்கு வாக்களிப்பதில்லை. நான் மேற்கு வங்கத்திற்கு சென்று அங்கு வாக்களிக்கிறேன். எங்களைப் பற்றி சொல்லப்படுவது சரியல்ல. எங்களில் பலர் இங்கு வாக்களிப்பதில்லை. எங்கள் மாநிலத்திற்கு சென்று அங்குதான் வாக்களிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
‘வாக்குத் திருட்டு’ என்ற குற்றச்சாட்டுக்கு இரண்டாவது உதாரணம் ஒரு சிறிய மதுபான தொழிற்சாலை (மைக்ரோப்ரூவரி) குறிப்பிடப்படுகிறது. 68 வாக்காளர்கள் இந்த முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. பெயர் வெளியிட கூடாது என்ற நிபந்தனையுடன், தொழிற்சாலையின் உரிமை அண்மையில் மாறியதாக இங்கு பணிபுரியும் ஒரு அதிகாரி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
ஆனால் புலம்பெயர் தொழிலாளர்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே பணிபுரிகிறார்கள் என அவருக்கு உறுதியாகத் தெரிகிறது.
பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸின் பரப்புரை
2024 ஆம் ஆண்டில் இதே மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மன்சூர் அலி கான் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை அவர் ஏற்கவில்லை.
“நீங்கள் இவற்றை தவறான உதாரணங்கள் என்று ஏன் கூறுகிறீர்கள்? முனி ரெட்டி கார்டனில் 80 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மைக்ரோப்ரூவரியில் 68 வாக்காளர்கள் உள்ளனர். ஒரு அறையில் இவ்வளவு பேர் பதிவு செய்யப்படுவது எப்படி சாத்தியம்? என்பதுதான் எங்கள் கேள்வி. ப்ரூவரி ஒரு வணிக நிறுவனம், இந்த இடத்தில் வாக்குகள் எப்படி பதிவு செய்யப்பட்டன? பூத் மட்ட அலுவலர்கள் என்ன செய்கிறார்கள்? நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தெளிவான வாக்காளர் பட்டியலை கோருகிறோம்… வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை நாங்கள் வெளிப்படுத்தும்போது, தேர்தல் ஆணையம் ஏன் மௌனமாக இருக்கிறது?” என கேட்கிறார் அவர்.
மன்சூர் அலி கான் மக்களவைத் தேர்தலில் 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பாஜகவின் பி.சி. மோகன் 2009 முதல் நடைபெற்ற நான்கு மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இதே மக்களவை தொகுதியில்தான், பிரகாஷ் ஜாவடேகர் மற்றும் பியூஷ் கோயல் போன்ற பாஜக தலைவர்கள், வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்காக பொதுக்கூட்டங்களை நடத்தினார்கள்.
மகாதேவபுரா-வைட்ஃபீல்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி, வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையில் மக்களை ஈர்த்துள்ளது. பெங்களூரூவில் எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு அடுத்தபடியாக வைட்ஃபீல்ட் இரண்டாவது பெரிய மென்பொருள் தொழில் மையமாகக் கருதப்படுகிறது.
படித்தவர்கள் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களில் இருந்து இங்கு வந்து சிறு வேலைகளைச் செய்யும் மக்களும் இந்த இடத்தில் வசிக்கின்றனர்.
பட மூலாதாரம், ANI
பாஜகவின் வாதம்
வர்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மகாதேவபுரா தனி சட்டமன்றத் தொகுதியில், பாஜக தலைவர் அரவிந்த் லிம்பாவலியின் ஆதிக்கம் உள்ளது.
லிம்பாவலி இங்கு மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டில் அவரது மனைவி இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
அரவிந்த் லிம்பாவலி மூன்று நபர்களின் உதாரணங்களைக் குறிப்பிடுகிறார். இவர்களில் இருவர் மற்ற இடங்களில் படித்து வேலை செய்த பிறகு, பெங்களூரூவில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்ய வந்தவர்கள். மூன்றாவது ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட ஒரு முதிய பெண்மணி.
“நான் இதை ஆய்வு செய்தேன். அவர்களில் ஒருவர் லக்னெளவைச் சேர்ந்தவர். அவருக்கு மும்பையில் வேலை கிடைத்தது, எனவே அவர் அங்கு சென்று வாக்களித்தார். பின்னர் அவருக்கு பெங்களூருவில் வேலை கிடைத்து, அவர் இங்கு வாடகை வீட்டில் வசிக்கிறார். சட்டமன்றத் தேர்தலின்போது அவர் அதே முகவரியில் இருந்து வாக்களித்தார். பின்னர் மக்களவை தேர்தல் வரும்போது அவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறிவிட்டார். காங்கிரஸ் அவரையும் திருடன் என்று கூறுகிறது” என்று லிம்பாவலி கூறினார்,
சாம்ராஜ்பேட்டை மற்றும் சிவாஜிநகர் போன்ற தொகுதிகளிலும் தவறான முகவரிகள் மற்றும் ஒரே பெயரில் பல வாக்குகள் போன்ற பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்று அவர் கூறினார். இந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
“அவர்கள் திருடர்கள் இல்லையா, நாங்கள்தான் திருடர்களா? அவர் (ராகுல் காந்தி) புரிந்துகொள்ள வேண்டும், விசாரிக்க வேண்டும். ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர். இந்த விவகாரத்தில் அவர்கள் கொஞ்சம் புரிதலை காட்ட வேண்டும். மக்கள் மத்தியில் உங்களை பற்றிய பிம்பம் நன்றாக இல்லை என்று எங்களுக்கு தெரியும், ஆனால் முயற்சி செய்தால் அது மாறலாம்,” என்கிறார் லிம்பாவலி.
இந்த குற்றச்சாட்டு குறித்து உள்ளூர் மக்கள் சொன்னதென்ன?
இந்தத் தொகுதியில் உள்ள சில வாக்காளர்கள் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிக்கின்றனர். மக்கள் இங்கு வாக்களித்துவிட்டு, தங்கள் சொந்த மாநிலங்களுக்கும் சென்று வாக்களிக்கின்றனர் என்று சிலர் சொல்கின்றனர்.
“ராகுல் காந்தி கூறுவது உண்மையல்ல. எனக்கு அரவிந்த் லிம்பாவலி மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர் ஏமாற்றுவதில்லை,” என மகாதேவபுராவில் உள்ள ஒரு கடைக்காரரான கிருஷ்ணா, பிபிசி இந்தியிடம் கூறினார்.
இப்பகுதியின் மூத்த குடிமகனான முனி ரெட்டி, இவை அனைத்தும் அரசியல் தவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறுகிறார்.
“எல்லா குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. அதிகாரிகள் பொறுப்பானவர்கள். அதிகாரிகளை மட்டும் குறை கூறுவது சரியல்ல. அவர்கள் திருட்டு நடந்ததாக கூறுகிறார்கள். ஆனால் எப்படி? நீங்களே கூறுங்கள்,” என முனி ரெட்டி கூறுகிறார்,
உள்ளூர்வாசியான சசிகலா, “இங்கு வரும் மக்கள் வாடகை வீடுகளை எடுக்கிறார்கள். அவர்கள் இங்கு வாக்களிக்கிறார்கள், மேலும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றும் வாக்களிக்கிறார்கள்,”என தெரிவித்தார்.
ஆனால், உள்ளூர் கடையின் மேலாளர் தர்ஷன், “இவர்கள் புனையப்பட்ட வாக்காளர்கள் என்பது தெளிவாக உள்ளது, எனவே இவர்களை பட்டியலில் இருந்து நீக்குவது மிகவும் சிறந்தது,” என்று தெரிவித்தார்,
காங்கிரஸ் தலைவர் மன்சூர் அலி கான் மூன்று முக்கிய கேள்விகளை எழுப்புகிறார், “தேர்தல் ஆணையம் ஏன் மௌனமாக உள்ளது? நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்கும்போது, பாஜக ஏன் அதற்கு ஆதரவாக வருகிறது? தேர்தல் ஆணையம் பாஜகவின் பக்கம் நிற்கிறது.”
அரசியல் வாதங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்தாலும், இந்த முழு விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது கேள்விகள் எழுந்துள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு