சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன், தவெக தலைவர் விஜய் சந்திப்பு நடத்தினாரா என்ற சர்ச்சைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பாஜக இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பதை மக்கள் தெளிவுப்படுத்துவார்கள். எஸ்ஐஆருக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் நடத்தியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் எஸ்ஐஆருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.
ராகுல் காந்தியுடன் விஜய் சந்திப்பு குறித்த சர்ச்சை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ நான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கிறேன். எனக்கு இதுபற்றி தகவல்கள் எதுவும் தெரியவில்லை. யாரோ சிலர் இதுபோல ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டு தனக்கு பெயர் சேர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள்.
நான் நேற்று கூட இதுபற்றி தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் பேசினேன். அவர், தனக்கும் இதுபற்றி தெரியவில்லை என்று தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது. எங்கள் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி, பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சொல்லும் தகவல்களே அதிகாரப்பூர்வமானது. கூட்டணி குறித்த விஷயங்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும்.” என்றார்.