தூத்துக்குடி: குலசேகரன்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம், விண்வெளித் தொழில் நிறுவனத்துக்கு உடன்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடன்குடியில் கிராம மக்கள், வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே கூடல் நகர், அமராபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சுமார் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் நிலம், வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள், நிலம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசின் தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகக் துறை சார்பில் விண்வெளித் தொழில் நிறுவனம் அமைப்பதற்கு ஆதியாக்குறிச்சி ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் தங்கள் வாழ்வாதாரம், நிலம் பாதிக்கப்படும் எனக் கூறிய ஆதியாக்குறிச்சி கிராம விவசாயிகள் கடந்த 4-ம் தேதி உடன்குடியில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திரண்டனர். இதில் பங்கேற்ற 203 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உடன்குடியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தில், நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை அமைதி வழியில் நடத்த வேண்டும். வீடுகள் தோறும் கருப்புக் கொடி கட்டுவது, திண்ணைப் பிரச்சாரம் செய்வது, நிலம் எடுப்பால் பாதிக்கப்படாத மக்களையும் போராட்டத்தில் ஈடுபட வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஆதியாக்குறிச்சியில் விண்வெளி பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உடன்குடி பஜாரில் வியாபாரிகள், கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்தில், பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் ரவி, திமுக பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரஸ்வதி பங்காளன், அதிமுக ஒன்றிய செயலாளர் தாமோதரன், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் முருங்கை மகாராஜன் மற்றும் கிராம மக்கள், அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.