சென்னை: ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ-வும், நாமக்கல் மாவட்ட முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர்.சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜன.16) காலை காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளப் பக்கத்தில், “ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் மறைந்ததை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது அதற்கு முன்பும் பல்வேறு நிலைகளில் பல பொறுப்புகளில் சிறப்பாக மக்கள் பணி ஆற்றி வந்தவர் ஆவார். 2021-ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் சுந்தரம் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல் இயக்க நண்பர்கள், நாமக்கல் மாவட்ட மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
அதிமுகவில் பயணித்த காலத்தில் பி.ஆர்.சுந்தரம் 2 முறை எம்எல்ஏ-வாகவும், ஒரு முறை எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின்னர் ஓபிஎஸ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த பி.ஆர்.சுந்தரம், கடைசி காலத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2021-ம் ஆண்டில் திமுகவில் இணைந்த அவர் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக செயல்பட்டு வந்தார். ஆனால் சமீப காலமாக உடல்நிலை பாதிப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை அவர் காலமானார்.