ராஜஸ்தானில் உள்ள கரௌலியின் பெயர் கடந்த சில நாட்களாக செய்திகளில் வந்தது. இதற்கு காரணம் அங்குள்ள மகாபஞ்சாயத்து எடுத்த முடிவுதான் .
ஜனவரி 27 அன்று, கரௌலியின் ரோன்சி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்க மகாபஞ்சாயத்து உத்தரவு பிறப்பித்தது.
மகாபஞ்சாயத்து என்பது ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களின் தலைமையில் கூடும் கூட்டம் ஆகும்.
ரோன்சி கிராமத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கரிரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை அவமதித்து, அதன் உறுப்பினர்களில் ஒருவரின் மீசை மற்றும் முடியை வலுக்கட்டாயமாக வெட்டியதுதான் அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணமாக கூறப்படுகின்றது.
15 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தாவிட்டால், ஒட்டுமொத்த கிராமமும் ஒதுக்கி வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
பஞ்சாயத்தினரின் அழுத்தத்தின் கீழ், ரோன்சி கிராமத்தைச் சேர்ந்த குடும்பம், ஜனவரி 30 அன்று ரூ.11 லட்சப் பணத்தை செலுத்தியது.
மறுபுறம், இந்த சம்பவத்தின் காணொளியும் சமூக ஊடகங்களில் பரவலாக்கப் பகிரப்பட்டது. ஆனால் இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
என்ன நடந்தது?
கரிரி கிராமத்தில் வசிக்கும் பாபுலால் என்பவர், தனது உறவினர்களில் ஒருவரான ஸ்ரீமான் படேல் மூலம் தனது மகன் கமலேஷுக்கும், ரோன்சி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீமான் படேலைத் தவிர, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை.
திருமணப் பேச்சுவார்த்தை முடிந்தவுடன், இரு வீட்டாரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி 17-ஆம் தேதி, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், அந்தப் பெண்ணுக்கு வளையல் அணிவிக்கும் விழாவிற்காக (நிச்சயதார்த்தத்தை உறுதி செய்வதற்கான உள்ளூர் வழக்கம்) ரோன்சி கிராமத்திற்குச் சென்றார் பாபுலால்.
ஆனால், விழாவிற்கு சற்று முன்புதான், அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை என்று மணமகன் வீட்டார் முடிவு செய்தனர்.
இந்தச் சம்பவத்தால் முழு ரோன்சி கிராமமும் அவமானப்படுத்தப்பட்டதாக, கிராம மக்கள் கருதினர்.
சம்பவம் நடந்த மறுநாளே, அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறியதற்காக மணமகன் வீட்டார் ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென, அந்தக் கிராமத்தின் உள்ளூர் தலைவர்கள் முடிவு செய்து, ஒரு பத்திரத் தாளில் எழுதினர்.
அது மட்டுமன்றி, அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், கமலேஷின் சகோதரர் நரேஷின் மீசை மற்றும் தலைமுடியை வெட்டி, அதை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அதனையடுத்து, நரேஷின் மீசை மற்றும் முடியை வெட்டிய சம்பவத்தை, தங்களது கிராமத்திற்கு நேர்ந்த அவமானமாக கருதினர் கரிரி கிராம மக்கள்.
ஆனால், இரு தரப்பினரும் காவல்துறையில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, அவர்களிடையே ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததால், பிரச்னைக்குத் தீர்வு காண பஞ்சாயத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது.
கரௌலி துணைக் காவல் கண்காணிப்பாளர் முராரி லால் பிபிசியிடம் கூறுகையில், “காவல்துறையில் புகார் அளிக்கக் கூறி, இரு தரப்பினரையும் நாங்கள் கேட்டோம். ஆனால் இரு தரப்பினரும் புகார் அளிக்க முன்வரவில்லை. அதனால் தான் இந்த விஷயத்தில் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை” என்றார்.
அதே நேரத்தில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அகில் செளத்ரி இந்த அபராத உத்தரவை சட்டவிரோதமானது என்கிறார்.
மேலும், ” அபராதம் விதிப்பதாக பஞ்சாயத்து எடுத்துள்ள முடிவைக் கவனத்தில் கொண்டு காவல்துறை தாமாகவே முன்வந்து, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யலாம்” என்கிறார் வழக்கறிஞர் அகில்.
காவல்துறையில் புகார் அளித்து சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஜனவரி 27 ஆம் தேதி கரிரி கிராமத்தில் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக, ஒரு பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
இந்த மகாபஞ்சாயத்துக்காக, கரிரி கிராம மக்களுடைய ஒத்துழைப்பின் மூலம் ரூ.1.5 கோடி திரட்டியதாகக் கரிரி கிராமப் பஞ்சாயத்து தலைவரின் பிரதிநிதி பூரன் சிங் கூறுகிறார்.
கரௌலி, தோல்பூர், சவாய் மாதோபூர், தௌசா உள்ளிட்ட பல இடங்களிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மகாபஞ்சாயத்தில் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
மகாபஞ்சாயத்தில், ஸ்ரீமான் படேல் (பிரச்னையைத் தீர்க்க மத்தியஸ்தம் செய்தவர்) மற்றும் கமலேஷ் (நரேஷின் சகோதரர்) ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதன் பிறகு, 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ‘மத்தியஸ்தம் செய்தவர்கள் மற்றும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மீது தவறு’ இருப்பதாக கூறினர்.
“பதினைந்து நாட்களுக்குள் அவர்களது குடும்பத்தினர் ரூ. 11 லட்சம் செலுத்த வேண்டும். முடிவு செய்யப்பட்டுள்ள நேரத்திற்குள் ரூ. 11 லட்சத்தை அவர்கள் செலுத்தாவிட்டால், முழு ரோன்சி கிராமமும் சமூகத்திலிருந்து இருந்து ஒதுக்கி வைக்கப்படும்” என்று மகாபஞ்சாயத்தில் தெரிவிக்கப்பட்டது.
“இது தவிர, மத்தியஸ்தம் செய்த இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனுடன், ரோன்சி கிராமத்தில் கமலேஷ் தரப்பைத் தண்டித்த கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் தலா ஆயிரத்து நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டது.
அதாவது, விலக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் யாரும் இனி பஞ்சாயத்தில் பங்கேற்க முடியாது என்பதுதான் அதன் அர்த்தம்.
அது மட்டுமன்றி, எதிர்காலத்தில் இந்த முடிவுக்கு எதிராக யாரேனும் நடவடிக்கை எடுக்க முயன்றால், ‘மீனா’ சமூகத்தினரால் அவர்களும் தவறு செய்தவர்களாக கருதப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.
‘பஞ்சாயத்து எடுத்த முடிவை ஏற்றுக்கொள்கிறோம்’
நாங்கள் கரிரி கிராமத்திற்குள் நுழைந்த பிறகு, கமலேஷின் வீட்டு முகவரியை விசாரித்துக் கொண்டிருந்தோம்.
அங்கு இருந்த கமலேஷின் உறவினர் விஜய் குமார், “நீங்கள் அவரது வீட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. எங்களது ஒட்டுமொத்த கிராமமும், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களும், பஞ்சாயத்து எடுத்த முடிவை ஏற்றுக்கொள்கிறோம்” என்று பிபிசியிடம் கூறினார்.
பிறகு, நாங்கள் கமலேஷின் வீட்டை அடைந்தோம். கமலேஷ், அவரது சகோதரர் நரேஷ், கமலேஷின் தந்தை பாபு லால் மற்றும் பலர் அங்கு இருந்தனர். அவரது குடும்பத்தினர் எங்களுடன் பேச மறுத்துவிட்டனர்.
ஆனால், பஞ்சாயத்து முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று மட்டும் தெரிவித்தார்கள்.
அந்த கிராமத்தில் வசிக்கும் சோட்டே லால் என்பவர் தன்னை கமலேஷின் மாமா என்கிறார்.
“நிச்சயம் செய்வதற்காக, கமலேஷின் குடும்பத்தினர் ரோன்சி கிராமத்திற்குச் சென்றனர். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் எங்களுக்கு பெண்ணைக் காட்டாததால், நாங்கள் விழா நடத்த மறுத்துவிட்டோம். அதன் பிறகு, அப்பெண்ணின் தரப்பினர் அனைவரையும் பிடித்து, தொலைபேசிகளையும் எடுத்துச் சென்றனர்” என குற்றம் சாட்டுகிறார் சோட்டே லால்.
அவர்கள் நரேஷின் மீசையையும் முடியையும் வெட்டிவிட்டு, பின்னர் கரிரி கிராமத்தைத் தொடர்புகொண்டு, ஊர் பெரியவர்களை ரோன்சி கிராமத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.
“அந்தப் பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறியதற்காக, கமலேஷ் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்து பத்திரத் தாளில் எழுதியுள்ளனர் ரோன்சி பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், ரோன்சி பஞ்சாயத்தின் முடிவு செல்லாது என மகாபஞ்சாயத்து அறிவித்துள்ளது” என்கிறார் சோட்டே லால்.
“இந்த அபராதம் மிகக் குறைவு என நாங்கள் நினைக்கிறோம். எங்கள் ஊர் இளைஞனின் மீசையும் முடியும் வெட்டப்பட்டது மட்டுமல்லாமல், எங்களது முழு கிராமமும் அவமானப்படுத்தப்பட்டுள்ளது” என பெயர் வெளியிட விரும்பாத கிராம மக்கள் சிலர் கூறுகின்றனர்.
ரோன்சி பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்களையும் பஞ்சாயத்துக்கு அழைத்ததாகவும், ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் கரிரி பஞ்சாயத்து தலைவரின் பிரதிநிதியான புரம் சிங் பிபிசியிடம் கூறினார்.
‘திடீரென பெண்ணைப் பிடிக்கவில்லை என்றனர்’
அனால், “நாங்கள் பஞ்சாயத்துக்கு அழைக்கப்படவில்லை” என்றார் அந்தப் பெண்ணின் தாத்தா ஹரி மீனா.
கரிரியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோன்சி கிராமத்தின் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
எல்லோரும் இந்த சம்பவத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.
சுற்றி விசாரித்துவிட்டு, ரோன்சி கிராமத்தின் படா புராவில் வசிக்கும் அந்தப் பெண்ணின் வீட்டை அடைந்தோம். அவரது வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு சிலரும் அங்கு அமர்ந்திருந்தனர்.
ஆனால் அவர்கள் கேமரா முன்பு பேச மறுத்துவிட்டனர்.
“ஜனவரி 10 ஆம் தேதிபாபு லாலின் உறவினர் ஸ்ரீமான் படேல், கமலேஷின் திருமணத்தைப் பற்றிப் பேச வந்தார். அவர் அந்தப் பெண்ணைப் பார்த்து எங்களுக்கு ஒரு ஷாகுன் கொடுத்தார்(திருமண பேச்சு வார்த்தையில், சம்மதம் தெரிவிப்பதற்காக கொடுக்கப்படும் பாரம்பரிய அடையாளம்)” என அந்தப் பெண்ணின் தாத்தா ஹரி மீனா பிபிசியிடம் தெரிவித்தார்.
“நாங்கள் பையனையோ அல்லது அவரது குடும்பத்தையோ பார்க்கவில்லை. எங்கள் வீட்டிற்கு வந்து பெண் பார்க்குமாறு பாபு லாலிடம் பலமுறை தொலைபேசியில் கேட்டுக் கொண்டோம், தனது உறவினர் ஸ்ரீமான் படேல் மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறிவிட்டு, பெண் பார்க்க அவர் வரவேயில்லை” என்கிறார் ஹரி மீனா.
தொடர்ந்து பேசிய அவர், ”எல்லா பேச்சுவார்த்தையும் முடிந்து, அந்தப் பெண்ணுக்கு வளையல் அணிவிக்கும் விழாவிற்காக (நிச்சயதார்த்தத்தை உறுதி செய்வதற்கான உள்ளூர் வழக்கம்) சுமார் 20 பேர் வந்தனர். பின்னர் திடீரென பெண்ணைப் பிடிக்கவில்லை என்றனர். அதனால் அந்த பெண்ணுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் அவமானம் ஏற்பட்டது. நாங்கள் அவர்களிடம் பேச முயன்றோம். ஆனால் அவர்கள் எதையும் கேட்கவில்லை” என்று ஹரி மீனா விவரித்தார்.
கமலேஷின் சகோதரர் நரேஷின் மீசையையும் முடியையும் வெட்டியதற்கு வருத்தப்படுகிறீர்களா, அது தவறு என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? என்று கேட்டோம்.
“நரேஷ் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி, எங்களது பஞ்சாயத்துத் தலைவர்களைத் திட்டினார். அது கோபத்தால் நடந்ததோ அல்லது அவர் எங்களைத் தூண்டிவிட்டாரோ, நீங்கள் எப்படி வேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார் ஹரி மீனா.
“நாங்கள் பஞ்சாயத்துக்கு அழைக்கப்படவில்லை. எங்கள் தரப்பு வாதம் கேட்கப்படவில்லை. ஒரு தரப்பினரின் வாதத்தைக் கேட்ட பிறகு பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளது. பஞ்சாயத்தின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டு, அதன் உத்தரவின் பேரில், எங்கள் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு ரூ.11 லட்சத்தை வழங்குகிறோம்” என்கிறார் அவர்.
11 லட்சம் அபராதத்தை வைத்து என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு, பதிலளித்த பஞ்சாயத்துக் குழு உறுப்பினரான மதன் மோகன், “அபராதமாக வசூலிக்கப்பட்ட பணம் கமலேஷின் தரப்பிற்கு வழங்கப்படாது” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
“இந்தப் பணத்தை நாங்கள் கரிரி கிராமத்திடம் ஒப்படைப்போம். அவர்கள் இந்தப் பணத்தை கோயில்கள், மத நிகழ்ச்சிகள் அல்லது பள்ளிகள் என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.” என்றார்
இதற்கு முன்பும், ஜாதி பஞ்சாயத்துகளுக்கு எதிராக குரல் எழுப்பப்பட்ட பல நிகழ்வுகள் உள்ளன. அதேபோல் பஞ்சாயத்துகள் அபராதம் விதிப்பது சட்டவிரோதமானது என்று பல்வேறு நீதிமன்றங்களும் அறிவித்துள்ளன.
நீங்கள் ஏன் போலீசில் புகார் கொடுக்கவில்லை? என்ற கேள்விக்கு, சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும், அவர்களது கிராம மக்களும், இது தங்கள் சமூகத்தின் விஷயம் என்றும், பஞ்சாயத்தின் முடிவில் தங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறினர்.
கரௌலி காவல் கண்காணிப்பாளர் பிரஜேஷ் ஜோதி உபாத்யாய் பிபிசியிடம் கூறுகையில், “கடந்த பத்து நாட்களில் இரு குடும்பத்தினரிடமும் பேசிவருகிறோம். யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் தயாராக இல்லை. அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், நாங்கள் சட்டப்படி அதற்கான நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
” அரசியலமைப்புச் சட்டம் ‘உரிமை’ வழங்குவதால் பஞ்சாயத்துக்களைக் கூட்டலாம்” என ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அகில் செளத்ரி, பிபிசியிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசியலமைப்பு உரிமை வழங்குவதால் பஞ்சாயத்துகளை அழைக்கலாம், ஆனால் அந்த பஞ்சாயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலோ சட்டவிரோத உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலோ, நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விளக்குகிறார்.
பஞ்சாயத்தில் அந்தப் பெண் தரப்புக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்க முடிவெடுத்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அபராதம் செலுத்தியுள்ளனர்.
இது குறித்துப் பேசிய வழக்கறிஞர் அகில் “இது ஒரு சட்டவிரோத முடிவு. சாதி அல்லது சமூக அமைப்புகளுக்கு அபராதம் விதிக்க உரிமை இல்லை” என்கிறார்.
பஞ்சாயத்துகளின் இத்தகைய உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று கூறிய அவர், 2024 ஆம் ஆண்டில் யோகேந்திர யாதவ் vs ஹரியாணா அரசு மற்றும் சக்தி வாஹினி vs இந்திய அரசு ஆகிய இரண்டு வழக்குகளில் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மேற்கோள் காட்டுகிறார்.
“இந்தப் பிரச்னை தற்போது காவல்துறையின் கவனத்திற்கு வந்தால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் எந்தவொரு தரப்பினரும் புகார் அளித்த பின்னரே காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று அவர் விளக்குகிறார்.
செல்வாக்கு மிக்க பஞ்சாயத்து
ஜனவரி 26 அன்று இந்தியாவின் 76வது குடியரசு தினத்தன்று, நாடு முழுவதும் அரசியலமைப்பு மற்றும் சட்டம் குறித்தான விவாதம் நடைபெற்றது. ஆனால் மறுநாளே ஒரு கிராமப் பஞ்சாயத்து இப்படி ஒரு ஆணை வெளியிட்டுள்ளது.
“சமூக பஞ்சாயத்தின் முடிவை கமலேஷின் தரப்பு ஆதரிக்கிறது. நாங்கள் ஒரு பழங்குடி சமூகம், எங்கள் பஞ்சாயத்து எடுக்கும் முடிவுகளும் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன” என்று பஞ்சாயத்துக் குழுவின் உறுப்பினராக மகாபஞ்சாயத்தில் பங்கேற்ற ஷிரி படேல் பிபிசியிடம் கூறினார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும் பழங்குடியின சிந்தனையாளருமான டாக்டர் கங்கா சஹய் மீனா கூறும்போது, ”இந்தியாவில் நவீன நீதித்துறை இல்லாத காலத்திலும், அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பும் அரசர்கள் நீதி வழங்கினர். எந்த நீதி அமைப்புக்கும் கீழ் இல்லாத பழங்குடியினர் தங்களின் நீதியை தாங்களே நிர்வகித்தனர்” என்று விளக்குகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்தின் தோல்வியே, மக்கள் இன்னும் பஞ்சாயத்துகளை நோக்கித் திரும்புவதற்குக்கான காரணம். காவல் நிலையங்களையும் நீதிமன்றங்களையும், தங்களுக்கு நல்லது செய்யும் பாதுகாப்பான அமைப்பாக பொதுமக்கள் கருதும் அளவுக்கு மாற்ற வேண்டும்” என்கிறார்.
“கரிரி மற்றும் ரோன்சி கிராமங்களின் வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றால், அந்த வழக்கு முடிய குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகலாம். ஏனெனில் இது ஒரு சிவில் வழக்கு. மேலும் இந்த வழக்குகள் முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கப்படுவதில்லை” என்கிறார் அவர்
சமூகவியலாளரும் பேராசிரியருமான ராஜீவ் குப்தா கூறுகையில், “சாதி, மதம் மற்றும் சமூகப் பஞ்சாயத்துகளின் பங்கு செல்வாக்கு மிக்கதாக மாறிவிட்டது. மறுபுறம், அரசியல் வாக்கு வங்கிகள் அவற்றின் பின்னால் உள்ளன. கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் சிலருக்கு உள்ளூர் அதிகாரம் மட்டுமல்ல, அரசியல் வட்டங்களிலும் செல்வாக்கு உள்ளது” என்று விளக்குகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு