எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
ராஜஸ்தானில் தோல் நிறத்துக்காக மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இறப்பதற்கு முன்பு லஷ்மி அளித்த வாக்குமூலத்தில் தனது கணவர் கிஷன்தாஸ் தான் கருப்பு நிறமாக இருப்பதாக தொடர்ந்து துன்புறுத்தி வந்தார் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் கிஷன்தாஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை விவரித்த மாவட்ட நீதிபதி ராகுல் சௌத்ரி, இது “அரிதினும் அரிதான வழக்கு” என்றும் “மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்” என்றும் தெரிவித்தார்.
கிஷன்தாஸ் குற்றமற்றவர் என்றும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவரின் வழக்கறிஞர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
குற்றத்தின் பின்னணி
எட்டு ஆண்டுகள் முன்பு நிகழ்ந்த லஷ்மியின் கொலையும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. இந்தியாவில் நிறம் மீதுள்ள ஈர்ப்பு என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஒன்று. லக்ஷ்மி மீதான தாக்குதல் 2017 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி நிகழ்ந்துள்ளது.
லஷ்மி இறப்பதற்கு முன்பாக காவல்துறை, மருத்துவர்கள் மற்றும் நீதிபதியிடம் கூறிய வாக்குமூலங்கள் அந்த தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
2016-ம் ஆண்டில் அவர்களுக்கு திருமணம் ஆனதிலிருந்தே தனது கணவர் அவரை அடிக்கடி கருப்பு நிறத்துக்காக ‘காளி’ (ஹிந்தியில் காளா என்பது கருப்பு நிறத்தைக் குறிக்கும் சொல்) என அழைத்தும் உருவக்கேலியும் செய்து வந்ததாக லஷ்மி தெரிவித்துள்ளார்.
அவர் இறந்த நாளன்று, கிஷன்தாஸ் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் பழுப்பு நிற திரவம் ஒன்றை எடுத்து வந்துள்ளார். இது அவரின் தோலை அழகாக்குவதற்கான மருந்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குமூலங்களின்படி, லஷ்மியின் உடலில் திரவத்தை தேய்த்துள்ளார் கிஷன், அதன் பின்னர் அந்த திரவத்தில் அமிலம் போன்ற வாசனை வருகிறது என லஷ்மி புகார் அளித்தபோது ஊதுபத்தியை பயன்படுத்தி அவர் மீது தீ வைத்துள்ளார். லஷ்மியின் உடல் எரியத் தொடங்கியபோது மீதமுள்ள திரவத்தை அவர் மீது ஊற்றிவிட்டு ஓடிவிட்டார் கிஷன்.
கிஷனின் பெற்றோரும் சகோதரியும் லஷ்மியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பட மூலாதாரம், Getty Images
நீதிபதி கூறியது ஏன்?
“மனதை வதைக்கும் இந்த குற்றம் லஷ்மிக்கு எதிரானது மட்டுமல்ல, மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் எனக் கூறுவது மிகையாகாது. கிஷன் அவரின் நம்பிக்கையை உடைத்து, அவர் எரிந்தபோது மீதமுள்ள திரவத்தை அவர் மீது ஊற்றி அதீத குற்றத்தைக் காண்பித்துள்ளார்” என நீதிபதி சௌத்ரி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
“மனிதகுலத்தின் மனசாட்சியை உலுக்கும் இந்த குற்றம் ஒரு ஆரோக்கியமான, நாகரீகமான சமூகத்தில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது ஒன்று” என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மற்றவர்களுக்கு ஓர் பாடம்’
பிபிசியிடம் பேசிய அரசு வழக்கறிஞர் தினேஷ் பலிவால் இந்த தீர்ப்பை வரலாற்றுச் சிறப்பு மிக்கது எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீர்ப்பு சமூகத்தில் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“தனது 20களில் உள்ள ஒரு இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர் ஒருவரின் சகோதரியாகவும் மகளாகவும் உள்ளார். அவரை நேசித்தவர்களும் உள்ளனர். நமது மகள்களை நாம் காப்பாற்றவில்லையென்றால் வேறு யார் செய்வார்கள்?” என்று தெரிவித்தார்.
மரண தண்டனையை உறுதி செய்ய தீர்ப்பை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளதாகக் கூறும் பலிவால், தீர்ப்பை மேல்முறையீடு செய்ய தண்டிக்கப்பட்டவருக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
கிஷனின் வழக்கறிஞர் சுரேந்திர குமார் மெனாரியா பிபிசியிடம் பேசுகையில், “லஷ்மியின் மரணம் ஒரு விபத்து தான், கிஷனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை, அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
உதய்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, வெள்ளை நிறம் மீதான இந்தியாவின் ஆரோக்கியமற்ற தேர்வை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
கருமையான நிறம் கொண்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் இழிவான பெயர்களால் அழைக்கப்பட்டு பாகுபாட்டுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தோலை வெண்மையாக்குவதாகக் கூறப்படும் பொருட்களின் வணிகம் மிகப்பெரியது, பல பில்லியன் டாலர் லாபம் சம்பாதிக்கக்கூடியது.
திருமண இணையதளங்களிலும் தோல் நிறம் என்பது எப்போதும் முன்னிறுத்தப்படுகிறது. அங்கு வெளிர் நிறம் கொண்ட பெண்களுக்கு அதிக தேவை உள்ளது.
சமீப வருடங்களாக வெள்ளை நிறம் தான் சிறந்த நிறம் என்கிற பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கைக்கு எதிரான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், ஆழமாக வேரூன்றியுள்ள முன்முடிவுகளை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு