கடந்த 1971ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று, ஶ்ரீநகரில் இருந்து ஜம்முவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அந்த விமானம். இந்தியன் ஏர்லைன்ஸ் ஃபோக்கர் ஃபிரண்ட்ஷிப் விமானமான ‘கங்காவில்’ பயணித்த இரு இளைஞர்கள் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் மிகவும் இளையவர். அவருக்கு மீசைகூட சில வாரங்களுக்கு முன்புதான் அரும்பியிருக்கக் கூடும்.
அந்தக் காலகட்டத்தில் விமானத்தில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் செல்வ செழிப்பானவர்கள். பாதுகாப்பு சோதனைகள் மிகவும் மேம்போக்காக நடைபெற்ற காலம் அது.
அந்த இரண்டு இளைஞர்களும் பதற்றமடைய இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர்கள் அப்போதுதான் முதல்முறையாக விமானத்தில் பயணம் மேற்கொள்கின்றனர். இரண்டாவதாக அவர்கள் இருவரும் அந்த விமானத்தைக் கடத்த வந்தவர்கள்.
அந்த விமானம் சரியாக காலை 11.30 மணிக்கு ஜம்முவை நோக்கி பறக்கத் துவங்கியது. அடுத்தடுத்து என்ன நடந்தது என்பதைத் தன்னுடைய, ‘தி வார் தட் மேட் ஆர் & ஏ.டபிள்யூ’ (The War That Made R&AW) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர்கள் அனுஷா நந்தகுமாரும் சந்தீப் சகேத்தும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
“அந்த இரண்டு இளைஞர்களில் ஒருவரான ஹஷிம் குரேஷி ஜன்னலுக்கு அருகே அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் இருந்த அஷ்ரஃப் குரேஷியை அவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். சில நொடிகளில் இருவரும் தலையை அசைத்தனர். மெல்லிய குரலில் கல்மாவை கூறிக் கொண்டு வந்தனர். கல்மா என்பது இஸ்லாத்தின் நம்பிக்கைப் பிரகடனம். கல்மாவை கூறிய பிறகு, சீட் பெல்ட்டை தளர்த்திவிட்டு, கீழே குனிந்து ஒரு கையில் துப்பாக்கியை எடுத்தார் ஹஷிம். அவரது மற்றொரு கையில் கையெறி குண்டு இருந்தது,” என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஹஷிம் அங்கிருந்து விமானிகளின் இருக்கைக்கு ஓடினார். கையில் வைத்திருந்த துப்பாக்கியின் பின்புறத்தைக் கொண்டு விமானியின் தலையில் ஓங்கி அடித்தார். ஹஷிம், விமானத்தை தன்னுடைய முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். அஷ்ரஃப், விமானிகளின் பிரிவுக்கு முன்பு கையில் கையெறி குண்டோடு நின்று கொண்டிருந்தார்.
நடந்தவற்றைப் பார்த்த பயணிகள் செய்வதறியாது அழ ஆரம்பித்தனர், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அஷ்ரஃப் அங்கிருக்கும் அனைவரையும் அமைதியாக இருக்ககுமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து விமானத்தில் மரண அமைதி நிலவியது,” என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் டெல்லி லோதி சாலையில் அமைந்திருக்கும் ‘ரா’ உளவு அமைப்பின் தலைமை அலுவலகம், பாகிஸ்தானில் அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வையும் கவனமாகக் கண்காணித்து வந்தது.
பாகிஸ்தானில் ஏற்பட்டிருந்த ராணுவ புரட்சி, யஹ்யா கான் பதவிக்கு வருவது, ஷேக் முஜிபூர் ரஹ்மான் தேர்தல் வெற்றி பெற்றது, அதிகாரத்திற்கு வருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவை தொடர்பாக தீவிர மதிப்பாய்வில் ரா உளவு அமைப்பின் தலைவரான ராம்நாத் காவும் அவருடன் பணியாற்றிய இதர அதிகாரிகளும் ஈடுபட்டிருந்தனர்.
மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான் இடையே அதிகரித்து வந்த விமானப் போக்குவரத்து, ரா உளவு அமைப்பின் தலைவருக்கு கவலையை அளித்த பல விவகாரங்களில் முக்கியமான ஒன்று.
ஹஷிம் குரேஷியின் கைது
அன்றைய மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தானில் இருந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. கிழக்கு பாகிஸ்தானுக்கு செல்லும் ஒவ்வொரு பாகிஸ்தானியரும் இந்திய வான்வெளி பரப்பின் வழியாகவே பறக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
பாகிஸ்தானிய விமானங்கள் இந்திய வான் பரப்பின் வழியாகச் செல்வதைத் தடுக்க என்ன செய்யலாம் என்ற விவாதம் ‘ரா’வில் நடைபெற்று வந்தது. இது யஹ்யா கானுக்கு புதிய பிரச்னைகளை உருவாக்கியது.
இதற்குச் சரியான காரணத்தை உலகுக்கு வழங்க வேண்டிய தேவையும் ரா அமைப்புக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில்தான் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் இருந்து ஒரு செய்தி உளவுத்துறை உயரதிகாரி காவுக்கு கிடைத்தது.
இந்திய எல்லையில் ஹஷிம் குரேஷி என்ற நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. அவர் இந்தியாவுக்குள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைக் கொண்டுவர முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்தார்.
“விசாரணையின்போது, 1969ஆம் ஆண்டு ஹஷிம் அவருடைய உறவினருடன் சில நாட்களைச் செலவிட பெஷாவர் சென்றதாகவும் அங்கே அவர் மக்பூல் பட்டை சந்தித்ததாகவும் கூறினார். மக்பூல் பட் தேசிய விடுதலை முன்னணியை (National Liberation Front) நிறுவியவர்,” என்று தங்களின் புத்தகத்தில் அனுஷாவும் சந்தீப்பும் குறிப்பிட்டுள்ளனர்.
“அந்தச் சந்திப்பில் ஹஷிம் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார். காஷ்மீரின் விடுதலைக்காகப் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அப்போதுதான் அவரிடம் இந்திய விமானத்தைக் கடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தேசிய விடுதலை முன்னணியின் கொள்கைகளை உலகுக்குத் தெரிவிக்க முடியும் என்றும் அவரிடம் கூறியுள்ளனர்.”
“விசாரணையின்போது, ஹஷிம் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் பல விவகாரங்களைக் குறிப்பிட்டிருந்தார். அவர் ராவல்பிண்டியில் உள்ள சக்லதா விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது குறித்து விவரித்தார். அங்கே அவருக்கு ஃபோக்கர் ஃப்ரெண்ட்ஷிப் விமானம் எப்படி இருக்கும் என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
அங்கே, பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் விமானி ஜவேத் மிண்டோ, அந்த விமானம் தொடர்பான அனைத்து தகவலையும் ஹஷிமுக்கு வழங்கியுள்ளார். அந்த விமானத்தைக் கடத்தும் நோக்கில் அவரிடம் சில ஆயுதங்களைக் கொடுத்து இந்திய எல்லையைக் கடக்க உத்தரவிட்டிருந்தனர்,” என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராஜீவ் காந்தியின் விமானத்தை கடத்த திட்டம்
கடந்த 1969ஆம் ஆண்டு கராச்சி விமான நிலையத்தில் எரித்ரேயன் விடுதலைப் படையைச் சேர்ந்த மூன்று ஆயுதமேந்திய போராட்டக்காரர்கள் எத்தியோப்பிய ஏர்லைன்ஸை சேர்ந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் தாக்குதல் நடத்திய எரித்ரேயன் கொரில்லா படையினர் கைது செய்யப்பட்டு ஓராண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம், இந்தக் தீவிரவாதிகளுக்கு இந்திய விமானத்தை கடத்தும் எண்ணத்தை உருவாக்கியது.
அனுஷாவும், சந்தீப்பும் அவர்களின் புத்தகத்தில் இந்த விசாரணை தொடர்பாக மேலும் பல ஆச்சர்யம் அளிக்கும் தகவல்களை வழங்கியுள்ளனர்.
“எல்லை பாதுகாப்புப் படையினர், ஹஷிமிடம் ஒரு விமானத்தைக் கடத்துவதன் மூலம் காஷ்மீர் விடுதலை அடைந்துவிடுமா என்ற கேள்வியை எழுப்பினார்கள். ஹஷிம் அதற்கு அளித்த பதில் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி இயக்கிய விமானத்தைக் கடத்துமாறுதான் தனக்குத் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்,” என்று புத்தகத்தில் அதன் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடத்தல் முயற்சியை முறியடிக்க திட்டமிட்ட ரா அமைப்பு
ராஜீவ் காந்தி முறையாக பயிற்சி பெற்ற ஒரு விமானி. அவர் இந்தியன் ஏர்லைன்ஸில் விமானியாக அந்த நேரத்தில் ஜம்மு – ஶ்ரீநகர் பிரிவில் விமானங்களை இயக்கி வந்தார்.
ரா அமைப்பின் தலைவர் காவ், இந்த விசாரணை மூலம் கிடைத்த தகவல்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஒரு எதிர் திட்டத்தை உருவாக்கினார். அதற்கு அன்றைய பிரதமரான இந்திரா காந்தியால் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ரா அமைப்பும், எல்லை பாதுகாப்புப் படையினரும் ஹஷிமை அவர்களுக்காகப் பணியாற்ற ஒப்புக்கொள்ள வைத்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் சிறைத் தண்டனையில் இருந்து தப்பிக்க இயலும் என்று அவரிடம் கூறப்பட்டது.
முன்னாள் ரா அதிகாரி ஆர்.கே. யாதவ், அவரின் மிஷன் ஆர் & ஏ.டபிள்யூ (Mission R & AW) என்ற புத்தகத்தில், “இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்த ஹஷிம் குரேஷிக்கு அனுமதி வழங்கி திட்டம் உருவாக்கப்பட்டது,” என்று கூறுகிறார்.
“அங்கிருந்து அவர் லாஹூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய சிறைகளில் உள்ள அல்-ஃபட்டா அமைப்பைச் சேர்ந்த 36 பேர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வைத்தார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஜுல்ஃபிகர் அலி பூட்டோவை நேரில் சந்திக்க அனுமதிக்காத வரை விமானத்தின் முழுமையான கட்டுப்பாட்டை பாகிஸ்தானிய அதிகாரிகளுக்கு வழங்கக் கூடாது என்றும் அவரிடம் கூறப்பட்டது,” என்று யாதவ் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
“பூட்டோவுடனான சந்திப்புக்குப் பிறகு, இந்திய விமானத்தை வெடிக்க வைக்க வேண்டும். அப்போது, இந்திய சிறைகளில் உள்ள தீவிரவாதிகளை விடுவிப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்ற செய்தி உலகத்திற்கு வெளிச்சமாகிவிடும் என்று திட்டம் தீட்டினார் காவ்,” என்று யாதவ் குறிப்பிடுகிறார்.
“இந்தத் திட்டத்தின் ரகசிய தன்மையைப் பாதுகாக்க குரேஷி பெங்களூருவில் அமைந்திருந்த ரா அமைப்பின் பாதுகாப்பு அமைவிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் அரசுக்கோ, பாதுகாப்பு முகமைகளுக்கோ தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை,” என்றும் யாதவ் குறிப்பிடுகிறார்.
லாஹூரில் தரையிறங்க அனுமதிக்கப்பட்ட விமானம்
இந்தத் திட்டத்தின் கீழ், ஹஷிமுக்கு எல்லை பாதுகாப்புப் படையில் வேலை வழங்கப்பட்டது. பெங்களூரு படைப்பிரிவு 102இல் பணியாற்ற அவருக்குப் பணி ஆணை வழங்கப்பட்டது.
விமானத்தைக் கடத்தும் திட்டத்தில் அவருக்கு உதவியாக இருக்க, அவரின் உறவினரான அஷ்ரஃப் குரேஷி அழைத்துக் கொள்ளப்பட்டார். அதே நேரத்தில், திருடர்களை அச்சுறுத்தப் பயன்படும் வகையிலான, உண்மையான துப்பாக்கியைப் போலத் தோற்றம் அளிக்கும் துப்பாக்கிகள் தொடர்பான விளம்பரம் நாளிதழ்களில் வெளியாகின.
ஹஷிம் அப்படி ஒரு துப்பாக்கியை வாங்கினார். அஷ்ரஃபோ மரத்தால் செய்யப்பட்ட கையெறி குண்டு போன்ற ஒரு மாதிரிக்கு சாயம் பூசிக் கொண்டு வந்திருந்தார்.
இந்த மொத்த திட்டமும் 1971ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதியன்று நடைமுறைபடுத்தப்பட்டது.
இந்திய விமானப்படை சேவையில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்ட விமானத்தை இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமாக மாற்றியது. அந்த விமானம் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. அனைத்திந்திய ரேடியோ சேவையில் இந்த விமானம் கடத்தப்பட்டது தொடர்பாக செய்தி வெளியாகவும் இந்தியா முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின.
ஹஷிமின் உத்தரவுப்படி விமானம் ராவல்பிண்டியை நோக்கிப் பயணித்தது. விமானத்தின் கேப்டன் எம்.கே. கச்ரு, ராவல்பிண்டி வரை பறப்பதற்கான எரிபொருள் விமானத்தில் இல்லை என்று எச்சரித்துள்ளார்.
என்ன ஆனாலும் சரி விமானம் லாஹூரில் தரையிறக்கப்படும் என்ற முடிவு எட்டப்பட்டது. லாஹூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைப்பு விடுத்த கச்ரு, லாஹூர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரினார்.
உயரதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு லாஹூரில் அந்த விமானம் தரையிக்கப்பட்டது. போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் இந்திய விமானம் லாஹூரில் வெடித்துச் சிதறினால் அது பாகிஸ்தானுக்கு அவமானகரமானது என்று யஹ்யாவின் அரசு பயந்தது.
கடத்தல்காரர்களை சந்தித்த பூட்டோ
அன்று பகல் 1.30 மணி அளவில் லாஹூரில் தரையிறங்கியது இந்தியன் ஏர்லைன்ஸின் விமானம். விமான நிலையத்தின் ஒரு மூலையில் அது நிறுத்தப்பட்டதும் பாதுகாப்புப் படையினர் அதைச் சுற்றி வளைத்தனர்.
அந்த நேரத்தில் சில ஊடகவியலாளர்கள் விமான நிலையத்தை அடைந்தனர். பாதுகாப்புத் துறை நிபுணர் ப்ரவீன் சுவாமி தன்னுடைய, ‘இந்தியா, பாகிஸ்தான் அண்ட் தி சீக்ரெட் ஜிஹாத்: தி கவர்ட் வார் இன் காஷ்மீர்’ என்ற புத்தகத்தில், “விமானம் தரையிறங்கியவுடன் சில ஊடகவியலாளர்கள் அந்த விமானத்தைச் சுற்றி நெருங்கினார்கள். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டதும் அதில் இருந்து ஹஷிம் வெளியேறினார்,” என்று குறிப்பிடுகிறார்.
வெளியே வந்ததும்,”இந்திய சிறையில் உள்ள தேசிய விடுதலை முன்னணியின் 36 உறுப்பினர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனில் நாங்கள் இங்குள்ள பயணிகள் அனைவரையும் கொன்றுவிடுவோம். அடுத்து நடக்கவிருக்கும் அனைத்தும் இந்திய அரசின் கையில் உள்ளது என்று கூறிய ஹஷிம் மீண்டும் விமானத்திற்குள் திரும்பிச் சென்றார்,” என்று புத்தகத்தில் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
விமானம் கடத்தப்பட்ட தகவல் வெளியானபோது ஜுல்ஃபிகர் அலி பூட்டோ, ஷேக் முஜிபூர் ரஹ்மானை டாக்காவில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். பிறகு அவசரமாக அவர் லாஹூருக்கு திரும்ப நேரிட்டது.
லாஹூர் விமான நிலையம் வந்ததும் கடத்தல்க்காரர்களைச் சந்திக்கச் சென்றார் பூட்டோ. அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டுவிட்டுத் திரும்பும்போது அவர்களை ஆரத் தழுவினார் பூட்டோ. பயணிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று அவர் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
பயணிகள் விடுவிக்கப்படுதல்
எதிர்பார்த்தது போலவே இந்தியா அந்த 36 உறுப்பினர்களை விடுதலை செய்யவில்லை. அதே நேரத்தில் ஹஷிம் குரேஷி, லாஹூர் விமான நிலையத்தில் சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருந்தார்.
யாதவ் தன்னுடைய புத்தகத்தில், “கடத்தல்க்காரர்களில் மற்றொருவரான அஷ்ரஃப் குரேஷி பயணிகளைக் கண்காணித்து வந்தார். பூட்டோவின் ஆணைக்கு இணங்க பயணிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு, ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் அனைவரும் ஹுசைனிவாலா எல்லை வழியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். பிப்ரவரி 2ஆம் தேதியன்று, அனைவரின் கண் முன்பாகவும் அந்த விமானம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இதை ஐ.எஸ்.ஐ. நபர்கள் செய்திருக்கக்கூடும் என்று பிறகு உறுதி செய்யப்பட்டது.
“ஹஷிம் குரேஷி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு அதை ஒப்புக் கொண்டார். பாகிஸ்தான் அரசு ஆரம்பத்தில் இந்த கடத்தல்காரர்களுக்கு புகலிடம் வழங்க ஒப்புக் கொண்டது. பூட்டோ ஒருமுறைகூட இந்தச் சம்பவம் குறித்து விமர்சிக்கவில்லை. இந்தக் கடத்தலுக்குப் பின்னால் பாகிஸ்தானின் பங்கு உள்ளது. இது பூட்டோவுக்கும் நன்கு தெரியும் என்ற இந்தியாவின் கூற்றுக்கு வலு சேர்த்தது,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்திய பரப்பின் மேல் பறக்க பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை
மற்றொரு புறம், இந்த கடத்தல் நிகழ்வு ஒரு திசை திருப்பும் செயல் என்று ஷேக் முஜிபூர் ரஹ்மான் விமர்சனம் செய்தார். கிழக்கு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிரச்னைகளில் இருந்து திசை திருப்பி, அதிகாரம் வழங்குவதை தாமதிக்கும் செயலாக இதை அவர் கருதினார்.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது.
அனுஷாவும் சந்தீப்பும் அவர்களுடைய புத்தகத்தில், “பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்திருந்த இந்திரா காந்தி, காவிடம் அவருடைய கருத்து குறித்து கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. இனிமேல் கிழக்கு பாகிஸ்தானுக்கு மேற்கு பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்கள் இந்திய பரப்பின் மேல் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தார்,” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு பாகிஸ்தானில் வெளியான நாளிதழ்களில் ஹஷிம், ரா அமைப்பிற்காக பணியாற்றியதாக குறிப்பிட்டிருந்தது. இதை ரா அமைப்பு உறுதி செய்யவில்லை என்றாலும்கூட இதனால் இந்தியா அதிக பலன்களை அடைந்தது.
மேற்கு பாகிஸ்தானில் இருந்து நான்கு மணிநேரத்தில் டாக்காவுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் நீண்ட பயணத்தை மேற்கொள்ள நேரிட்டது. எரிபொருளுக்காக இலங்கையில் நிறுத்திச் செல்ல வேண்டிய நிலைக்கு அவை தள்ளப்பட்டன. இது பயண நேரத்தை மட்டும் அதிகரிக்கவில்லை. கூடுதலாக பயணக் கட்டணத்தையும் அதிகரித்தது. பாகிஸ்தான் ராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு வான்வழியாக வருவதற்கு ஆகும் காலம் மிகவும் தாமதமானது. மேலும் 11 மாதங்கள் கழித்து ஏற்பட்ட போரில் இது தாக்கத்தை ஏற்படுத்தியது.
‘தி காவ் பாய்ஸ் ஆஃப் ரா’ என்ற புத்தகத்தில், ரா அமைப்பின் கூடுதல் செயலாளர் பி.ராமன், “பாகிஸ்தான் விமானங்கள் இந்திய பரப்பில் பயணிக்க, இந்திரா காந்தி விதித்த தடையானது, 1971ஆம் ஆண்டு போரில் இந்தியாவின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்தது,” என்று குறிப்பிட்டார்.
“பாகிஸ்தான் விமானங்கள் இலங்கை வழியாக கிழக்கு பாகிஸ்தான் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டபோது, இந்திரா காந்தி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். கிழக்கு பாகிஸ்தானுக்கு தளவாடங்களை அனுப்பும் பாகிஸ்தானின் திறனுக்கு இது பெருத்த அடியாக அமைந்தது,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
காரி பாஸ் ‘தி பிள்ட் டெலிகிராம்’ என்ற புத்தகத்தில், “தன்னுடைய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்க தனது விமானத்தைத் தானே கடத்தியுள்ளது இந்தியா என்று யஹ்யா கான் இந்தியா மீது விமர்சனத்தை முன்வைத்தார்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏப்ரல் வரை ஹஷிமும் அஷ்ரஃபும் பாகிஸ்தானில் ஹீரோக்களாக கொண்டாடப்பட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் முர்ரியில் கைது செய்யப்பட்டனர். இந்திய உளவு அமைப்புக்குப் பணியாற்றிய குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அஷ்ரஃப் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ஹஷிமுக்கு 19 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள அட்டோக், ஷாஹிவால், ஃபைசலாபாத், லாஹூர், முல்தான் போன்ற பல சிறைகளில் 9 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தார். பிறகு 1980ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ரா தலைவர் துலாத்தை சந்தித்த ஹஷிம்
பாகிஸ்தானில் இருந்து பிறகு ஹஷிம் ஹோலாந்து சென்றார். முன்னாள் ரா அமைப்பின் தலைவர் ஏ.எஸ். துலாத் அவருடைய, ‘காஷ்மீர் தி வாஜ்பேய் இயர்ஸ்’ என்ற புத்தகத்தில், “1983ஆம் ஆண்டு ஹஷிம் மற்றொரு முறை மக்பூல் பட்டை விடுதலை செய்யும் நோக்கில் இந்திய விமானம் ஒன்றைக் கடத்த திட்டமிட்டார். ஐ.எஸ்.ஐ. அவருக்கு ஒரு பாஸ்போர்ட் வழங்கியது. அதன் உதவியில் அவர் லண்டன் சென்று அங்கு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் அன்றைய தலைவரான அமனுல்லா கானை சந்தித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நினைத்தது போன்று அந்தத் திட்டம் செயல்படவில்லை. ரா அமைப்பின் தலைவராக நான் இருந்தபோது, ஹஷிம் குரேஷி என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் அவர் ஹோலாந்தில் என்னைச் சந்திக்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் அங்கு உளவு அமைப்புக்காகப் பணியாற்றி வந்தார். எனவே நாங்கள் வேறொரு நாட்டில் சந்தித்தோம்.
அவர் மீண்டும் இந்தியா வர விரும்புவதாகத் தெரிவித்தார். நான் ஹஷிமை தொடர்புகொண்டபோது, ஹோலாந்தில் ரா அதிகாரியாகச் செயல்பட்டவர் ரபீந்திர சிங். 2004ஆம் ஆண்டு சி.ஐ.ஏவுக்காக பணியாற்றுவதாகக் கூறி ரா அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட அதே ரபீந்திர சிங்தான்,” என்றும் தன்னுடைய புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா திரும்பியதும் கைது
ஏன் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று துலாத், ஹஷிமிடம் கேட்டபோது, காஷ்மீரில் அரசியல் நிகழ்வுகள் துவங்கிய பிறகு தனக்கான இடத்தைத் தேடிக்கொள்ள விரும்புவதாக ஹஷிம் தெரிவித்துள்ளார்.
இறுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதியன்று டெல்லியில் தரையிறங்கினார் ஹஷிம். அவர் தரையிறங்கியதும், அவருக்காகப் பிறப்பிக்கப்பட்டிருந்த கைது உத்தரவின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
டெல்லி திஹார் சிறையில் 15 நாட்கள் அடைக்கப்பட்டார். பிறகு அவர் ஶ்ரீநகர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கே கூட்டு விசாரணை மையத்தில் ஓராண்டு காவலில் வைக்கப்பட்டார். பிறகு, 2001ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஹஷிமுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். அவரின் ஒரு மகள் திருமணம் செய்து துபாயில் வசித்து வருகிறார்.
“நான் அவருடைய மகளின் திருமணத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டு இருந்தேன். நான் அவருடைய மகன் ஜுனைதின் திருமணத்திற்கும் சென்றிருந்தேன். நான் ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர். நான் திருமணத்திற்கு வந்தால் காஷ்மீரில் உனக்கு பிரச்னை ஏற்படாதா என்று கேள்வி கேட்டேன். அதற்கு அவர், ‘நான் ரா அதிகாரி என்று அவர்கள் கூறட்டுமே,’ என்று சிரித்தபடி பதில் அளித்தார்,” என்று புத்தகத்தில் துலாத் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹஷிம் குரேஷி இன்று ஶ்ரீநகரில் வசித்து வருகிறார். காஷ்மிரில் வெளியாகும் பல நாளிதழ்களில் அவர் கட்டுரை எழுதி வருகிறார். காஷ்மீர் தொடர்பாக அவர் ஏற்கெனவே 5 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு