பட மூலாதாரம், Photo Divison
-
- எழுதியவர், ஜெய் சுக்லா
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
ஆங்கிலேயர் காலத்தில் சௌராஷ்டிராவின் பல்வேறு சமஸ்தானங்களில் சில பிரஜா மண்டலங்கள் (மக்கள் குழுக்கள்) அல்லது பிரஜா பரிஷத்துகள் (மக்கள் சபைகள்) அல்லது பிரதிநிதி சபைகள் இருந்தன. இந்த பிரஜா மண்டலங்கள் சட்டமன்றங்களைப் போலச் செயல்படவில்லை.
ஆனால் பெரும்பாலும் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. சுதந்திரப் போராட்டத்தில் இணைவது தவிர, மக்களின் பிரச்னைகள் குறித்து மன்னரிடம் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன, மேலும் தீர்வு காணப்படாவிட்டால் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
சுதந்திரப் போராட்ட வீரர்களால் ‘கத்தியவார் அரசியல் சபை’ (Kathiyawad Rajkiya Parishad) நிறுவப்பட்டது. இந்தச் சபையின் மாநாடுகள் சௌராஷ்டிராவில் ஒன்பது இடங்களில் நடைபெற்றன. இந்த அரசியல் சபையை பெரும்பாலான சமஸ்தானங்கள் எதிர்த்தன.
எதிர்ப்புகள் இருந்தபோதிலும், ராஜ்கோட்டின் அப்போதைய ராஜா லாக்காஜிராஜ், 1921-ஆம் ஆண்டில் இந்தச் சபையின் முதல் மாநாடு ராஜ்கோட்டில் நடத்த அனுமதி அளித்தார்.
இந்தச் சபையின் முக்கிய நோக்கம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, அரசரின் செயல்பாடுகள் மக்கள் நலனுக்காக இருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதும்தான்.
மற்ற சமஸ்தானங்களின் எதிர்ப்பையும் மீறி, லாக்காஜிராஜ் ஜனவரி 1925-இல் பவநகரில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற கத்தியவார் அரசியல் சபையின் மூன்றாவது மாநாட்டில் கலந்து கொண்டார்.
அதே ஆண்டு பிப்ரவரியில் காந்திஜி ராஜ்கோட்டுக்கு வருகை தந்தபோது, லாக்காஜிராஜ் காந்திஜியை அருகில் அமர வைத்து கௌரவித்ததுடன் ஒரு தேசியப் பள்ளியைத் (Rashtriya Shala) திறந்தார்.
இந்தச் சம்பவத்தைப் பற்றி காந்திஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தி தனது ‘படேல் – எ லைஃப்’ என்ற புத்தகத்தில், “அப்போது லாக்காஜிராஜ் காந்திஜியிடம், ‘நான் உங்களின் தளபதியாக (லெப்டினன்ட்) விரும்புகிறேன். உங்களைப் பின்பற்றுபவர்களில் நான் வல்லபாய் படேலைத் தாண்டிச் செல்ல விரும்புகிறேன்’ என்று கூறினார். ஆனால், அவருடைய (லாக்காஜிராஜ்) மகன் இந்த இருவரையும் எதிர்க்கப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவில்லை,” என எழுதுகிறார்.
லாக்காஜிராஜ் மறைந்த பிறகு, அவரது மகன் தாக்கூர் தர்மேந்திரசிங்ஜி அரியணை ஏறினார்.ராஜ்கோட் சமஸ்தானத்தின் திவான் வீரவாலா, மக்களாட்சி நிறுவப்பட வேண்டும் என்ற சர்தார் படேல் மற்றும் காந்திஜி ஆகியோரின் ‘முயற்சிகளை எதிர்த்தார்.
பிரஜா மண்டலங்களுக்கு தலைமை ஏற்ற சர்தார் படேல்
பட மூலாதாரம், Getty Images
ஹரிபுரா மாநாட்டுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி, சுதேச மன்னர்கள் மற்றும் சமஸ்தானங்களுடன் நேரடியாக மோதலில் ஈடுபட வேண்டாம் என்ற கொள்கையை உருவாக்கியது. இருப்பினும், காங்கிரஸைச் சேர்ந்த எந்தவொரு தொண்டரோ அல்லது தலைவரோ மக்கள் நலனுக்காக ஒரு போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர், ஆனால் அதில் காங்கிரஸின் பெயர் அல்லது கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு பல மாநிலங்களில் பிரஜா மண்டலங்கள் நிறுவப்பட்டன. அவற்றில் சில மாநாடுகளில் சர்தார் படேல் தலைமை வகித்தார். சர்தார் படேல் கத்தியவார் அரசியல் சபையின் தலைவராகவும் ஆனார்.
“ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களுடன் மோதலில் ஈடுபடக் கூடாது என்ற காங்கிரஸின் கொள்கை இதில் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் ராஜாவுக்கும் மக்களுக்கும் இடையிலான மோதலில் வல்லபாய் படேல் நடுநிலை வகிப்பது சாத்தியமற்றதாகிவிட்டது,” என ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்,
“லாக்காஜிராஜின் மகன் தர்மேந்திர சிங் ராஜ்கோட்டின் பலவீனமான மன்னராக இருந்தார். அரசின் முந்தைய சேமிப்புகளை தீர்த்துவிட்ட வீரவாலாவின் (ராஜ்கோட் திவான்) கைகளில் ஒரு பொம்மையாகிவிட்டார். காலியான கருவூலத்தை நிரப்ப வீரவாலா அரிசி, தீப்பெட்டி, சர்க்கரை, சினிமா டிக்கெட்டுகளுக்கான ஏகபோக உரிமையை ஏலம் மூலம் வழங்கத் தொடங்கினார்.”
“சமஸ்தானத்திற்கு சொந்தமான துணி ஆலையின் உரிமையும் ஏலம் மூலம் விற்கப்பட்டது, மேலும் ராஜ்கோட் பவர் ஹவுஸை அடமானம் வைக்கும் யோசனையையும் அவர் முன்வைத்தார். துணி ஆலைத் தொழிலாளர்கள் 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சூதாட்ட மையத்தின் உரிமையும் ஏலம் மூலம் விற்கப்பட்டது.” என்று குறிப்பிடுகிறார் ராஜ் மோகன் காந்தி
காலியான கருவூலத்தை நிரப்ப விதிக்கப்பட்ட பல்வேறு வரிகளால் ராஜ்கோட் மக்கள் துன்பப்பட்டனர்.
கத்தியவாரில் உள்ள 222 சமஸ்தானங்களுக்கு மத்தியில் ராஜ்கோட் தாக்கூர் ஒரு சிறப்பு முக்கியத்துவம் கொண்டவராக இல்லை. ஆனால், லார்ட் வெல்லஸ்லியின் உதவி ஒப்பந்தத்தின் கீழ், ராஜ்கோட்டில் ஒரு பிரிட்டிஷ் ரெசிடென்ட் நியமிக்கப்பட்டார்.
எழுத்தாளர் தினகர் ஜோஷி தனது ‘சர்தார் மகாமானவ்’ என்ற புத்தகத்தில், “இந்த ஒப்பந்தத்தின் கீழ், சமஸ்தானங்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கைகளை வெட்டி ஆங்கிலேயர்களின் தட்டில் வைத்தனர். ராஜ்கோட்டில் இருந்த ரெசிடென்ட்டை சர்தார் படேல் ‘சௌகிதார்’ (காவலாளி) என்று அழைத்தார்.”
“அப்போது கத்தியவார் அரசியல் சபை இருந்தது. அது மக்களின் உரிமைகளுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைகளைச் செய்தது. உச்சங்கராய் தேபர் அதன் தலைவராக இருந்தார்,” என்று எழுதுகிறார்.
பட மூலாதாரம், MGC Museum/BIPIN TANKARIYA
மக்கள் இதை எதிர்த்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு சௌராஷ்டிரா மாநிலத்தின் முதல் முதலமைச்சராக இருந்த உச்சங்கராய் தேபரின் தலைமையில் அப்போது ராஜ்கோட்டில் மக்கள் வீதிகளில் இறங்கினர். தேபர் உட்பட பலரை வீரவாலா கைது செய்தார்.
இந்தச் சத்தியாகிரகிகளுக்கு ஆதரவு தெரிவிக்க சர்தார் படேல் செப்டம்பர் 1938-இல் ராஜ்கோட்டுக்கு வந்தார்.
ராஜ்கோட் மாநிலப் பிரஜா பரிஷத் மாநாட்டில் அவர் பேசுகையில், “நாங்கள் ராஜாவைப் பதவியிலிருந்து அகற்ற விரும்பவில்லை. அவருடைய அதிகாரத்தை நாங்கள் வரையறுக்க விரும்புகிறோம். விவசாயிகள் பசியால் வாடும்போது, அவர்களின் ராஜா நடனம் மற்றும் பாடல்களில் பணத்தை வீணடித்தால், அந்த அரசு நீடிக்காது… நீங்கள் உறுதியாக இருந்தால், எல்லா சமஸ்தானங்களும் ஒன்றாகச் சேர்ந்தாலும் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது.” என்று கூறினார்.
வீரவாலா சர்தார் படேலின் பலத்தை அறிந்திருந்தார். அதனால் அவர் சர்தாரை தேநீர் விருந்துக்கு அழைத்தார். சர்தாருடன் இனிமையாகப் பேசியபோதிலும், அவர் ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார்.
தினகர் ஜோஷி எழுதுகையில், “மக்கள் சர்தாருடன் இருக்கிறார்கள் என்பதை வீரவாலா புரிந்து கொண்டார். இந்த நிலையில் மக்களின் விழிப்புணர்வை நசுக்க வேண்டுமானால், சர்தாருடன் மோதலைத் தவிர்த்து, பிரிட்டிஷ் ரெசிடென்டை முன்னிறுத்தி தர்மேந்திர சிங்கின் பெயரில் அவர் தனது வேலையைச் செய்ய வேண்டும். எனவே, தனது உடல்நிலை சரியில்லை என்பதை மன்னர் தர்மேந்திர சிங் மூலம் வெளிப்படுத்தி, தன்னை திவான் பதவியிலிருந்து நீக்கச் செய்தார்”
வீரவாலா திவான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார், ஆனால் அவர் தாக்கூர் தர்மேந்திர சிங்கின் ஆலோசகரானார். ஆங்கிலேயர்கள் பேட்ரிக் கேடலைத் திவான் பதவிக்கு அனுப்பினர்.
கேடல் தனது பேச்சைக் கேட்பார் என்று வீரவாலா நினைத்தார், ஆனால் ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்ட கேடல் வீரவாலாவின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தார். அவர் தாக்கூர் தர்மேந்திர சிங்குக்குக் கடிதம் எழுதி பல புகார்களைத் தெரிவித்தார். “தர்மேந்திர சிங் மக்களின் நலன்களில் ஆர்வம் காட்டவில்லை” என்று அவர் குற்றம் சாட்டினார்.
சத்தியாகிரகம் செய்தவர்கள் மீது தாக்குதல்
பட மூலாதாரம், MGC Museum/BIPIN TANKARIYA
போராட்டம் கிராமம் கிராமமாகப் பரவியது. தினமும் தன்னார்வலர்களைப் பிடித்து ஆடுமாடுகளைப் போல் தாக்கினர். அவர்களின் கைகள் மற்றும் கால்களைக் கட்டித் தொலைதூரத்தில் விட்டனர். சில சமயங்களில் அவர்களை நிர்வாணப்படுத்தினர். ராஜ்கோட்டிலிருந்து தொலைவில் உள்ள சரதர் கிராமத்தில் ஒரு பாழடைந்த கட்டடத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டு மக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், போராட்டம் நடத்தி கைதான தேபரை, கேடல் விடுவித்தார். இது வீரவாலா மற்றும் தர்மேந்திர சிங்குக்கு பிடிக்கவில்லை.
“மேற்கு இந்திய சமஸ்தானங்களின் ஏஜென்சியின் தளம் ராஜ்கோட்டில் இருந்தது. அதன் ரெசிடென்ட் கிப்சனுக்கு (Gibson) எழுதப்பட்ட கடிதத்தில், ‘தேபர்பாயை வரவேற்க சுமார் பத்தாயிரம் பேர் கொண்ட பெரிய கூட்டம் கூடியது’ என்று தாக்கூர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் கேடலின் வேலையை முடிவுக்குக் கொண்டு வர அனுமதி கோரப்பட்டது. ஆங்கிலேய அரசாங்கம் வீரவாலாவை வெளியேற்றக் கோரியது. இந்தத் தனிப்பட்ட ஆலோசகர் தாக்கூரின் வேலைகளை நிர்வகித்து வருவதாகவும், அவரது ஆவணங்களை எழுதுவதாகவும் ஆங்கிலேயர்கள் கவனத்திற்கு வந்தது,” என இது குறித்து ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.
வீரவாலாவின் விருப்பத்துக்கு மாறாக கேடல் ராஜ்கோட்டில் தங்கினார், வீரவாலா வெளியேற வேண்டியிருந்தது. இருப்பினும், மக்களின் போராட்டம் தொடர்ந்தது. சத்தியாகிரகம் தொடர்ந்ததால், தேபர்பாய் உட்படப் பலரை கேடல் கைது செய்தார்.
பவநகரின் திவான் அனந்த்ராய் பட்டணி ராஜ்கோட்டுக்கு வந்து சமரச முயற்சிகளைத் தொடங்கினார். அவர் தர்மேந்திர சிங் மற்றும் பேட்ரிக் கேடலுடன் இணைந்து சமரச நிபந்தனைகளைத் தயாரித்தார், ஆனால் சர்தாரை மத்தியஸ்தராக வைக்கும் முயற்சிக்கு ரெசிடென்ட் கிப்சன் எதிர்ப்புத் தெரிவித்தார். கிப்சன் சர்தாரை ‘வெளி நபர்’ என்று அழைத்தார்.
“காங்கிரஸில் சர்தார் தான் மிகவும் நம்பகத்தன்மை அற்றவர்.” என்று அவர் கூறினார்.
இந்த எதிர்ப்புக்குப் பதிலளித்த சர்தார், “என்னை ‘வெளி நபர்’ என்று சொல்ல நீ யார்? ஐயாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இங்கே வந்து எங்கள் முதலாளியாக அமர்ந்திருக்கும் நீ யார்? உனக்கு இங்கே இடமில்லை, இது எங்கள் விஷயம், நாங்கள் தீர்த்துக்கொள்வோம்,” என்று கூறினார்.
சர்தாருக்கு எதிராக வீரவாலாவின் ‘சதி’
பட மூலாதாரம், BIPIN TANKARIYA
சர்தார் அதே ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி தனது மகள் மணிபென்னை அனுப்பினார். டிசம்பர் 5-ஆம் தேதி அவரும் கைது செய்யப்பட்டார்.
மறுபுறம், வீரவாலா ராஜ்கோட்டுக்கு வெளியே இருந்தாலும், அவர் ‘சதி’ செய்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அவர் சர்தாரைப் புகழ்ந்து ஒரு கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் தவிர, கேடலுக்குத் தெரியாமல், தாக்கூர் தர்மேந்திர சிங் சார்பாக சமரசத்திற்கான வாய்மொழி உத்தரவாதத்தையும் அளித்தார்.
“இந்த தந்திரமான முன்மொழிவு வல்லபாய் படேலின் தேசிய உணர்வுக்கு ஊக்கமளித்தது,” என ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.
அதற்குப் பதிலளித்த சர்தார், “உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும், எந்த வெளிநாட்டவரும் எங்களுடையதைப் போல நல்லெண்ணம் கொண்டிருக்க முடியாது” என்று எழுதினார்.
தர்மேந்திர சிங்கின் அழைப்பின் பேரில் சர்தார் ராஜ்கோட்டுக்குச் சென்றார். ராஜ்கோட் ரெசிடென்டைச் சந்தித்து இந்த விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுமாறு காந்திஜி அவருக்கு அறிவுறுத்தினார். ஆனால், ‘சர்தார் காந்திஜியின் ஆலோசனையை ஏற்கவில்லை’ என்று ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.
பட மூலாதாரம், MGC Museum/BIPIN TANKARIYA
காந்திஜியின் ஆலோசனையைப் புறக்கணிப்பதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது சர்தாருக்கு அப்போது தெரியாமல் இருந்திருக்கலாம்.
சர்தாருடன் எட்டு மணி நேரம் பேசிய தாக்கூர், சர்தாருடன் சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சீர்திருத்தங்களுக்காக ஒரு குழு அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களில் ஏழு பேரை சர்தார் பரிந்துரைப்பார் மற்றும் மூன்று உறுப்பினர்கள் தாக்கூர் சார்பாக இருப்பார்கள்.
மணிபென் உட்படக் கைதிகள் தாக்கூரால் விடுவிக்கப்பட்டனர். ஆங்கிலேயர்கள் கலகலத்துப் போனார்கள். இவ்வளவு விரைவாகச் சமரசம் எப்படி நடந்தது என்று அவர்களுக்குப் புரியவில்லை.
வீரவாலா சர்தார் படேலுக்கு எதிராக கிப்சனின் காதுகளில் விஷத்தைக் கொட்டினார்.
“அவர் கிப்சனிடம், ‘ஐயா, ஏதாவது வழி கண்டுபிடியுங்கள். சர்தாருடன் சமரசம் செய்து தாக்கூர் சாஹேப் பெரிய தவறு செய்துவிட்டார்’ என்று கூறினார்,” என்று தினகர் ஜோஷி எழுதுகிறார்.
மறுபுறம், சமரசத்திற்குப் பிறகு மகிழ்ச்சியடைந்த சர்தார் சத்தியாகிரகத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார், ஆனால் வீரவாலா அவருக்கு எதிராக ஒரு ‘ஆபத்தான சதி’ செய்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்குத் தெரியாது.
ஒருபுறம் வீரவாலா சர்தாருடன் சமரசம் செய்து கொண்டார், மறுபுறம் அவர் கேடல் மற்றும் கிப்சனிடம் ‘சர்தார் நம்பகமானவர் அல்ல’ என்று நம்ப வைக்க முயற்சித்தார்.
“வல்லபாய் மற்றும் அரசு அதிகாரி இடையே பிளவை ஏற்படுத்திய பிறகு, சர்தாருடன் செய்த சமரசத்திலிருந்து பின்வாங்க தாக்கூரை வீரவாலா தயார் செய்தார்.” என ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.
ஜனவரி 1939-இல், கேடலை அனுப்பிவிட்டு, மீண்டும் வீரவாலாவை திவான் பதவிக்கு நியமிக்க ரெசிடென்டிடம் தர்மேந்திர சிங் அனுமதி பெற்றார்.
‘வீரவாலா என்னைப் பயன்படுத்திக் கொண்டார்’
பட மூலாதாரம், MGC Museum/BIPIN TANKARIYA
“வீரவாலா கேடலை வெளியேற்ற தன்னைப் பயன்படுத்திக் கொண்டார் என்று சர்தார் நினைத்தார்,” என ராஜ்மோகன் காந்தி எழுதினார்.
இருப்பினும், வல்லபாய் இந்தப் பிரச்னையை பகிரங்கமாக ஒருபோதும் பேசவில்லை. இது குறித்து சர்தார் வெளிப்படையாகப் பேசிய நபரான கன்ஷ்யாம் தாஸ் பிர்லாவின் கூற்றுப்படி, “வீரவாலாவை நம்புவது மற்றும் கேடல் மற்றும் கிப்சனை வில்லன்களாகக் கருதுவது ஒரு பெரிய தவறு என்று சர்தார் தாமதமாகப் புரிந்துகொண்டார்.”
பிர்லாவின் கூற்றுப்படி, “இந்த வீரவாலாவின் போட்டியில் சர்தார் தோல்வியுற்றார்.”
வீரவாலாவின் இந்த விளையாட்டை சர்தார் புரிந்துகொள்ளத் தொடங்கியபோது, மிகத் தாமதமாகிவிட்டது.
“காந்திஜி என்னிடம், ‘கத்தியவாடிகள் பேச மிகவும் இனிமையானவர்கள், ஆனால் அவர்களின் தலைபாகையில் உள்ள அத்தனை முறுக்குகள் அவர்கள் வயிற்றில் இருக்கும்’ என்று சொல்வார்,” என பின்னர் வல்லபாய் ஒப்புக் கொண்டார்.
சர்தாருடன் செய்த சமரசம் ரத்து
பட மூலாதாரம், MGC Museum/BIPIN TANKARIYA
இறுதியில், வீரவாலாவின் பேச்சே எடுபட்டது, சர்தாருடன் செய்த சமரசத்தை தாக்கூர் ரத்து செய்தார்.
“தாக்கூரின் பெயரில் சர்தாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மாநிலத்தின் பாயாத்துகள் (உள்ளூர் பிரபுக்கள்), முஸ்லிம்கள் மற்றும் தலித் பிரிவினரிடமிருந்தும் தங்களுக்கு மனுக்கள் கிடைத்துள்ளன. அவர்களுக்கும் இந்தக் குழுவில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று அதில் எழுதப்பட்டிருந்தது,” என தினகர் ஜோஷி எழுதுகிறார்.
இதற்கிடையில், முஸ்லிம் லீக் தலைவர்கள் சுறுசுறுப்பாக இருந்தனர். தலித் பிரிவின் சார்பாக பீம்ராவ் அம்பேத்கர் ராஜ்கோட்டுக்கு வந்து இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தார். முஸ்லிம் லீக் சார்பாக இப்ராஹிம் சுந்தரிகர் (இவர் சிறிது காலம் பாகிஸ்தானின் பிரதமராகவும் ஆனார்) கூட ராஜ்கோட்டுக்கு வந்துவிட்டார்.
“கத்தியவாரில் சாதி மற்றும் வகுப்புவாதத்தின் விதைகள் விதைக்கப்பட்டுவிட்டன,” என தினகர் ஜோஷி எழுதுகிறார்.
சமரசம் ரத்து செய்யப்பட்டதால் தோல்வியை ஒப்புக்கொண்ட சர்தார், ‘தாக்கூர் பெயருக்கு மட்டுமே ராஜா’ என்று கூறினார். அவருக்கு இருந்த ஒரே வழி, மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவதுதான்.
ராஜ்கோட்டின் ஆட்சி மூன்று பேரின் கைகளில் இருந்தது. ஒருவர் வீரவாலா, இரண்டாவது அவரது மருமகன் வலேராவாலா மற்றும் மூன்றாவது காவல்துறை அதிகாரி ஃபத்தே முஹம்மது கான்.
வல்லபாய் படேலின் போராட்ட அழைப்புக்கு எதிராக, ‘இந்த மூன்று பேரும் வெளிப்படையான ஒடுக்குமுறையில் ஈடுபட்டனர்.’ சத்தியாகிரகத்திற்கான கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. செய்தித்தாள்களுக்கு தடை இருந்தது
ராஜ்கோட் சத்தியாகிரகத்தில் கஸ்தூரிபாய் பங்கேற்பு
பட மூலாதாரம், MGC Museum/BIPIN TANKARIYA
மணிபென் மற்றும் மிருதுலா சாராபாயுடன் கஸ்தூரிபாய் ராஜ்கோட்டுக்கு வந்தார். பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ‘அசுத்தமான இடத்தில்’ வைக்கப்பட்டனர்.
சிறையிலும் வெளியிலும் மக்கள் மீது பயங்கரமான அட்டூழியங்கள் கட்டவிழ்த்துப்படுவதாக புகார்களைக் கேட்டறிந்த காந்திஜி, பிப்ரவரி இறுதியில் ராஜ்கோட்டுக்கு வந்தார்.
காந்திஜி ராஜ்கோட்டுக்கு வந்தபோது, வீரவாலா அவரைப் பணிவுடன் வரவேற்றார். தாக்கூர் சார்பாக வரவேற்புக் கடிதத்துடன் ஃபத்தே முஹம்மது கான் தானே ஆஜரானார், ஆனால் காந்திஜியை தாக்கூர் தர்மேந்திர சிங்கைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. இதனால், காந்திஜி பகிரங்கமாக, ‘ராஜ்கோட்டின் உண்மையான ராஜா வீரவாலாதான்’ என்று வருத்தம் தெரிவித்தார்.
ராஜ்கோட்டில் நடந்து வரும் அட்டூழியங்களைப் பார்த்த காந்திஜி மார்ச் 3 முதல் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். சர்தாருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் பின்பற்ற தாக்கூருக்கு அழுத்தம் கொடுக்குமாறு வைஸ்ராய் லினித்கோவுக்குக் (Linlithgow) கடிதம் எழுதினார்.
இதற்கிடையில், திரிபுராவில் காங்கிரஸின் மாநாடு நடந்தது. காந்திஜி சர்தாரை ராஜ்கோட்டுக்குப் பதிலாக அங்கே செல்லுமாறு அறிவுறுத்தினார். அவரோ இங்கே தங்கினார். இந்தப் பிரச்னையைத் தீர்க்கக் காந்திஜி வைஸ்ராய்க்கு எழுதியதை அறிந்த சர்தார் வருத்தப்பட்டார்.
“காந்திஜியின் இந்த முயற்சியால், கத்தியவார் மக்கள் ஏற்கெனவே வென்ற ஒரு விஷயத்தில், ராஜாவும் மக்களும் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்த ஒரு மோதலில், ஆங்கிலேயர்களைச் சேர்த்து காந்திஜி பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியதாக சர்தார் நினைத்தார்.”
பட மூலாதாரம், MGC Museum/BIPIN TANKARIYA
இறுதியில், கஸ்தூரிபாய், மணிபென் மற்றும் மிருதுலா சாராபாய் விடுவிக்கப்பட்டனர். ‘தாக்கூர் வாக்குறுதியை மீறியதை’ விசாரிக்க தலைமை நீதிபதி சர் மௌரிஸ் குவாயரை (Sir Maurice Gwyer) வைஸ்ராய் லினித்கோவால் நியமித்தார்.
காந்திஜி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். நீதிபதி குவாயர் முன் சர்தார் தனது தரப்பையும், வீரவாலா தனது தரப்பையும் முன்வைத்தனர். இந்தச் சமரச விஷயத்தில் ‘தந்திரம், அழுத்தம் மற்றும் ஏமாற்றுதல்’ பயன்படுத்தப்பட்டதாக சர்தார் வாதிட்டார்.
குவாயர் சர்தார் பக்கம் தீர்ப்பளித்தார். ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட தீர்ப்பில், தாக்கூர் தனது வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
முதல் சுற்றில் வீரவாலா வெற்றி பெற்றார் என்றால், இரண்டாவது சுற்றில் வல்லபாய் மற்றும் காந்திஜி வெற்றி பெற்றனர்.
தனது வெற்றி உறுதியாகிவிட்டது என்று சர்தார் நம்பினார், ஆனால் அவருடைய இந்த நம்பிக்கை தவறாகிப் போகப்போகிறது என்று அவருக்குத் தெரியாது.
சர்தார் அனுப்பிய பெயர்கள் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டன, மேலும் இது வீரவாலாவுக்கு சர்தாரைத் தாக்க ஒரு வாய்ப்பை அளித்தது. அவர், சர்தார் அனுப்பிய பெயர்களில் மூன்று பெயர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்று தனக்கு கோரிக்கை வந்துள்ளதாகக் கூறினார்.
பெயர்கள் கசிந்ததற்காகச் சர்தார் வீரவாலா மீது கோபமடைந்தார், ஆனால் இந்த விஷயத்தில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
வீரவாலா ‘மதவாதம் மற்றும் சாதி வெறியை’ பயன்படுத்தினார்
பட மூலாதாரம், MGC Museum/BIPIN TANKARIYA
இப்படியாக வீரவாலா தனது கடைசி ஆட்டத்தை ஆடினார்.
அவர் மதம் மற்றும் சாதி வெறி என்ற துருப்புச்சீட்டை பயன்படுத்தினார். இதனால் முஸ்லிம்கள், கராசியாக்கள் (உள்ளூர் பிரபுக்கள்) மற்றும் பாயாத்துகள் ஆகியோர் தூண்டப்பட்டனர். சர்தார் இந்தச் சமரசத்தின் கீழ் முன்வைக்கும் பெயர்களால் அவர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர்.
ஏப்ரல் 16-ஆம் தேதி ராஜ்கோட்டில் காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டத்தை முஸ்லிம்கள் மற்றும் வாளுடன் வந்த பாயாத்துகள் சூழ்ந்தனர்.
உண்மையில், அவர்களின் இலக்கு காந்திஜி அல்ல, மாறாகச் சர்தார் தான். அவர்கள் சர்தாரைத் தேடினர், ஆனால் பிரஜா மண்டலத்தின் பணிக்காக சர்தார் அம்ரேலிக்குச் சென்றிருந்தார். பிரார்த்தனை முடிந்ததும், காந்திஜி கலவரக்காரர்களை நோக்கி நடந்தார். மற்றவர்களைத் தங்கள் இடத்திலேயே இருக்குமாறு அவர் கூறினார்.
சில கலவரக்காரர்கள் உருவிய வாளுடன் காந்திஜியை நோக்கி ஓடினர். ஆனால் காந்திஜி திசையை மாற்றவில்லை. ஒரு இளம் பாயாத்தின் கையைப் பிடித்து அவர் தனது வசிப்பிடத்தை அடைந்தார்.
சர்தார் மீது ராஜ்கோட் ராஜாவுக்கு மீது மட்டுமல்ல, சௌராஷ்டிராவில் உள்ள பல ராஜாக்கள் மத்தியிலும் கோபம் இருந்தது.
பட மூலாதாரம், MGC Museum/BIPIN TANKARIYA
“அம்ரேலியிலிருந்து ராஜ்கோட்டுக்கு வரும் சர்தார் எந்த வழியில் வருகிறார் என்பதை அறிந்துகொள்ள தீய நோக்கதுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. வல்லபாய் படேலை ராஜா கொல்ல விரும்புகிறார் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.” என ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.
ராஜ்கோட்டில் பயன்படுத்தப்பட்ட சிறுபான்மை துருப்புச்சீட்டுக்கு, காந்திஜியின் முதல் எதிர்வினை, அவர்களுக்கு எவ்வளவு சலுகைகளை அளிக்க முடியுமோ அவ்வளவு சலுகைகளை அளித்து ஒரு புதிய மசோதாவைத் தயாரிப்பதுதான்.
புதிய ஃபார்முலாவின்படி சமரசம் ஏற்படவில்லை என்றால் உண்ணாவிரதம் இருக்கத் தயாராக இருப்பதாகக் காந்திஜி தெரிவித்தார், ஆனால் சர்தார் காந்திஜியின் இந்த முன்மொழிவை எதிர்த்தார்.
காந்திஜி சிரித்துக்கொண்டே இது குறித்த சர்தாரின் கடிதங்களைக் கிழித்து எறிந்தார். இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால் அது ‘தற்கொலைக்குச் சமமாக இருந்திருக்கும் என்று காந்திஜி பின்னர் கூறினார்.
பட மூலாதாரம், MGC Museum/BIPIN TANKARIYA
இதற்கிடையில், வீரவாலா காந்திஜியைச் சந்தித்து, “நீங்கள் மக்களின் பெயரால் ராஜாவுக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளியை உருவாக்குகிறீர்கள். ராஜாவின் நல்லெண்ணத்துடன் கிடைப்பவற்றை நீங்கள் கசப்புணர்வு நோக்கி இழுக்கிறீர்கள்.” என்று கூறினார்.
இதற்குப் பிறகு காந்திஜி எடுத்த நடவடிக்கை ஆச்சரியமாக இருந்தது. 1939 ஆம் ஆண்டு மே மாதத்தில், குவாயரிடம் இருந்து பெற்ற தனது உரிமைத் தீர்ப்பையும், வைஸ்ராயின் உத்தரவாத உரிமையையும் விட்டுக்கொடுப்பதாக அவர் அறிவித்தார்.
அவர், “நான் தோற்றேன்” என்று அறிவித்தார். ஆனால் அவருடைய இந்தத் தோல்வி நீண்ட கால வெற்றிதான் என்று சிலருக்கே தெரியும்.
காந்திஜி கூறினார், “இந்தத் தீர்ப்பு எனது பாதையை எளிதாக்குவதற்குப் பதிலாக முஸ்லிம்கள் மற்றும் பாயாத்துகளின் கோபத்திற்குக் காரணமாக அமைந்திருக்கும். மக்களாட்சியின் காரணமாக வகுப்புவாத சண்டைகள் ஏற்பட்டிருக்கும்.”
உரிமையை விட்டுக்கொடுக்கும் காந்திஜியின் முடிவை சர்தார் ஏற்றுக்கொண்டார்
பட மூலாதாரம், BIPIN TANKARIYA
சர்தார் காந்திஜியின் முடிவைச் சரியாகப் புரிந்துகொண்டார். காந்திஜி ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று அவருக்குத் தெரியும். அதனால்தான் அவர் எந்தவொரு வாதமும் செய்யாமல் வென்ற ஆட்டத்தைத் தோற்றதாக ஏற்றுக்கொண்டார்.
“வீரவாலா வென்றார். இந்த திவானின் ஒரே நோக்கம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதுதான். அவர் காந்தியவாதிகளுடன் மட்டுமே சண்டையிட வேண்டியிருந்தது, அதே சமயம் காந்தி மற்றும் சர்தார் நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் வகுப்புவாதம் ஆகியவற்றை எதிர்த்து ஒரே நேரத்தில் போராட வேண்டியிருந்தது.” என ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.
“ஒரு முனையில் கிடைத்த வெற்றி, மற்ற முனையில் ஏற்படும் இழப்பால் சமன் செய்யப்பட்டது. ஒரு எதிரியைத் தோற்கடிக்க மற்றொன்றின் உதவியை நாட வேண்டியிருந்தது.”
“ராஜ்கோட் அனுபவம் குறித்து இந்தியாவை ஆதரித்த லார்ட் லோதியன் (Lord Lothian) கூறிய விமர்சனம் உண்மையாக இருந்தது.” என்று குறிப்பிடுகிறார்.
அவர், “இந்த மக்களுக்கு (காங்கிரஸைச் சேர்ந்தவர்களுக்கு) பிரதிநிதித்துவ நிறுவனங்களில் எந்த அனுபவமும் இல்லை. காங்கிரஸ் அதிகமாகப் பலத்தைப் பயன்படுத்தினால், முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு தொடர்ந்து வெளியேறுவார்கள்.” என்று கணித்திருந்தார்.
“இந்தத் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், இந்திய ராஜாவுக்கு எதிராகப் போராட ஆங்கிலேயர் அரசாங்கத்தின் உதவியை நாட வேண்டியிருந்திருக்கும். மக்களாட்சியின் உரிமைக்கான முயற்சி முஸ்லிம்களை வருத்தப்படுத்தியது என்று காந்திஜிக்கும் வல்லபாய் படேலுக்கும் தெரிந்தது.”
“இந்தக் கணிப்பு உண்மையாக இருந்ததோடு ஏமாற்றமளிப்பதாகவும் இருந்தது.”
லார்ட் லோதியனின் விமர்சனம் இந்தியாவின் பிரிவினையின் பின்னணியில் உண்மையாக நிரூபிக்கப்பட்டது என்று பலர் நம்பினர்.
வீரவாலாவை ‘வெற்றியாளராக’ ஆக்குவதற்கான காந்திஜியின் முடிவை வல்லபாய் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டபோது, அவர் முஸ்லிம்களை அல்லது பிற சமூகங்களை கோபப்படுத்துவதற்கான முடிவை எடுக்க விரும்பவில்லை என்று அனைவரும் நினைத்திருக்க வேண்டும்.
இருப்பினும், காந்தி-சர்தாரின் தோல்வியால் ஆங்கிலேய அரசாங்கமும் மகிழ்ச்சியடைந்தது. மேலும், வீரவாலாவுக்கு ஆதரவளித்த ஜாம்நகர் ராஜா ஜாம்சாஹேப் போன்ற ராஜாக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
“ஜாம்சாஹேப் மற்றும் கிப்சன் ஆகியோர் சேர்ந்து சர்தாருக்கு இழிவுபடுத்தும் தோல்வியை அளித்தனர் என்று ஒரு சத்தியாகிரகி கூறினார். ராஜ்கோட்டில் பிரஜா மண்டலத்தின் ஒரு தொண்டர் வீரவாலாவை ‘ராட்சசன்’ என்று ஒப்பிட்டபோது, வல்லபாய் அவரது வாயை அடைத்தார், ‘எனக்கு பாபு (காந்திஜி) கிடைக்காமல் இருந்திருந்தால், நானும் வீரவாலா போல மாறியிருப்பேன்’ என்று பதிலளித்தார்,” என ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.
பிற மாநிலங்களில் ராஜ்கோட் சத்தியாகிரகத்தின் தாக்கம்
பட மூலாதாரம், MGC Museum/BIPIN TANKARIYA
ராஜ்கோட்டின் நிகழ்வுகள் பிற மாநிலங்களிலும் எதிரொலித்தன. 1939 ஆம் ஆண்டு மே மாதம் பவநகரில் சர்தார் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர். மராத்தி மொழி பேசக்கூடியர் ராஜாவாக இருந்த வதோதராவில் மராத்தியர்கள் சிறுபான்மையினராக இருந்தனர். அங்கே வல்லபாய் படேலின் எதிரிகள் மொழி உணர்வைத் தூண்டினர். குஜராத்திகள் மராத்தியர்களின் உரிமைகளைப் பறித்து விடுவார்கள் என்று அவர்கள் வதந்திகளைப் பரப்பினர். வல்லபாய் பேசவிருந்த மண்டபம் அழிக்கப்பட்டது.
மேடை எரிக்கப்பட்டது மற்றும் வல்லபாயின் கார் மீது கல்வீச்சு நடந்தது. லிம்ப்டியிலும் பிரஜா மண்டலத்தில் வணிக மக்கள் தீவிரமாக இருந்ததால், இது ‘வாணியர் மண்டலம்’ என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. மைசூரிலும் சலசலப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவின் அவுந்தில் ராஜா தானாக முன்வந்து மக்களிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தார்.
“மொத்தத்தில், சமஸ்தானங்களில் மக்களாட்சியை நிறுவும் முயற்சி தோல்வியடைந்தது, இருப்பினும் இதில் கிடைத்த அனுபவம் சுதந்திரத்திற்குப் பிறகு உதவியது,” என ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.
இந்தச் சத்தியாகிரகத்திலிருந்து சர்தார் நிறைய கற்றுக்கொண்டார். ‘ராஜ்கோட் சத்தியாகிரகம் தனக்கு ஒரு சோதனைக்கூடம் போன்றது’ என்று காந்திஜியே கூறியிருந்தார்.
நரஹரி பரிக் தனது புத்தகத்தில், “நாட்டின் பல மாநிலங்களில் பொறுப்புள்ள நிர்வாகத்தை அடைவதற்கான இயக்கங்கள் நடந்தன. அவற்றில் சர்தார் முக்கியப் பங்கு வகித்தார். இந்த இயக்கங்களின் விளைவு உடனடியாகத் திருப்தி அளிக்கவில்லை என்றாலும், சர்தார் சுதேச மன்னர்கள் மற்றும் மக்களின் அனுபவத்தைப் பெற்றார். 1947 சுதந்திரத்திற்குப் பிறகு சுதேச சமஸ்தானங்களின் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் இந்த அனுபவம் சர்தாருக்கு மிகவும் உதவியது.” என எழுதியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு