ராணுவம் அஞ்சலி செலுத்துவது குறித்த இந்தியா காண்பித்த புகைப்படம் பற்றி தெரியவந்தது என்ன?
பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் புகைப்படங்களை வைத்து இந்தியா பாகிஸ்தானுக்கு கேள்விகள் எழுப்பியுள்ளது.
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மே 8ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பின்போது இந்த புகைப்படத்தை காண்பித்தார். இந்த புகைப்படம் குறித்து இதுவரை தெரியவந்தது என்ன? பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டார்கள் என்றால், இந்தப் படம் உங்களுக்கு என்ன சொல்கிறது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாதாரண குடிமக்களின் சவப்பெட்டிகளுக்கு பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை வழங்கப்படுவதும் விந்தையானது எனவும் கூறியிருந்தார் விக்ரம் மிஸ்ரி.
இதோடு, பாகிஸ்தானில் உள்ள பிபிசி செய்தியாளர் இந்தப் படம் தொடர்பான பல கூடுதல் தகவலகளைப் பகிர்ந்து கொண்டார்.
“மே 7 மற்றும் மே 8ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் இந்தியா தாக்குதல் நடத்தியபோது, பஹவல்பூரில் உள்ள மசூதியும் தாக்குதலுக்கு இலக்கானது. இந்த மசூதி மஸ்ஜித் சுப்ஹான் அல்லா என்றும் அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 4 ஏவுகணைகள் இங்கு தாக்கியதாக உள்ளூர் மக்கள் எங்களிடம் கூறினர். இந்த மசூதி கடந்த காலத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான ஜெய்ஷ்-இ-மொஹமத்தின் தலைவர் மசூத் அசாருடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டது.
ஆனால் இப்போது பாகிஸ்தான் அதிகாரிகள் இது ஒரு மசூதி என்றும் ஜெய்ஷ்-இ-மொஹமத் தடை செய்யப்பட்ட பிறகு, அதன் நிர்வாகம் அரசாங்கத்தின் கைகளில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த மசூதி தாக்கப்பட்டபோது, 13 பேர் இறந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த 13 பேரின் நமாஸ்-இ-ஜனாசா அதாவது இறுதி சடங்குகள் நேற்று பஹவல்பூர் நகரில் நடந்தது, அவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸில் இந்த மசூதிக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டன.
இந்த மசூதியைச் சுற்றியுள்ள பகுதி காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஊடகங்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் அவர்கள் எங்கே, எப்படி அடக்கம் செய்யப்பட்டார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் ஆம், ஆம்புலன்ஸ் அவர்களை கொண்டு வந்தது” என்றார்.