சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனைக்குச் சென்று, அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதேபோல் காய்ச்சல், சளி, இருமல் பிரச்சினைக்காக இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் குடும்பத்தினரையும் சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உடன் இருந்தனர். முன்னதாக, காலையில் மருத்துவமனைக்கு வந்த ராமதாஸ் மகனும், பாமக தலைவருமான அன்புமணி, மருத்துவர்களை சந்தித்து உடல்நிலை குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தாயார் சரஸ்வதியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறும்போது, “ராமதாஸுக்கு கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும். அவர் ஐசியு-வில் இருப்பதால் பார்க்க முடியவில்லை” என்றார்.
கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறும்போது, “அன்புமணி வந்து சென்றதாக சொன்னார்கள். அவர் ராமதாஸை பார்த்தாரா, பேசினாரா என்பது தெரியவில்லை. ராமதாஸ் ஐசியு-வில் இருந்து சாதாரண வார்டுக்கு வந்துவிட்டார்” என்றார். இதேபோல் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமியும் ராமதாஸை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
இதனிடையே அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் பி.ஜி.அனில் வெளியிட்ட அறிக்கையில், “மூத்த இதய சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் ராமதாஸின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ், வைகோ இருவரும் விரைவில் நலம் பெற வேண்டிஅமமுக பொதுச்செயலாளர்டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.