பட மூலாதாரம், draramadoss/X
‘இது எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம்’ – அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்த பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறிய வார்த்தைகள் இவை.
ஆனால், இந்த கூட்டணியை ஒரு ‘நாடகம்’ என விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். தானே அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த பல மாதங்களாகவே ராமதாஸ்-அன்புமணி இடையேயான வார்த்தை போர் தீர்க்கப்படாத நிலையில், அன்புமணி தரப்புடன் கலந்தாலோசித்து கூட்டணி முடிவாகியிருக்கிறது.
ராமதாஸ் இல்லாத அன்புமணி தரப்புடன் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்திருப்பது, களத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? பாமகவின் வாக்கு சதவிகிதம் அப்படியே இந்த கூட்டணிக்கு கிடைக்குமா அல்லது பிளவுபடுமா? ஒன்றிணைந்த பாமகவின் கடந்த கால தேர்தல் வரலாறு உணர்த்தும் செய்தி என்ன?
கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலை தனித்தனியே கூட்டணி அமைத்து சந்தித்த அதிமுகவும் பாஜகவும் மீண்டும் இணைந்தன. இரு கட்சிகளும் இணைந்தே வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கப் போவதாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதமே மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா அறிவித்தார்.
ஆனால், அதன்பிறகு எந்தவொரு முக்கிய கட்சியும் அதன் கூட்டணியில் இணையாமலேயே இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த வாரம் அமித் ஷா தமிழகம் வந்திருந்தபோது எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார். அதற்கடுத்த சில தினங்களிலேயே அன்புமணி ராமதாஸ் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தார். செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் தொடர்பான கேள்வியை அப்போதே தவிர்த்தார் அன்புமணி. ‘இதுவொரு வெற்றி கூட்டணி’ என எடப்பாடி பழனிசாமி – அன்புமணி இருவருமே அறிவித்தனர்.
பாமக என்கிற கட்சி தொடங்கப்பட்டதிலிருந்தே அக்கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது என்பது ஒவ்வொரு தேர்தலிலும் பேசுபொருளாக இருக்கும். ஆனால், இந்த தேர்தலில் ராமதாஸ்-அன்புமணி பிளவு ஏற்பட்டு இருவரும் தனித்தனி பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இட ஒதுக்கீட்டுக்காக 1980களின் இறுதியில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்திய வன்னியர் சங்கம், 1989இல் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது. அதைத் தொடர்ந்து, 1991ஆம் ஆண்டில் இருந்து தேர்தல் அரசியலில் பங்கெடுத்துவருகிறது.
வன்னியர் சமூக வாக்குகளே அக்கட்சியின் பலமாக கருதப்படுகிறது. பெரும்பாலும் திமுக-அதிமுக என திராவிட கட்சிகளை சார்ந்தே அதன் தேர்தல் வரலாறு அமைந்துள்ளது. அப்படியிருக்கையில், அன்புமணியின் இந்த முடிவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
பட மூலாதாரம், DR. S. RAMADOSS FB
பாமக வாக்குகள் யாருக்கு போகும்?
மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “அப்பாவிடம் (ராமதாஸ்) இருக்கும் அணி பலவீனமாக உள்ளது, மகனிடம் உள்ள அணி பலமாக இருக்கிறது. அதனால் தான் எடப்பாடி பழனிசாமி அன்புமணியுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.” என்கிறார்.
பாமக கடைசியாகப் போட்டியிட்ட 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்டு 4.33 சதவிகித வாக்குகளையே பெற்றது. தருமபுரியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி மட்டுமே இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
“இந்த மாதிரியான சூழலில் இந்த பிளவால் சுமார் ஒரு சதவிகித வாக்குகள் ராமதாஸ் பக்கம் செல்லலாம். மற்றபடி 3 சதவிகித வாக்குகள் அன்புமணி பக்கமே இருக்கும். இது அவர்களின் தேர்தல் கூட்டணிக்கு உதவும்.” என கணிக்கிறார் குபேந்திரன்.
ஆனால், மற்றொரு மூத்த பத்திரிகையாளரான ஜென்ராம் இக்கருத்தில் முரண்படுகிறார்.
“ராமதாஸ்-அன்புமணி இருவருமே தங்களுக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள் என கூறுகின்றனர். ஆனால், இயல்பாகவே சாதாரண மக்கள் ராமதாஸுக்கு தான் வாக்களிப்பார்கள் என நினைக்கிறேன். இளைஞர்கள், புதிய சக்திகள் அன்புமணிக்கு ஆதரவு கொடுக்கலாம். ஆனால், ராமதாஸுக்கு கூடுதல் ஆதரவு இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் பாமக அவர் ஆரம்பித்த கட்சி, அக்கட்சியின் முகமாக களத்தில் ராமதாஸ் தான் அறியப்படுகிறார். கட்சியை, நிர்வாகிகளை நிர்வாகிக்கும் மேலாளராக அன்புமணி அறியப்பட்டிருக்கலாம். மேலாளரை பிடித்திருந்தாலும் தலைவரைத்தானே வழிகாட்டியாக எடுத்துக்கொள்ள முடியும். எனவே, மேலாளரை விட தலைவருக்குதான் ஆதிக்கம் அதிகம் என நினைக்கிறேன்.” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Anbumani/X
ராமதாஸ் கூறியது என்ன?
அன்புமணி கூட்டணி அறிவித்த மறுநாளான வியாழக்கிழமை தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “நான் தான் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர். சேலத்தில் நான் கூட்டிய பொதுக்குழு, செயற்குழுவுக்கு வந்த கூட்டமே அதற்கு சாட்சி. அன்புமணியிடம் சில நபர்கள் பணத்திற்காக ஆசைப்பட்டு சென்றிருக்கின்றனர். ஒரு தந்தைக்கே இவ்வளவு துரோகம் செய்தவருக்கு மக்கள் வாக்கு செலுத்த மாட்டார்கள்.” என தெரிவித்தார்.
அன்புமணி பாமக சார்பில் கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு என்றும், ‘நாடகம்’ என்றும் அவர் கூறினார். தன்னுடைய தலைமையில்தான் கூட்டணி குறித்து பேச முடியும் என்றும் தான் அமைக்கும் கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
“ராமதாஸை கலந்தாலோசிக்காமல், அனுமதி பெறாமல் விதி 13-யின்படி எந்தவொரு கூட்டமும் நடத்தப்பட கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதை மதிக்காமல் (அன்புமணி தரப்பு) பொதுக்குழு எனும் பெயரில் கூட்டம் நடத்தியது சட்ட விரோதம் என” செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் தெரிவித்தார்.
ஆனால், சேலத்தில் கடந்த டிசம்பர் 17 அன்று ராமதாஸ் நடத்திய செயற்குழு – பொதுக்குழு செல்லாது என தொடர்ந்து கூறிவருகிறது அன்புமணி தரப்பு. அந்த கூட்டத்தில் தான் பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அன்புமணி தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு “17.08.2025ல் ராமதாஸ் தரப்பு ஒரு பொதுக்குழு நடத்தி அதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, அதை ஆணையமும் நிராகரித்துவிட்டது” என்கிறார்.
“ஆனால், அதற்கு முன்பாக, 9.08.2025 அன்று மாமல்லபுரத்தில் நாங்கள் நடத்திய பொதுக்குழுவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி அதை ஆணையம் அங்கீகரித்தது. அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வரை அவருடைய பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவு வழங்கியது. அந்த உத்தரவின் கடிதத்தை எங்களுக்கு அனுப்பினார்கள்.” என்றார் அவர்.
“ராமதாஸ் தரப்பு சட்டப்படி நிறைய கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. அந்த தரப்புக்கு ஆணையம் அனுப்பிய பதிலில், ‘இதற்கு முன்பாக அன்புமணிதான் தலைவராக இருந்ததற்கான சான்றுகள், பதிவுகள் உள்ளன, வேறு பதிவுகள் இல்லை. இதுதொடர்பாக நீங்கள் சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள் என கூறியது.’ அதேபோன்று, 4.12.2025 அன்று தேர்தல் ஆணையம் எங்களுக்கு கொடுத்த கடிதத்தை ரத்து செய்யுமாறு தொடுத்த வழக்கிலும் சிவில் நீதிமன்றத்தை நாடுங்கள் என டெல்லி நீதிமன்றம் கூறியது.” என்றார் அவர்.
ஆனால், மாமல்லபுரத்தில் நடத்திய பொதுக்குழுவை அன்புமணி நடத்துவதற்கு எதிராகவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டதாக கூறுகிறார் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள். 17.08.2025 அன்று நடத்திய பொதுக்குழுவின்படி ராமதாஸே பாமக தலைவர் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், அதற்கு முன்பே அன்புமணி தரப்பு பொதுக்குழு நடத்தக்கூடாது என்றே வழக்கு தொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், @draramadoss/x
பாமகவின் வாக்கு வங்கி தற்போது சுமார் 4% என சுருங்கியிருந்தாலும், கடந்த பல தசாப்தங்களாக பாமக கூட்டணி அமைக்கும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் என்ற வாதம் பரவலாக இருந்தது.
ஆனால், அது 2009ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டதாக கூறுகிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
எனினும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் அன்புமணி பக்கம் இருப்பதால், கட்சி, சின்னம், பெரும்பாலான நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாகவே இருப்பதாக கூறுகிறார் அவர். அதனாலேயே அதிமுக அன்புமணி தரப்புடன் பேசியிருப்பதாக கூறுகிறார்.
“அரசியலில் சில விநோதங்கள் நடக்கும். அதிமுக பக்கம் ராமதாஸ் செல்ல வேண்டும் என மும்முரமாக இருந்தார். பலமுறை அதை கூறியுள்ளார். என் மகனும் மருமகளும் பாஜக பக்கம் கொண்டு போய்விட்டதாக கூறினார். அப்படிப்பட்ட அன்புமணிதான் அதிமுகவை நோக்கி ஓடிவந்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியுடன் தான் அன்புமணி பேசியிருக்கிறார்.” என்கிறார் குபேந்திரன்.
ராமதாஸுடனும் கூட்டணி இறுதியாவதற்கு கடைசி நிமிடம் வரை அதிமுக பேசியிருப்பதாக கூறும் அவர், அப்பாவிடம் பேசினால் தான் வரமாட்டேன் என அன்புமணி கூறியதால், அவரை சேர்த்துக்கொண்டுள்ளனர் என்றார்.
பட மூலாதாரம், Dr S Ramadoss/X
ராமதாஸுக்கு என்ன வாய்ப்பு?
அன்புமணியின் அணுகுமுறை ராமதாஸ் இனி தன்னுடன் இணையவே முடியாது என்ற முடிவை நோக்கிதான் தள்ளுகிறது எனக்கூறுகிறார் பத்திரிகையாளர் ஜென்ராம்.
பாமகவுக்கு தற்போதுள்ள 5 எம்எல்ஏக்களில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களாக சிவகுமார் (மயிலம் தொகுதி), சதாசிவம் (மேட்டூர் தொகுதி), வெங்கடேஸ்வரன் (தருமபுரி தொகுதி) ஆகியோர் உள்ளனர். சதாசிவம் மற்றும் சிவகுமாரின் கட்சி பதவிகளை ஏற்கெனவே பறிப்பதாக அறிவித்துள்ளார் ராமதாஸ். எம்எல்ஏக்கள் அருள் (சேலம்) மற்றும் ஜி.கே.மணி (பென்னாகரம்) ஆகியோர் ராமதாஸுக்கு ஆதரவாக உள்ளனர்.
தங்களுடைய பக்கமே முழு கட்சியும் இருப்பதாக கூறும் அன்புமணி தரப்பின் வழக்கறிஞர் பாலு, அன்புமணி – ராமதாஸ் அணிகள் என ஊடகங்கள் விளிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. “கட்சி ஒரே கட்சிதான். அது எங்களிடம் தான் உள்ளது. மக்களின் ஆதரவும் எங்களுக்கே.” என்றார்.
ஆனால், வட மாவட்டங்களில் பல கட்சிகள் தங்கள் பலத்தை இழந்திருப்பதாகவும் எல்லா கட்சிகளும் அந்த பகுதிகளில் இழப்பை சந்திக்கக்கூடும் என்றும் கணிக்கிறார் குபேந்திரன்.
“திருப்பத்தூர், கடலூர், சிதம்பரம் வரை விஜய்க்கு வரவேற்பு இருக்கிறது. அதனால் எப்படி இருக்கும் என சொல்ல முடியாது. அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் என எல்லா கட்சிகளும் அங்கு தங்களுக்கான பலத்தை இழந்திருக்கின்றன.” என்கிறார் அவர்.
ராமதாஸ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதில் தெளிவின்மையே நிலவுகிறது. “கட்சியின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் கூட்டணி குறித்து ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும்.” என ராமதாஸ் கூறியிருக்கிறார்.
அதேபோன்று, பிபிசி தமிழிடம் பேசிய ராமதாஸ் தரப்பு எம்எல்ஏ அருள், “இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். இரண்டு நாட்கள் ஆகும்” என்றார்.
பட மூலாதாரம், Balu Kaliyaperumal/Facebook
“ராமதாஸுக்கான வாய்ப்பை கணிக்கவே முடியாது. திமுகவில் இணைந்தால் விசிக தலைவர் திருமாவளவன் ஏற்க மாட்டார். விஜயை முதலமைச்சராக்க ராமதாஸ் பணியாற்றுவதற்கு வாய்ப்பே கிடையாது. பெரிய குழப்பத்தில் தான் இருப்பார். அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய நிலை கூட வரலாம்.” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
இந்த கேள்விக்கு பதிலளித்த ஜென்ராம், “திமுக பாணி கட்சிக்கு செல்வதற்கான விருப்பம் இருக்கிறது. திமுகவில் ஒரு சிறிய பிரிவு அவர் வருவதை விரும்பக்கூடும். ஆனால், திருமாவளவன் எப்படி எடுத்துக்கொள்வார்? அவரின் விருப்பத்திற்கு விரோதமாக ஸ்டாலின் நடக்க மாட்டார். திருமாவளவனுடன் சமரசத்துடன் சேர்ந்து ஏற்பாடு நடந்தால் அதற்கான வாய்ப்பு இருக்கும். தனியாக நிற்கக்கூடிய வாய்ப்பில்லை. வெல்ல வாய்ப்புடைய ஒரு கூட்டணிக்குதான் அவர் செல்வார் என நினைக்கிறேன்.” என தெரிவித்தார்.
பாமக கடந்து வந்த பாதை
பாமக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பாமகவின் மீது கவனம் குவிந்தது.
1991ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் எந்தப் பெரிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் பாமக போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், அக்கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், 12 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. அதோடு, ஆறு சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தது.
1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான திவாரி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 116 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. ஆண்டிமடம், எடப்பாடி, தாரமங்கலம், பென்னாகரம் ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு ஏழு தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.
கடந்த 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, 5 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்து வந்த 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுக்கு பதிலாக திமுக இடம்பெற்றது. அந்தக் கூட்டணியில் தொடர்ந்த பாமக 7 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் வென்றது.
கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறிய பாட்டாளி மக்கள் கட்சி 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களைக் கைப்பற்றியது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 6 இடங்களில் (தமிழ்நாடு 5, புதுச்சேரி 1) வெற்றி பெற்றது.
அடுத்து வந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது.
1998ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்வரை, பாமக எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அந்தக் கூட்டணிதான் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது.

அதன்பின் தான் பாமகவுக்கு பின்னடைவு ஆரம்பித்தது. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது. இந்தக் கூட்டணியில் பா.ம.க., ஆறு இடங்களில் போட்டியிட்டாலும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பாமக 30 இடங்களில் போட்டியிட்டது (முதலில் 31 இடங்கள் ஒதுக்கப்பட்டு பிறகு ஒரு இடத்தைத் திருப்பி அளித்தார் ராமதாஸ்). ஆனால், 3 இடங்களில் மட்டும்தான் வெற்றி கிடைத்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பா.ம.க. 8 இடங்களில் போட்டியிட்டு, தருமபுரி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற கோஷத்தை முன்வைத்து களத்தில் இறங்கியது பா.ம.க. ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைத்தது பா.ம.க. ஆனாலும், அந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் அக்கட்சியால் வெற்றி பெற இயலவில்லை. 2021ஆம் ஆண்டிலும் அதே கூட்டணியில் தொடர்ந்த பா.ம.க., 23 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது.
பாமகவின் வீழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த குபேந்திரன், “சாதி, குடும்ப அரசியலை நம்பியிருக்கும் கட்சிகளுக்கு ஆபத்து உள்ளது. சாதிகட்சி இவ்வளவு பலனோடு இருந்தது இந்த கட்சி மட்டும்தான். 2009 உடன் அதுவும் முடிந்துவிட்டது. 2011க்கு பிறகு சரிவுதான். சாதிய கட்சிகள் இனி வலுப்பெறாது.” என கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு