• Mon. Nov 25th, 2024

24×7 Live News

Apdin News

“ராமதாஸ் கேள்விக்கு ஸ்டாலின் அளித்தது தரக்குறைவான பதில்!” – அண்ணாமலை கண்டனம் | Chief Minister Stalin’s poor response to Ramadoss’ question is condemnable: Annamalai

Byadmin

Nov 25, 2024


சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை ஸ்டாலின் மறந்து விட்டார் போலும். ராமதாஸ் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்? அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதல்வரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதல்வர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் சொன்னது என்ன? – முன்னதாக, அதானி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதானி விவகாரம் குறித்து துறையின் அமைச்சரே கூறியிருக்கிறார். அதை ட்விஸ்ட் செய்ய வேண்டாம்” என்றார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து, அதானி – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு குறித்த ராமதாஸின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்தவர், “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி காட்டம்: இதனிடையே, “முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கத் தேவையில்லை. ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். ‘ராமதாஸுக்கு வேலை இல்லை’ கூறியது ஸ்டாலினின் அதிகார அகம்பாவத்தையே காட்டுகிறது. அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு குறித்தும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்தும் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். | முழுமையாக வாசிக்க > ‘ராமதாஸுக்கு வேலை இல்லை’ என ஸ்டாலின் கூறியது அதிகார அகம்பாவம்: அன்புமணி கொந்தளிப்பு



By admin