• Fri. Nov 22nd, 2024

24×7 Live News

Apdin News

ராமேசுவரத்தில் ஒரே நாளில் 44 செ.மீ மழை – முகாமில் மீனவ குடும்பங்கள் தங்கவைப்பு | 44 cm of rain recorded in Rameswaram: Fishermen families shelter in relief camp

Byadmin

Nov 21, 2024


ராமேசுவரம்: ராமேசுவரம் கடலோரப் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக ஒரே நாளில் அதிகப்பட்சமாக 43.8 செ.மீ மழை பதிவானது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பத்தினர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

புதன்கிழமை காலை 6 மணியிலிருந்து வியாழக்கிழமை காலை 6 மணி வரையிலும் ராமேசுவரத்தில் அதிகப்பட்சமாக 43.8 செ.மீ, தங்கச்சிமடம் 33.8 செ.மீ, பாம்பன் 28 செ.மீ, மண்டபம் 27.1 செ.மீ மழையும் பதிவானது. இதனால் ராமேசுவரத்தில் உள்ள காந்திநகர், அண்ணா நகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர், மீனவர் குடியிருப்புகளான ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், மாந்தோப்பு, தங்கச்சிமடம் விக்டோரியா நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

பாம்பன் பாலம் பகுதியில் பெய்த மழை

பாம்பன் முந்தல்முனை, தோப்புக்காடு, மண்டபம் கலைஞர் பகுதிகளிலும் மழைநீர் மீனவர்களின் குடிசைகளுக்குள் புகுந்தது. இதனால் பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர். மழையினால் பாதிக்கப்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் பாம்பனில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாம்பன் தோப்புக்காடு பகுதி குடியிருப்பு பகுததிக்குள் புகுந்த மழை நீர்

மாணவர்கள் அவதி: அதுபோல, ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் பள்ளி மாணவர்கள் மிகுந்த அவதிப்பட்டனர்.

பாம்பன் மழை நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவ குடும்பத்தினர்.

தொடர்ந்து மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதனை வெளியேற்ற மற்றும் மீட்புப் பணிகளில் ராமேசுவரம் தாலுகா, நகராட்சி, தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சி, மண்டபம் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். | வாசிக்க > வானிலை முன்னெச்சரிக்கை: டெல்டா மாவட்டங்களில் நவ.25-27 மிக கனமழைக்கு வாய்ப்பு



By admin