• Thu. Oct 17th, 2024

24×7 Live News

Apdin News

ராமேசுவரம் அருகே ரூ.44 கோடியில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் விரைவில் துவக்கம்! | Rs. 44 crore sea water sports center going to start soon in Rameswaram

Byadmin

Oct 17, 2024


ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசையில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன. தமிழ்நாட்டில் 1,076 கி.மீ நீளத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக தெற்கே மன்னார் வளைகுடா, வடக்கே பாக் ஜலசந்தி என 237 கி.மீ நீளத்திற்கு இரண்டு கடல்கள் அமைந்துள்ளது. இதில் தனுஷ்கோடி, ராமேசுவரம் பாம்பன், பிரப்பன் வலசை ஆகிய கடற்கரை பகுதிகளில் அலைச்சறுக்கு, நீச்சல், துடுப்பு படகு, பெடல் படகு, உள்ளிட்ட பல்வேறு நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடங்களாக உள்ளன.

இந்த இடங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நீர் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்து தனியார் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நீர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக கடற்கரை பகுதியை சுத்தமாக வைத்திருத்தல், கடல்வளம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மீனவர்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி மாநில மற்றும் தேசிய அளவிலான நீர்விளையாட்டுப் போட்டிகளை ராமேசுவரம், பாம்பன், அரியமான் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.

மேலும், தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரையிலான இந்திய – இலங்கை நாடுகளுக்கு இடையேயான பாக் நீரிணை பகுதியை ஆண்டு தோறும் நீச்சல் வீரர், வீராங்கனைகள் தனியாகவோ குழுவாகவோ ரிலே மற்றும் மாரத்தான் முறையிலும் நீந்தி கடக்க ஆண்டு தோறும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், ”ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்” என அறிவித்திருந்தார்.

இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரையில் நீர் விளையாட்டு வல்லுநர்கள் மூலம் கடல் நீரின் தரம், தண்ணீரின் ஓட்டம், காற்றின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்க தமிழக அரசு ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்க உள்ளது” எனத் தெரிவித்தார். ராமேசுவரம் அருகே கடல் சார் நீர் விளையாட்டு மையம் உருவாகுமேயானால் சுற்றுலா வளர்ச்சிக்கு மட்டுமின்றி, மீனவ இளைஞர்கள் மத்தியிலிருந்து பல நீர் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உருவாவாவார்கள் என்பது நிச்சயம்.



By admin