• Sun. Aug 10th, 2025

24×7 Live News

Apdin News

ராமேசுவரம் மீனவர்கள் ஏழு பேர் கைது: தங்கச்சிமடத்தில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு | Seven Rameswaram fishermen arrested

Byadmin

Aug 9, 2025


ராமநாதபுரம்: ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள்,உறவினர்கள் கைக்குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்துக்கும் மேலாக மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று (ஆக.09) காலை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு இலங்கை மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அந்த படகை சிறைபிடித்தனர். பின்னர் படகிலிருந்த டல்லஸ்(56), சிலைடன் (26), அருள் ராபர்ட் (53), லொய்லன் (45), ஆரோக்கிய சான்ரின் (20), பாஸ்கர் (45),ஜேசு ராஜா (32) ஆகிய ஏழு மீனவர்களை கைது செய்து, மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் முதற்கட்ட விசாரணைக்கு பின், ஏழு மீனவர்களை படகுடன் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக மன்னார் மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை 4 மணி நேரத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை படகுடன் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இன்று மாலை கைக்குழந்தைகளுடன் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் தங்கச்சிமடத்தில் மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட மீனவர்களின் உறவினர்கள், மீனவர்கள்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் ராமேசுவரத்துக்கு வரக்கூடிய பிரதான சாலையில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 5 கி.மீ தூரத்துக்கு இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன.



By admin