ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள 30 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இலங்கையின் தொடர் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 4 விசைப்படகுகளையும், அதிலிருந்த 30 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை அக்.23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள 30 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ராமேசுவரம் மீனவர்கள் தொடங்கினர்.
இந்நிலையில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மீனவர்கள், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் அருகே மீன்வளத்துறையின் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவ சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜ், என்.ஜெ.போஸ், எமரிட், சகாயம், எமரால்டு உள்ளிட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் உடனடியாக படகுடன் மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறையில் உள்ள மீனவரின் மனைவி மஞ்சு ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த பெண்கள் மஞ்சுவுக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானம் கொடுத்து அமர வைத்தனர்.