• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழை நீர் – பக்தர்கள் அவதி | devotees are suffering due to stagnant rainwater inside Rameswaram Ramanathaswamy Temple

Byadmin

Oct 6, 2024


ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்தது. மேலும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் தேங்கிய மழைநீரை ஊழியர்கள் வெளியேற்றினர்.

வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 11-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட ஊர்களின் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போலக் காணப்பட்டது. மேலும், ராமநாதசுவாமி கோயிலில் அம்பாள் சன்னதியில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் சிரமப்பட்டனர். தொடர்ந்து கோயில் ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பாம்பனில் அதிகப்பட்சமாக 69.20 மி.மீ மழை பதிவானது. தீர்த்தாண்டதானம் 33.60, ஆர்.எஸ். மங்கலம் 26.20, வெட்டானம் 24.20, தொண்டி 20.50, பரமக்குடி 19.04, முதுகுளத்தூர் 12.20, திருவாடானை 10.60, ராமேசுவரம் 00.40 மி.மீ மழையும் பதிவானது.



By admin