• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

ராமேசுவரம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: மீனவர் காங்கிரஸ் அறிவிப்பு | Black flag protest against PM Modi’s visit to Rameswaram: Fishermen Congress 

Byadmin

Apr 1, 2025


ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ வெளியிடுள்ள அறிக்கையில், “கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2025 தற்போதைய மார்ச் மாதம் வரையிலும் 10 ஆண்டுகளில் 480 படகுகள் கைப்பற்றப்பட்டு 3,800 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் மாதம் வரையிலுமான மூன்று மாதத்தில் மட்டும் 21 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு 159 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த6 ஆண்டுகளில் 185 படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் நாட்டுடமையாக்கி உள்ளன. நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து விறகுகளாகவும், இயந்திரங்களை பழைய இரும்பு கடைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. கடந்த காலங்களை விட, தற்போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது அதிகரித்துள்ளதுடன், மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கி உள்ளது.

ஆனால், கடந்த 11 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக ஆட்சியில் கடந்த மூன்று நாடாளுமன்ற தேர்தல்களில் அளிக்கப்பட்ட மீனவர் நலனுக்கன தனி அமைச்சகம், மீன்பிடித் தொழிலை, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றி, இந்திய நாட்டில் வாழும் பாரம்பரிய மீனவச் சமுதாயத்தை பழங்குடியினராக அங்கீகத்தல், புயல், பெருமழை, சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின்போது விவசாயிகளின் வங்கி கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்யும்போது மீனவர்களின் தொழில் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

ஏப்ரல் 4 அன்று இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்யவும், கைப்பற்றப்பட்ட மீனவர்கள் படகுகளை நிபந்தனையின்றி விடுவிக்கவும், இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை நடத்திடவும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை பிரதமர் மோடியும், மத்திய அரசும் நிறைவேற்றி தராதபட்சத்தில், புதிய பாம்பன் பாலத்தை திறப்பதற்காக ராமேஸ்வரத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி வருகை தரும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பாக, மீனவர்களை திரட்டி கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அகில இந்திய மீனவர் காங்கிரஸ், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin