இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
இன்று இலங்கை பயணத்தை நிறைவு செய்து விட்டு மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி வருகை தந்தார்.
அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு வந்த நரேந்திர மோதி ரூ.550 கோடி செலவில் பாம்பன் – மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மண்டபத்திலிருந்து புறப்பட்டு வந்த சிறப்பு ரயில் ராமேஸ்வரத்திற்கு சென்றது.
அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நரேந்திர மோதி வந்தார்.
பின்னர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவில் ராமேஸ்வரம் – தாம்பரம் தினசரி விரைவு ரயிலை தொடங்கி வைத்தார்.
மேலும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், முடிவுற்ற திட்டங்களும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 8,300 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது
விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பேசுகையில், “பாம்பன் புதிய பாலத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் பாலம்தான், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம். இந்த பாலத்தினடியில் பெரிய கப்பல்களும் பயணத்தை மேற்கொள்ள முடியும். ராமேஸ்வரத்திலிருந்து பிற பகுதிகளுக்கு இடையிலான இணைப்பினை இந்த பாலம் ஏற்படுத்துவதுடன், தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகங்களுக்கு பயனுள்ளதாக அமையும்” என்றார்
மேலும், “முன்பிருந்த அரசை விட கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு அதிக அளவில் உதவி புரிந்துள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதி தந்துள்ளோம். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ரயில் திட்டங்களுக்காக தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. இவற்றையெல்லாம் செய்த பின்னரும் சிலர் அழுதுகொண்டே இருக்கின்றனர். அவர்களால் அழ மட்டுமே முடியும். அவர்கள் அழுது விட்டு போகட்டும்.” என்றார் மோதி.
தமிழ்நாடு மீனவர்கள் கைது சம்பவங்களை குறிப்பிட்டு பேசிய பிரதமர், “மீனவர்களின் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கிறது. மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 3,700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு வருடத்தில் 600 மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.” என்றார்.
“தமிழ்நாட்டு தலைவர்களிடம் இருந்து எனக்கு வரும் கடிதங்களில் அவர்கள் யாருமே தமிழில் கையெழுத்து போடுவதில்லை. தமிழ் குறித்து நீங்கள் பெருமையாக உணர்ந்தால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்” என்றார் மோதி.
மேலும், தமிழில் மருத்துவப் படிப்புகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திய மோதி, இதனால், ”ஏழை குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவ கனவு நனவாகும்” என்றார்.