0
இலங்கையிலும் இந்தியாவிலும் கூட்டாக நடத்தப்படவுள்ள 10ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இணை வரவேற்பு நாடுகளான இலங்கை கடினமான குழுவிலும் இந்தியா இலகுவான குழுவிலும் இடம்பெறுவதனை உத்தியோகப்பற்ற தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.
அதேவேளை, பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரே குழுவில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
உலகம் முழுவதும் கிரிக்கெட்டை வியாபிக்கச் செய்யும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் குறிக்கோளுக்கு அமைய 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது.
2022இல் ரி20 உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்பட்ட முறைப்படியே இந்த வருட உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்படும்.
இந்த 20 அணிகளும் நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று லீக் போட்டிகள் நடத்தப்படும்.
அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவை தரவரிசையில் 8ஆம் இடத்தில் உள்ள இணை வரவேற்பு நாடும் முன்னாள் சம்பியனுமான இலங்கை, ஐசிசியில் பூரண அந்தஸ்துபெற்ற அவுஸ்திரேலியா (2), ஸிம்பாப்வே (11), அயர்லாந்து (12) ஆகிய அணிகளுடன் சற்று கடினமான குழுவில் இடம்பெறுகின்றது. இந்தக் குழுவில் ஓமான் (20) அணியும் இடம்பெறுகின்றது.
பிரதான வரவேற்பு நாடும் நடப்பு ரி20 உலக சம்பியனுமான இந்தியாவுடன் பூரண அந்தஸ்துபெற்ற பாகிஸ்தான் (7) ஒரே குழுவில் இடம்பெறுகின்றது. இந்த இரண்டு அணிகளுடன் நெதர்லாந்து (13), நமிபியா (15), ஐக்கிய அமெரிக்கா (18) ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் எவ்வித சிரமும் இன்றி சுப்பர் 8 சுற்றில் கால்பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு குழுவில் தலா இரண்டு தடவைகள் சம்பியனான இங்கிலாந்து (3), மேற்கிந்தியத் தீவுகள் (6) ஆகியவற்றுடன் பங்களாதேஷ் (9), நேபாளம் (17), இத்தாலி (28) ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.
ஐக்கிய அமெரிக்காவில் 2024இல் நடைபெற்ற மிகவும் பரபரப்பான ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியனான தென் ஆபிரிக்காவுடன் நியூஸிலாந்து (4), ஆப்கானிஸ்தான் (10), ஐக்கிய அரபு இராச்சியம் (16), கனடா (18) ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.
ஐசிசிக்கும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கும் இடையில் ஏற்கனவே காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான லீக் போட்டி கொழும்பில் நடைபெறும்.
கிரிக்பஸ் இணையத்தளத்திற்கு அமைய மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி, அஹமதாபாத் ஆகிய இந்திய மைதானங்களிலும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கு, கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய இலங்கை மைதானங்களிலும் உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்படும்.
ஒருவேளை பாகிஸ்தான் இறுதிவரை முன்னேறினால் பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட அரை இறுதியும் இறுதி ஆட்டமும் கொழும்பில் நடைபெறும்.
பாகிஸ்தான் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினால் அரை இறுதிகள் மும்பையிலும் கொல்கத்தாவிலும் இறுதிப் போட்டி அஹமதாபாத்திலும் நடைபெறும்.
இதில் மாற்றங்கள் ஏற்படாது என நம்பப்படுகிறது.
ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நாளை 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



