1
மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தியதும் கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்டதுமான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 7 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நடப்பு சம்பியன் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
இதனை அடுத்து அஹமதாபாத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி ரி20 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை இந்தியா எதிர்த்தாடவுள்ளது.
ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இந்தியாவின் வெற்றியில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக சஞ்ச செம்சன் குவித்த அரைச் சதம் பெரும் பங்காற்றியது.

அதேவேளை, இங்கிலாந்தின் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்த ஜேக்கப் பெத்தெல் அபார சதம் குவித்த போதிலும் கடைசி ஓவரில் அவர் தனது விக்கெட்டை ரன் அவுட் முறையில் பறிகொடுத்ததால் அது பயனற்று போனது.
இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 254 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்து உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.
கடினமான வெற்றி இலக்கை அடைவதற்கு அதிரடிதான் சிறந்தது என்ற எண்ணத்துடன் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
பில் சோல்ட் (5), அணித் தலைவர் ஹெரி ப்றூக் (7) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (38 – 2 விக்.). இது இங்கிலாந்துக்கு பேரிடியைக் கொடுத்தது.
ஜொஸ் பட்லர் வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முயற்சித்து 25 ஓட்டங்களுடன் வெளியேறினார். டொம் பென்டன் 17 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்க (95 – 4 விக்.) இங்கிலாந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.
ஆனால், ஜேக்கப் பெத்தெல், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.
வில் ஜெக்ஸ் 20 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பவுண்டறி எல்லையில் அவரது பிடியை எடுத்த அக்ஸார் பட்டேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியால் பந்தை அர்ஷ்தீப் சிங்கை நோக்கி எறிந்துவிட்டு பவுண்டறிக்கு வெளியே சென்றார். அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்ததால் வில் ஜெக்ஸ் ஆட்டம் இழந்தார். (172 – 5 விக்.)
தொடர்ந்து ஜேக்கப் பெத்தெல், சாம் கரன் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்திரந்தபோது சாம் கரன் 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இந் நிலையில் இந்திய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ்வும் சிரேஷ்ட வீரர்களும் தீவிர ஆலோசனை நடத்தி கடைசி ஓவரை ஷிவம் டுபேயிடம் ஒப்படைத்தனர்.
ஷிவம் டுபே அற்புதமாக பந்துவீசி முதல் 2 பந்துகளில் இரண்டு ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்வதை உறுதி செய்தார்.
ஷிவம் டுபேயின் முதல் பந்தில் இல்லாத இரண்டாவது ஓட்டத்துக்கு முயற்சித்த ஜேக்கப் பெத்தெல் ரன் அவுட் ஆனார்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜேக்கப் பெத்தெல் 48 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 105 ஓட்டங்களைக் குவித்தார்.
ஷிவம் டுபேயின் கடைசி 4 பந்துகளில் வைட் அடங்கலாக 20 ஓட்டங்கள் பெறப்பட்டது. அதனால் எவ்வித தாக்கமும் இந்தியாவுக்கு ஏற்படவில்லை.
பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, சஞ்சு செம்சனின் அபார துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது.
சஞ்சு செம்சன் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் அபராகமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்து இந்தியாவுக்கு கைகொடுத்தார்.
ஆரம்ப வீரர் அபிஷேக் ஷர்மா (9) இன்றைய போட்டியிலும் குறைந்த எண்ணிக்கைக்கு ஆட்டம் இழந்தார். (20 – 1 விக்.)
ஆனால், சஞ்சு செம்சன், இஷான் கிஷான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.
இஷான் கிஷான் 18 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார்.
மொத்த எண்ணிக்கை 160 ஓட்டங்களாக இருந்தபோது சஞ்சு செம்சன் ஆட்டம் இழந்தார்.
சஞ்சு செம்சன் 42 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைக் குவித்தார்.
அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் (11) பிரகாசிக்கத் தவறினார்.
தொடர்ந்து ஷிவம் டுபே 25 பந்துகளில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டறிகள் உட்பட 43 ஓட்டங்களையும் திலக் வர்மா 21 ஓட்டங்களையும் ஹார்திக் பாண்டியா 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வில் ஜெக்ஸ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சஞ்சு செம்சன் இரண்டாவது தொடர்ச்சியான ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.