• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

”ரூ. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்”: ஸ்டாலின் மீண்டும் உறுதி | Stalin Talks on three-language policy 

Byadmin

Feb 23, 2025


சென்னை: ரூ. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கழகத் தலைவர் – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23.02.2025) சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற கொளத்தூர் கிழக்குப் பகுதிச் செயலாளரும், தி.மு.க. ஐ.சி.எப். லேபர் யூனியன் பொதுச் செயலாளருமான வ. முரளிதரன்–லதா தம்பதியரின் மகன் மகேஷ்வர் மற்றும் திவ்யகணபதி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி, ஆற்றிய உரை:

நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு கொளத்தூர் கிழக்குப் பகுதியின் செயலாளர் நம்மடைய ஐ.சி.எஃப் முரளி இல்லத்தில் நடைபெறக்கூடிய மணவிழா இது. அவர் நன்றியுரை ஆற்றுகின்றபோது பேசமுடியாத சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டு, உணர்ச்சி ததும்ப ”எங்கள் குடும்பம் விசுவாசமாக இருக்கும். உங்கள் குடும்பத்திற்கும் விசுவாசமாக இருக்கும்” என்றெல்லாம் எடுத்துச் சொன்னார். நான் முரளியை கேட்டுக் கொள்ள விரும்புவது எங்கள் குடும்பம், உங்கள் குடும்பம் என்று பிரிக்க வேண்டாம். இது நம்முடைய குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்தை, ஒரு குடும்பப் பாச உணர்வோடு உருவாக்கித் தந்திருக்கக்கூடியவர் நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா.

அறிஞர் அண்ணா கழகத் தோழர்களைப் பார்த்து, தம்பி, தம்பி என்றுதான் அழைப்பார். அதேபோல, நம்முடைய கழகத் தலைவர் கருணாநிதி அனைவரையும் பார்த்து வயது முதிர்ந்தவராக இருந்தாலும், இளைஞராக இருந்தாலும், உடன்பிறப்பே என்று அழைக்கக்கூடியவர். இந்த இயக்கத்தை ஒரு குடும்பப் பாச உணர்வோடு உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட உணர்வோடுதான் நம்முடைய குடும்பத்தில் நடைபெறக்கூடிய மணவிழா நிகழ்ச்சியாகக் கருதி, நானும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

1983-ஆம் ஆண்டிலேதான் நம்முடைய முரளி அவர்கள் இளைஞர் அணியில் பொறுப்பேற்றுக் கொண்டு தன்னுடைய கடமையை நிறைவேற்றத் தொடங்கினார். பொறுப்பேற்ற காலத்திலிருந்து தொடர்ந்து, இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டு, உழைத்து, கண்துஞ்சாது, பசி மறந்து பல்வேறு தியாகங்களுக்கு எல்லாம் தன்னை ஒப்படைத்துக் கொண்டு அவர் இந்த வட்டாரத்தில், இந்தப் பகுதியில் பணியாற்றி, படிப்படியாகத்தான்; ஏதோ திடீரென்று நேரடியாகப் பொதுச் செயலாளராக வந்துவிடவில்லை; பகுதிக் கழகத்தின் பிரதிநிதியாக – மாவட்டக் கழகத்தின் பிரதிநிதியாக – மாவட்ட இளைஞர் அணியின் துணை அமைப்பாளராக; இப்படி படிப்படியாக உயர்ந்து, கழகத்திற்குப் பணியாற்றி ஒரு உரிய அங்கீகாரத்தை அவர் பெற்று, இன்றைக்குப் பகுதிக் கழகத்தின் செயலாளர்களில், அதுவும் சாதாரணமான பகுதிக் கழகச் செயலாளர் அல்ல, சிறப்பான பகுதிக் கழகச் செயலாளர்களில் ஒருவராக, அதுவும் ஓராண்டு ஈராண்டு அல்ல, 16 ஆண்டு காலம் தொடர்ந்து அந்தப் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றிக் கொண்டிருப்பவராக, இன்றைக்கு அவர் தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

எனவே, அந்த உழைப்புக்கும், அவருடைய விசுவாசத்திற்கும்தான் நான் மட்டுமல்ல – இங்கு வந்திருக்கும் அனைவரும் இன்றைக்கு மகிழ்ச்சியோடு வந்திருக்கிறீர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள், உழைப்புக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருப்பவர் நம்முடைய ஐ.சி.எப். முரளி என்பதை யாரும் மறுத்திட முடியாது.

நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு 75 ஆண்டு காலம். அந்த 75 ஆண்டுகால வரலாற்றைப் பெற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில், இன்றைக்கு இணைத்துக் கொண்டு பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்றக் கூடியவர்கள் ஏராளமாக வந்து கொண்டு இருக்கலாம்; அதே போல்தான் நம்முடைய முரளி அவர்கள் இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டுக் கொண்டிருப்பவர்.

நான் இந்தக் கொளத்தூர் தொகுதியில் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது, எனக்குத் துணை நின்று, என்னுடைய வெற்றிக்கு உழைத்தவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக நம்முடைய முரளி இருக்கிறார்கள். ”எப்படி இருக்கிறது தொகுதி?” என்று அவரிடத்தில் நான் கேட்பேன்… ”எதற்கும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் வரவே வேண்டியதில்லை. வீட்டிலேயே இருங்கள். நாங்கள் வெற்றி பெற்று உங்களிடத்தில் கொடுக்கிறோம்” என்று சொல்வார். அவ்வாறு சொல்லிவிட்டு, இந்தத் தெருவிற்கு வரவில்லை, அந்த தெருவிற்கு வரவில்லை என்று அழைப்பார். அது வேறு! அது நான் ஏதோ வெற்றி பெறுவதற்காக மட்டுமல்ல, கழகத் தோழர்கள் அந்தத் தெருவில்கூட என்னைக் காண வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக நீங்கள் வாருங்கள் என்றுதான் அழைப்பார். அப்படி எல்லாம் பணியாற்றுபவராக விளங்கிக் கொண்டிருப்பவர் நம்முடைய முரளி.

அது மட்டுமல்ல, எங்காவது இடைத்தேர்தல் வந்துவிட்டால் அந்த இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து, ஒவ்வொரு பகுதியிலிருந்து நம்முடைய கழகத் தோழர்களை நாம் அனுப்பி வைப்பதுண்டு. அவ்வாறு அனுப்பி வைக்கும் நேரத்தில் யார் பணியாற்றுவார்கள்? யார் செயலாற்றுவார்கள்? என்பதை தெரிந்து, அவர்களைக் கண்டுபிடித்து அனுப்புவோம். அவ்வாறு தேடிக் கண்டுபிடித்து அனுப்பக் கூடியவர்களில் மிக முக்கியமான ஒருவர் நம்முடைய ஐ.சி.எப். முரளி.

நான் முரளியை சொல்வதைப் பார்த்து, நாகராஜன் கோபித்துக் கொள்ளக் கூடாது. நாகராஜனும் இங்கு அமர்ந்திருக்கிறார். அவரும் சளைத்தவர் அல்ல. இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு இந்தத் தொகுதியில் பணியாற்றுகிற காரணத்தினால்தான் நான் இந்த தொகுதியில் நல்ல பெயரை வாங்கிக் கொண்டிருக்கிறேன். கொளத்தூரில் ஒரு செல்லப் பிள்ளையாக – அனைவரும் விரும்பும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக, எனக்கு இந்தப் பெயர் கிடைத்திருக்கிறது என்று சொன்னால், அது தனிப்பட்ட ஸ்டாலினால் அல்ல; முரளி போன்றவர்கள், நாகராஜன் போன்றவர்களின் உழைப்பினால்தான் இது கிடைத்திருக்கிறது. அதை நான் என்றைக்கும் மறந்துவிட மாட்டேன்.

எனவே, அந்த நன்றி உணர்வோடுதான், இந்தத் திருமணத்தை பொருத்தவரையில், இதை நம்முடைய வீட்டுத் திருமணமாகக் கருதி இந்த மணவிழா நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதற்காக வந்திருக்கிறேன். உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்த்துகிறேன். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், ”வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” இருந்து மணமக்கள் வாழ்க… வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

அதே நேரத்தில் மணமக்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, மணமகன் பெயரை, மணமகள் பெயரை நான் பார்க்கிறபோது, எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்ப் பெயர்களாக இல்லை. இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். அதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.

குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறபோது, உடனடியாக அதில் நீங்கள் இறங்கிவிட வேண்டாம். பொறுத்து, நிதானமாக – அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்பது குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரம். அதை நாம் தொடர்ந்து கடைபிடித்த காரணத்தினால்தான், இன்றைக்குத் தொகுதி மறுசீரமைப்பு வருகிறபோது, நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மும்மொழிக் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இருமொழிக் கொள்கைதான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்லும் ஆற்றல் நாம் பெற்றோம். ஐந்தாயிரம் அல்ல, பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் நாங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதில் கையெழுத்து போட மாட்டேன் என்று நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன்.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.



By admin